Saturday, September 21, 2013

நறுமுகையே நறுமுகையே


நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்....என்ற பாடல் பலருக்கும் விருப்பமான பாடலாக இருக்கும் இலக்கியச் சுவை ததும்பும் அந்தப் பாடலை அதன் பொருளோடு பார்க்கலாம் பலரும் இப்பாடலை மேலோட்டமாக கேட்டிருக்க வாய்ப்பிருப்பதால் பொருளோடு எழுதுகிறேன்.

அதற்கு முன் அந்தப் பாடலின் அடிநாதமான இந்த குறுந்தொகைப் பாடலைப் பார்த்துவிடலாம்.

யாயும் ஞாயும் யாரா கியரோ 
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் 
யானும் நீயும் எவ்வழி யறிதும் 
செம்புலப் பெயனீர் போல 
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

அதற்கும் முன் பாடலுக்கான SITUATION ஐ பார்க்க வேண்டும்.

குறிஞ்சி நிலத்தில் ஒரு தலைவனுக்கும், அவனுக்கு சற்றும் தொடர்பே இல்லாத தலைவிக்கும் இடையே காதல் மலர்கிறது காதல் கலவி வரை நீள்கிறது. கலவி நீங்கி தலைவன் தலைவியை விட்டுப் பிரியப்போகிறான் அப்போது தலைவி அவனிடம், "என்னை விட்டு நீ பிரியப்போகிறாய் நமக்குள் கலவி நிகழ்ந்துவிட்டதால் இனி என்னை திரும்பி அழைத்துச்செல்ல வரமாட்டாய்............ திரும்பி வரமாட்டாய்.........," இப்படி அழுது புலம்புகிறாள். அதற்கு தலைவன் தலைவியிடம் நான் உன்னைப் பிரியமாட்டேன் என சமாதானம் சொல்லும் தலைவனின் கூற்றுதான் இந்தப் பாடல்.


யாயும் - என்னுடைய தாயும், ஞாயும் - உன்னுடைய தாயும், யாராகியரோ - யார் யாரோ (ஒருவரை ஒருவர் அறிந்திலர்)

எந்தையும் - என்னுடைய தந்தையும், நுந்தையும் - உன்னுடைய தந்தையும், எம்முறைக் கேளிர் - எந்த முறையில்(உறவுமுறையில்) ஒருவருக்கு ஒருவர் சொந்தக்காரர்கள் (சொந்தக்காரர்கள் இல்லை)

யானும் நீயும் - நானும் நீயும், எவ்வழி யறிதும் - எப்படி ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டோம் (இப்படி சம்பந்தமே இல்லாத நீயும் நானும் ஒருவரி ஒருவர் தெரிந்துகொண்டு )

செம்புலப் பெயனீர் போல - செம்மண் நிலத்தில் மழைநீர் கலந்தது போல
(பிரிக்க முடியாத படி)
அன்புடை நெஞ்சம் - நம் இருவரின் அன்பு கொண்ட நெஞ்சங்கள், தாங்கலந் தனவே - ஒன்று கலந்தனவே (நமது நெஞ்சங்கள் ஒன்று கலந்தனவே).

குறுந்தொகைப் பாடலைக் குறிப்பிட்டதால் அதே பாடலை கிண்டல் செய்யும் மீராவின் கவிதையையும் பார்த்துவிடலாம்.

நவயுவக் காதல்

எனக்கும் உனக்கும்
ஒரே ஊர்
வாசு தேவ நல்லூர்....

நீயும் நானும்
ஒரே மதம்....
திருநெல்வேலி
சைவப் பிள்ளைமார்
வகுப்புங் கூட....

உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்
மைத்துணன்மார்கள்.....

எனவே செம்புலப்
பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே!

