Wednesday, May 29, 2013

அவளுக்காக ஒரு காதல் கவிதை

கையில் கலைஞரின் 'மீசை முளைத்த வயதில்' புத்தகம். படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருக்கும் பெயர் தெரியாத அந்த அண்ணனின் புத்தகத்துடன் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தான் ரூபன். அந்த அண்ணன் புளியங்குடி மனோ கல்லூரியில் படிக்க வேண்டும். இவனும் புளியங்குடி நாடார் மேல்நிலைப் பள்ளியில் தான் படிக்கிறான். புத்தகத்தைத் திறந்தான். அதுவரை புத்தகம் படித்துப் பழக்கமில்லை என்பதால் முன்னுரையைப்  புறக்கணித்து நேரடியாகக் கட்டுரைக்குச் சென்றான்.

கவிதை நடையில் ஒரு உரைநடை. அந்த நடையில் அதில் சொல்லப்பட்ட பொருளைச் சற்றும் பொருட்படுத்தாமல் அவளைப் பற்றியே நினைக்கலானான். காதலுக்காக மட்டுமே கவிதையை நாடும் சமுதாயத்தில் இவனும் விதிவிலக்கல்ல. ஒவ்வொரு வரி வாசிக்கும் போதும் அவள் ஞாபகத்திலேயே லயித்திருந்ததால் புளியங்குடி அடைவதற்குள் இரண்டு பக்கங்களைக் கூட தாண்டவில்லை. பள்ளியிலும் அவளது நினைப்போடு தான் அன்றைய தினம் கழிந்தது. 

மாலை பள்ளி முடிந்து வீடு வந்ததும் ஆடை மாற்றிக் கொண்டு வானுவர் தெருவில் இருக்கும் நூலகத்திற்குச் சென்றான். மாடியில் இருக்கும் நூலகத்திற்குள் காலணியைக் கழற்றி விட்டு உள்ளே நுழைந்தான். அன்றைய நாளிதழ்களையும், வார இதழ்களையும் வாசித்துக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தவுடன் அவனுக்கு டீக் கடை ஞாபகம் தான் வந்தது. 

புத்தகங்களின் பட்டியலைப் பெற்று அந்தப் புத்தகத்தைத் தேடினான். கிடைக்கவில்லை. பின்பு ஏதாவது ஒரு கவிதைப் புத்தகத்தைப் படிக்கலாம் என்று தேடினான். வைரமுத்து, சுஜாதாவைத் தவிர வேறு எந்த எழுத்தாளரின் பெயரும் பரிட்சயப்படாதவை. அவர்களும் சினிமாவோடு தொடர்புடையவர்கள் என்பதால் தான் அவர்களை அறிந்து இருந்தான். பின்பு வைரமுத்துவின் 'எல்லா நதியிலும் என் ஓடம்' புத்தகத்தைத் தேடி எடுத்துப்  படிக்கத் தொடங்கினான். புத்தகத்தில் இருந்த கவிதைகளில் தனக்குப் புரியும்படியான கவிதையைத் தேடினான். 

'நீ 
பிரிந்துவிட்டாய் 
என் அன்பே!

காதலெனும்
வாணலியில்  வறுபடுகிறது 
என் 
இதயமெனும் இறைச்சித்துண்டு'

-என்ற கவிதை அவனைக் கவனிக்க வைத்தது. அவனது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்த கவிதை.

மேலும் கிடைத்த சில கவிதைகளை ஒரு துண்டுத் தாளில் எழுதி வைத்துக் கொண்டு கிளம்பினான். வீடு திரும்பும் வழியில் அவளுக்கென்று ஒரு கவிதை எழுதி விட வேண்டுமென்று முடிவு செய்து கொண்டான். இவன் கவிதை எழுத நினைப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

ஆர்குட்டும் பேஸ்புக்கும் கடையநல்லூரின் கலாச்சாரத்தில் நுழையாத காலம் என்பதால் வலையில் வலை வீசிப் பெண்களைத் தேர்வு செய்ய இயலாது. பள்ளியிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வகுப்புகள் தனித்தனி பகுதியில் இருக்கும் என்பதாலும், வெளி இடங்களிலும் ஆண்-பெண் பேசிப்  பழக முடியாது என்பதாலும்  பள்ளிக்கு செல்லும் வழியிலும், கோயில்களிலும் தான் இங்கு காதல் வளரும்.

