Tuesday, June 25, 2013

பொருள்படும்படி

'படித்தல்' என்ற சொல்லே மிகவும் பழுதுபட்டிருப்பதாகக் கருதுகிறேன். பழுதுபடுத்தியத்தில் முக்கியப் பங்கு நமது பெற்றோர்களையே சாரும். 'படி' என்று சொன்னாலே உங்கள் மனதிற்குத் தோன்றுவது, தேர்வின் பொருட்டு மனனம் செய்வதாகவோ அல்லது அது சார்ந்ததாகவோதான் நினைக்க வரும். நான் இங்கு கூறும் படித்தல் என்பது மேலே சொன்ன மனனம் இல்லை. பொருள் சேர்க்கும் நோக்கில் கல்வியைத் தொலைத்துவிட்ட நம் சமுதாயத்தில் படித்தலை வெறும் வார்த்தைகளால் விளக்கிவிட நினைப்பதே பெரிய மூடத்தனம். இருப்பினும் சுருக்கமாகச் சொன்னால் படிப்பு என்பது நம் ஆர்வத்தால் எழும்பும் கேள்விகளால் அது சார்ந்த நூல்களை வாசித்துப் புரிந்துகொள்வதும் ஒருபடி மேலே சொன்னால் உணர்ந்துகொள்வதும் ஆகும்.

சரி படிப்பதை எதைப் படிக்க வேண்டும் எப்படிப் படிக்க வேண்டும் என பாரதிதாசனின் வார்த்தைகளில்.....

நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப்படி - முறைப்படி
நூலைப்படி

காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி ( நூலைப் )

கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டும்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி ? ( நூலைப் )

பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகமே ஏமாறும்படி
வைத்துள நூல்களை ஒப்புவதெப்படி ? ( நூலைப் )

தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி ( நூலைப் )

காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி.........

அது என்ன 'பொருள்படும்படி' இதற்கு பலர் பல விளக்கம் தரலாம் அனால் என்னைப் பொருத்தவரையில் அதன் பொருள் "வாசிக்கும் பொழுதே அந்தப் பாட்டின் பொருள் விளங்குமாறு வாசிக்க வேண்டும்" என்பதே.

ஒரு எடுத்துக்காட்டுடன் இதைப் பார்க்கலாம்.
எல்லோர்க்கும் தெரிந்த ஒரு திருக்குறள்

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.

(பிரித்து எழுதினால்)

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

இந்தக் குறள் பலருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் அதன் பொருள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை காரணம் 'பொருள்பட' படிக்காததுதான் என்பேன் நான். இத்தனைக்கும் மிகவும் எளிய வார்த்தைகளைக் கொண்டு எழுதப்பட்ட குறள் இது

அஞ்சு - பயப்படு
பேதைமை - முட்டாள்த்தனம்
அறிவார் - அறிவுடையோர்

இதற்குமேல் கடினமான சொற்கள்
இதில் பயன்படுத்தப்படவில்லை.
எனினும் அதன் பொருள் நமக்கு எட்டாமல்
இருப்பதற்கு அதனைப் படிக்கும் முறையை நாம்
தவறாகக் கையாண்டிருப்பதே முதற்க் காரணம்

நாம் இதை வாசித்த விதம் இப்படித்தான் இருந்திருந்திருக்கும்.

(மேற்கோள் குறிக்குள் உள்ளதைத் தொடர்ந்து இடைவிடாமலும் அடுத்த வரிக்கு நன்றாக இடைவெளிவிட்டும் வாசித்திருப்போம்)

"அஞ்சுவதுஅஞ்சாமைபேதைமை"
"அஞ்சுவது"
"அஞ்சல்அறிவார்தொழில்"

இப்படி வாசித்து, மனனம் செய்து, அதைத் தேர்விலும் எழுதி, இரண்டு மதிப்பெண்களும் வாங்கியிருப்போம். ஆனால் பொருள் விளங்க இதை எப்படிப் படித்திருக்க    வேண்டுமென்று பார்க்கலாம்

"அஞ்சுவதுஅஞ்சாமை பேதைமை"
"அஞ்சுவதுஅஞ்சல்"
"அறிவார்தொழில்"

(அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சாமல் இருப்பது
முட்டாள்த்தனம்)
(அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சுதல்)
(அறிவுடையவர் தொழில்)

என்றாக 'பொருள்படும்படி' (வாசித்திருந்தால்) படித்திருந்தால் இந்தப் பாடலை ரசித்தே படித்திருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் புரிந்தாவது படித்திருக்கலாம்.

இதேபோன்ற மற்றுமொரு குறள்

உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

இதைப் நாம் படித்தமுறை

உதவிவரைத்தன்று
உதவிஉதவி
செயப்பட்டார்சால்பின்வரைத்து

சிலர் ஒருபடி மேலே சென்று அதன் சீர் பிறழாமல்
'றுதவி உதவி' என்றே மனனம் செய்திருப்போம்

உதவிவரைத்தன்றுஉதவி
உதவி
செயப்பட்டார்சால்பின்வரைத்து

(உதவியின் பெருமை உதவியின் தன்மையைப் பொறுத்ததல்ல)
(உதவியானது)
(யாருக்கு செய்யப்பட்டதோ அவர் பண்பைப் பொறுத்தது)

ஒவ்வொரு செய்யுளையும் அதற்கேயுரிய சந்தத்திலும் பண்ணோடும் 'பொருள்படும்படியும்'படிக்கும் தமிழாசிரியர்கள் அருகிவிட்டதும், பாடத்திட்டம் என்ற எல்லை தாண்டிய வாசிப்பு மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் வளராததும் இலக்கியங்களின் இன்றைய நிலைமைக்கு முக்கியக் காரணங்கள்.

நீதி நூல்கள்,கவிச்சுவை மிகுந்த காவியங்கள், உயர்ந்த கற்பனை உடைய பாடல்களைக் கற்றும், அதன் சிறப்பை உணராமலும் ரசிக்கமுடியாமலும் இருப்பது தமிழுக்கும் நமக்கும் நாம் செய்யும் மாபெரும் தீங்காகவே நான் கருதுகிறேன்.ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் படித்தும் கடைசிவரை ஒரு இலக்கியத்தைக்கூட நம்மால் முழுமையாக ரசிக்கவே முடியாதவாறு ஆகிவிட்டது என்பதுதான் உச்சகட்ட சோகம். இனிவரும் பகுதிகளில் சங்க இலக்கியங்களில் இருந்து இன்றைய இலக்கியங்கள்வரை எனக்குப் பிடித்ததும் நான் படித்ததுமான சில கவிதைகளை (செய்யுள்களை) விவரிக்க விரும்புகிறேன்.

3 comments:

  1. "நூலைப்படி‌‌"- இப்பாடல் எத்தொகுதியில் உள்ளது?

    ReplyDelete
  2. நூலைப்படி‌‌"- இப்பாடல் எத்தொகுதியில் உள்ளது?

    ReplyDelete