-------------------------------------------------

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
நறுமுகையே ("நறுமுகை" மலர் போன்றவளே) நீ சற்றுநேரம் நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
சிவந்த கனி ஊறியது போன்ற உன்வாயால் இனிய சொல்லொன்று சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய  
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)
அன்றொரு பௌர்ணமி நிலவில் (இரவில்) நெற்றியினின்று திரண்ட நீர் வடிய கொற்றப்பொய்கை நடனம் (ஒருவகை வெற்றியைக் கொண்டாடும் நடனம்) ஆடியவள் நீதானே?
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
மன்மதனே (திரு + மகனே - இலக்குமியின் மகனே) நீ சற்றுநேரம் பாராய்.
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
வெள்ளைக் குதிரையில் வந்தவனே இந்த வேல்போன்ற விழியுடையவள் சொல் கேள்.
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா(2)
அன்றொரு பௌர்ணமி நிலவில் (இரவில்) நான்
கொற்றப்பொய்கை நடனம் ஆடுகையில் ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா?
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பாண்டினாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன
பாண்டினாடனைக் கண்ட என் மனம் பசலை ((அவனை அடைய முடியாதலால்) சஞ்சலம் (அ ) மன உளைச்சல்) கொண்டதென்ன
குறிப்பு:பசலை என்ற நோய் உடலில் மஞ்சள் அல்லது வெள்ளைநிறத் தேமலையும் உடல் மெலிவையும் குறிக்கும்.இங்கு மனம் பசலை கொண்டது என்றதால் மன சஞ்சலமாகக் கொள்க.
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் (2)
நிலவொளியில் கண்ட உன் முகம் கனவில் மறுபடிமறுபடி தோன்றும்.
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை

(உடல்) இளைத்தேன் (மனம்) துடித்தேன் (என்னால் காம நோயைப்) பொறுக்கமுடியவில்லை
என் இடையில் (இடுப்பில்) அணிந்திருந்த மேகலை ( மணிகளால் கோர்க்கப்பட்ட இடுப்பு  ஆபரணம்) இடுப்பிலே நிற்கவில்லை

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அன்னினவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)

யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
 என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார்  யாரோ ஆனால் இப்பொழுது நடந்தது என்ன? (இருவரும் உறவுகள் ஆயினர்)

யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
நானும் நீயும் முன் பின் அறியாதவர்கள் ஆயினும் நம் உறவு சேர்ந்ததென்ன


ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன
 நீ தீண்டிய ஒரே தீண்டலில் உயிர்க்கொடி பூத்ததென்ன
செம்மண் நிலத்தில் மழைநீர் கலந்தது போல நம் இருவரின் அன்பு கொண்ட நெஞ்சங்கள், ஒன்று கலந்தது  எப்படி?

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்ப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)
.......................

"இடையில் மேகலை இருக்கவில்லை" என்ற வரியை தற்ச்செயலாக கேட்டு அதன் பொருள் தேடி, உணர்ந்து மலைத்துவிட்டேன் என்றே சொல்லலாம்.
இதுபோன்று குறுந்தொகையில், திருக்குறளில் இன்னும் சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் உள்ளன அதாவது ஆசை நிறைவேறாது உடல் மெலிந்தது பற்றிய பாடல்கள். அனால் ஆசை நிறைவேறும் என்பதால் உடல் பூரித்ததாக நான்படித்த இந்தக் கம்பராமாயணப் பாடலோடு முடிக்கிறேன்.  




முந்தயநாள் கோதம முனியுடன் வந்த
ராமனைக் 'கண்டதும் காதல்'கொண்ட சீதை, சுயம்வரத்தில் வில்லை இன்று யார் முறித்தது என்று ஐயத்தோடு காத்திருக்க, அவள் தோழி வந்து சேதிசொல்கிறாள். விவரித்த பின்னர்................

கோமுனி உடன்வரு கொண்டல் என்றபின்,
தாமரைக் கண்ணினான் என்ற தன்மையால், 
'ஆம் அவனே கொல்!' என்று ஐயம் நீங்கினாள்,
வாம மேகலை இற வளர்ந்தது அல்குலே.

கோதம முனியுடன் வந்த கார்மேகம் போன்றவன் என்றதும், தாமரை போன்ற கண்களை உடையவன் என்றதும் (என்று அவள் தோழி கூறியது கேட்ட சீதை) ஆம் அவன்தான் (ராமன்தான்) என்று சந்தேகம் நீங்கினாள், (அதனால் சந்தோசத்தில் உடல் பூரித்ததால்) அவள் அணிந்திருந்த அழகிய இடையணியான மேகலை அறுந்து விழுமாறு சீதையின் இடை பெருத்தது.

உணர்ச்சியுடன் தொடர்புடைய உடல்,மன மாற்றங்களைக் கூறும் அழகிய பாடல்கள் பல தமிழில் உள்ளன படிக்கத்தான் ஆளில்லை.........


(இவையனைத்திற்கும்
முழுக்க முழுக்க என்னுடைய சொந்தப் பார்வையில் பொருள் எழுதியிருப்பதால் இதில் பிழைகள் இருந்தால் சுட்டிகாட்டவும்)

No comments:

Post a Comment