ரூபன் வீடு கண்ணார் தெருவில் இருக்கிறது. தினமும் பள்ளிக்குச் செல்ல பேருந்து நிலையத்திற்கு சைக்கிளில் வருவான். பேருந்து நிலையத்திற்கு வெளியில் தான் பள்ளிப் பேருந்திற்குக்  காத்துக் கொண்டிருப்பாள் அவள். பெயர் லோகநாயகி. அவனது பல நாள் உறக்கத்தைத் தின்றவள். குற்றாலத்தில் ஹில்டன் மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கிறாள். ரூபன் வரும் வழியில் நகராட்சி பூங்காவிற்கு அருகில் தான்  அவளது வீடு இருக்கிறது. அவள் வரும் நேரத்தைக் கணக்கில் கொண்டு தான் வீட்டிலிருந்து கிளம்புவான்.

பருவத்தின் விளையாட்டால் அவள் மீது காதல் கொண்டான். காதல் இயற்கையிலேயே தோன்றும் என்றாலும் சினிமா, மெல்லிசைப் பாடல்கள்  மற்றும் கவிதைகள்(!) அவனது காதலுக்கு வினையூக்கிகளாகச்(catalyst) செயல்பட்டன. அவனது ஏக்கத்தைக் கிளர்ந்தெழச் செய்தன. அவன் என்ன செய்வான்? தமிழ் சினிமாவில் காதல் கதைகளை மட்டுமே படமாக எடுத்தது அவனது குற்றமல்ல. இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் காதல் இசைகளைக் காதல் செய்தான். வாலி மற்றும் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு அடிமையானான்.

தினமும் பவுடர் பூசி, தலையில் 'ரெட்டை ஜடை' பின்னி, பூ வைத்து, சிறிதாக சாந்து போட்டு வைத்திருப்பாள். தலையில் வைத்த எண்ணெயும் வியர்வையும் நெற்றியின் மேல் பகுதியில் ஒரு இஞ்ச் அளவிற்கு பவுடரை அழித்து இருக்கும் அழகை விளக்கி கவிதை எழுதி விட வேண்டும் என்றிருக்கும் அவனுக்கு. அவளைப் பற்றி அவனது கவிதை நடையில் சுருக்கமாகச் சொன்னால் 'அவளொரு பவுடர் போட்ட பௌர்ணமி'.

தோளில் ஒருபக்கமாக புத்தகப் பை(bag) மாட்டியிருப்பாள். இருந்தும்  இரண்டு நோட்டுகளை வெளியில் எடுத்து முன்னழகை மறைத்துக் கொண்டு ஷூவின் நுனியைப் பார்த்துக் கொண்டே நடப்பாள். கரண்டைக் காலுக்கு மேலேயே நின்று விடும் குட்டையான பேண்ட்(pant), ஷாக்சின்(shocks) வெளிப்புறமாக மாட்டியிருக்கும் வெள்ளிக் கொலுசை எடுத்துக் காட்டும்.

கொஞ்ச காலத்தில்  அவள் சைக்கிள் வாங்கி விட்டாள். பி.எஸ்.ஏ. லேடி பேர்ட் சைக்கிள். அவள் சைக்கிள் ஓட்டும் அழகையும் ரசிக்கத் தொடங்கினான். கேரியரில் புத்தகப் பையை வைத்துக் கொள்வாள். சைக்கிள் ஓட்டும் போது விலகும் டாப்ஸைச்(tops) சரிசெய்து கொண்டே அட்டேன்ஷன்(attention)  நிலையிலேயே ஓட்டிச் செல்வாள். சீரான வேகமும் நேரான பாதையும்(path) அதற்கு மேலும் ஆழகூட்டும்.

இவன் பின்தொடர்வது கண்டிப்பாக அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இருந்தும் கண்டுகொள்ளாதபடி இருந்தாள்.கரிய மாணிக்கப் பெருமாள் கோவில் தேரோட்டத்தின் போது, தேரடி வீதியில் இவனைக் கை காட்டி அவளது தோழிகளிடம் அவள் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்து இருக்கிறான். இருந்தும் அவளை எப்படி அணுகுவது என்ற தயக்கம் இருந்தது. மேலும் யாரும் பார்த்து விட்டால் பெரிய பிரச்சினை எழுந்துவிடக்  கூடும் என்பதால் முயற்சி ஏதும் செய்யவில்லை.

பல நாட்கள் நூலகத்தில் தவம் கிடந்ததன் விளைவாக, 'கவிதை எழுதுவது எப்படி?' என்பதை இவனளவில்(!) புரிந்து கொண்டான். சொல்லும் வாக்கியத்தில் வார்த்தைகளை முன்னும் பின்னும் மாற்றி அமைத்து, வாக்கியத்தை மடக்கிப் பல வரிகளில் எழுதி, மூன்று புள்ளி மற்றும் ஒரு ஆச்சர்யக் குறி(!) வைத்தால் கவிதை என்று புரிந்து கொண்டான். 

