Tuesday, May 28, 2013

கடவுள் இருக்கிறாரா? இல்லையா??

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே இந்தப் பிரச்சினையைச் சந்தித்து வருகிறேன். நான் சமய வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவன். என் நண்பர்கள் பெரும்பாலானோர் கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள். எனக்கு அவர்களது மத நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு அவர்கள் முயல்வதே எனது நெருடலான பிரச்சினை. கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி, ‘கடவுள் இல்லாட்டி இந்த உலகம் எப்டி உருவாச்சு?’. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற விவாதமே தேவை இல்லை என்று நினைக்கிறேன். மதங்கள் தேவையா? மத வழிபாடுகள் தேவையா? என்பது எனது கருத்து. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் நாகரிகமும், கலாச்சாரமும் வளர்ந்து கொண்டே (மாற்றமடைந்து கொண்டே) வந்திருக்கிறது. மனிதனிடம் நீதி போதனையை(அறவழியை) ஏற்படுத்தப் பட்ட ஒரு அமைப்பே மதம் என்று கருதுகிறேன். அவர்களைப் பின்பற்ற வைக்க மறுமை என்ற ஒரு விஷயத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் கிட்டத்தட்ட அவர்களை மிரட்டி அந்த போதனைகளை பின்பற்றச் செய்வதே அதன் வேலையாக இருந்து வந்திருக்கிறது.

Kohlsberg’s theory of moral development-ல் சொல்லப்படும் Preconventional level of maturity கொண்ட மனிதர்களைப் பின்பற்றச் செய்கின்றன. அதாவது இந்த மனிதர்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், தங்கள் நலனுக்காகவும் மட்டுமே நீதி போதனையைப் பின்பற்றுவர். இந்த நிலையில் பெரும்பாலும் குழந்தைகளும், சில பெரியவர்களும் இருப்பர். வேதங்கள் இவர்களுக்கெனவே எழுதப் பட்டிருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. மேலும் மதங்களும் வேதங்களும் ஏன் இடத்திற்கு இடம் வேறுபட வேண்டும்? கடவுள் இந்தப் பிரபஞ்சத்திற்கு பொதுவானவர் என்றால் எல்லோருக்கும் பொதுவாக எழுதாமல் ஏன் ஒரு குறிப்பிட்ட மொழியில், குறிப்பிட்ட பகுதி மக்களுக்காக எழுதி இருக்க வேண்டும்? மேலும் வேதங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு மனிதனை மையமாகச் சித்தரிக்கின்றன. 

இந்தப் பிரபஞ்சத்தைப் பொறுத்த மட்டில் பூமியும், மனிதனும் ஒரு பொருட்டே இல்லை. ஒரு மிகச் சிறிய புள்ளி. மேலும் இந்த ஆத்திகர்கள் ஸ்டீஃபன் ஹாக்கிங் மற்றும் கமல் ஹாசனை நாத்திகர்களுக்கு பிரதிநிதிகளாகக் கருதிக் கொண்டு அவர்களின் கருத்தைத் தவறென்று நிரூபித்தால் மத நம்பிக்கையை மற்றவர்களிடம் ஏற்படுத்திவிட முடியும் என்று நினைக்கின்றனர். அவர்கள் கூறும் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்று இல்லை. அவர்களின் கேள்விக்கே அவர்களிடம் பதில் இல்லை என்பதே உண்மை. ஆன்மீகத்தில் அறிவியல் என்ற பெயரில் அவர்கள் சொல்லும் அறிவியல் நகை ஏற்படுத்துகிறது. வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் வசனங்களை அவர்களுக்கு ஏற்றாற்போல் திரித்துக் கூறி விட்டு அடுத்த வசனங்களில் வரும் முரண்களைச் சமாளிக்கத் தெரியாமல் திணறுகின்றனர்.

மதங்களைப் பரப்ப நினைப்பவர்கள் முதலில் அதன் வேதத்தை குறைந்தபட்சம் முழுதாக படித்துவிட்டாவது வாருங்கள். அறிவியல் பற்றிப் பேசும் முன் அதன் அடிப்படை தெரிந்து விட்டு வாருங்கள். ‘எல்லாம் வல்ல இறைவன்’, என்றால் அவருக்கு அளவில்லா சக்தி இருக்கிறது என்று பொருள். அப்படியிருக்க, அவரது வேதத்தை அவர் படைத்ததாகக் கூறப்படும் மனிதர்களை அவரால் ஏன் பின்பற்றச் செய்ய இயலவில்லை. இதற்கு வேறு யாரவது விளக்கம் சொல்வார்கள் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் நீங்கள் எதை வைத்துப் பின்பற்றுகிறீர்? சகோதரி ஹன்சா சொன்னது போல், ‘எனது மதத்தைப் பிறர் தலையில் திணித்தால் தான் எனது மதத்திற்கு விசுவாசமாக இருக்கிறேன்’ என்று பலர் நினைக்கின்றனர். 

ஏகப்பட்ட சந்தேகங்கள் உள்ளன. நான் இரண்டாண்டுகளுக்கு முன்பே எனது கேள்விகளை ஒரு புத்தகமாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். மேற்கோள்களுடன் எழுதுவதே சிறந்தது. அதற்காக அல்-குரான், புனித பைபிள் மற்றும் இந்து சமய வேதங்களைப் படிக்கத்(அறிந்து கொள்ள) தொடங்கி இருக்கிறேன். வரலாறு, நாகரிகம், கலாச்சாரம், மொழிகளின் தோற்றம், மதங்களின் தோற்றம் மற்றும் பரவல், அறிவியல் வளர்ச்சி, உலகத்தின் அதிசய நிகழ்வுகள், மனோதத்துவம் பற்றி புரிந்து கொண்டால் மதங்கள் தேவையா? இல்லையா? என்பதை முடிவு செய்யலாம் என்று நம்புகிறேன். 

எது எப்படியாக இருந்தாலும், தசாவதாரம் திரைப்படத்தில் கமல் ஹாசன் கூறுவது உண்மை தான்.‘யானைக்கும் சரி; மனிதனுக்கும் சரி; மதம் பிடித்துப் போனால் தொல்லை தான்’.

No comments:

Post a Comment