ஒரு நாள், பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்த போது அவளது பார்வை இவன் மீது இருப்பதைக் கவனித்தான். அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். இவனது பார்வைக்கு அவள் புன்னகையைப் பதிலளித்தாள். கிளர்ந்தெழுந்த அவனது உணர்வுகள் அவனது காதலை அவளிடம் சொல்லிவிட உந்தித் தள்ளியது. தன் காதலை கவிதையாக எழுதி மறுநாளே கொடுத்து விட முடிவு செய்தான்.

அந்தக் கணம் முதல் சிந்திக்கத் தொடங்கினான். பக்கங்கள் பல கிழிந்தன. கடைசியாக,

'கற்பனையில் 
காமம் கொண்டு
களித்திருந்தவன் நானடி!
எனக்கு 
காதலைக் கற்றுத் தந்தவள் நீயடி!!
கணிதவியல் 
மாணவனாக 
இருந்தவன் நானடி!
உந்தன் 
கனவியல் மணவாளனாக்கியவள் நீயடி!!'

- என்று ஆரம்பித்து நான்கு பக்கங்களில் தனது காதலைக் கொட்டித் தீர்த்தான். முடிவில்,

'இப்படிக்கு,
இன்று கவிஞன்; 
நாளை உந்தன் கணவன்.' -என்று முடித்தான். 

பலமுறை திருத்தம் செய்து, அழகான கையெழுத்தில் தெளிவாக எழுதி, நான்காக மடித்துப் புத்தகப் பையில்   வைத்துக் கொண்டான். இரவு முழுவதும் அவளிடம் எப்படி கொடுப்பது? என்று கற்பனையில் ஒத்திகை செய்து பார்த்தான். மறுநாள் விடிந்தது. புறப்பட்டான். அவளைத் தொடர்ந்து சென்றான். இருவரும் பேருந்து நிலையத்தை அடைந்து சைக்கிள் ஸ்டாண்டில் வண்டியை நிறுத்தினர்.

பையில் இருந்து கடிதத்தை எடுத்துச் சிறிது யோசித்தவன் கடிதத்தைச் சட்டைப் பையினுள் வைத்தான். தான் எந்தச் சாதியைச் சேர்ந்தவன் என்று தெரிந்தால் அவள் நிராகரித்து விடுவாளோ? என்ற பயம் அவனுக்குள்  திடீரென்று தோன்றியது. இத்தனை நாட்கள் இந்த எண்ணம் அவனுக்குத் தோன்றியதே இல்லை. தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தான். வெளியே வந்த இருவரும் பேருந்திற்காகக் காத்திருந்தனர். இவனது வித்தியாசமான செய்கைகளை ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் கவனித்துக் கொண்டிருந்தாள்.

அவளது பள்ளிப் பேருந்து வந்தது. இவனைப் பார்த்துக் கொண்டே ஏறினாள். எதிர்பார்ப்பு அவளது கண்களில் தெரிந்தது. அவளை இழக்கப் போவது போன்ற எண்ணம் இவனுக்குள் ஏற்பட்டது.வண்டியும் நகர்ந்தது.  சிறிது நேரத்தில் இவனுக்கும் பேருந்து வந்தது. ஏறி இருக்கையில் அமர்ந்தான்.

கடிதத்தைக் கையில் எடுத்துப் பார்த்தான். இந்தக் கடிதத்தைக் கொடுக்க இன்னொரு சந்தர்ப்பம் கண்டிப்பாக அமையும். அனால் அவளை அடையும் சந்தர்ப்பம் கண்டிப்பாக அமையப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டான்.. கீழ் சாதிப் பையனைக் காதலிக்கும் பெண்ணைக் கொல்லவும் தயங்காத சமுதாயத்தில் பிறந்ததை எண்ணி நொந்து கொண்டான். கண்ணில் தேங்கிய நீர் சிந்தாமல் இருக்க மேலேயே பார்த்துக் கொண்டிருந்தான். ஜன்னல் வழியே வீசிய வாடைக் காற்று கண்ணீரைக் கீழிறக்கி விட்டுச் சதி செய்தது.

கடிதத்தை எடுத்து மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்த்தான். 'நாளை உந்தன் கணவன்'. இதை எழுதுவதற்கு அசட்டு தைரியம் எங்கிருந்து வந்தது என்று அவனுக்கு வெறுப்பாக இருந்தது. கடிதத்தைக் கிழித்துப் போடவும் மனமில்லை.  மடித்து சட்டைப் பையில்  வைத்துக் கொண்டான். தன் வாழ்வில் காதலே முடிந்து போய்விட்டது என்று நினைத்துக் கொண்டு சன்னல் வழியே  பின்னால் நகரும் மரங்களைக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தான், கலியுகக்  காதல் வரலாறுகளை அறியாமல்!

No comments:

Post a Comment