Saturday, March 31, 2012

மழை


பன்னீர் தூவும் மழையினைக் கண்டு
வெந்நீர் காலில் ஊற்றினார் போல
விரைந்து ஒளிந்து ஓடுதல் ஏனோ?
பயந்து குடையில் பதுங்குவ தேனோ??

கண்ணில் மின்னல் வாங்கிக் கொள்வோம்
தோளில் இடியைத் தாங்கிக் கொள்வோம்
கையில் சாரல் பற்றிக் கொள்வோம்
மடியில் மழையை ஏந்திக் கொள்வோம்.

விண்ணும் மண்ணும் புணரக் காண்போம்
மலையும் மழையும் குலவக் காண்போம்
மரமும் செடியும் மகிழக் காண்போம்
தோகை மயிலும் ஆடக் காண்போம்.

அரைநொடி மின்சாரம் பாய்ந்தது போல
உடலினைச் சிலிர்க்கும் மழையதன் ஸ்பரிசம்.

சுவையிலா தென்று சிலரதைச் சொல்வார்
மழையதன் துளியோ தேனினும் நன்று.

இரவினில் ஒருநொடி சூரியன் தோன்றும்
யாதெனப் பார்த்தல் மின்னலின் கீற்று.

நெடுநாள் நண்பன் மழையது சென்றும்
வந்ததைச் சொல்லும் மண்ணின் வாசம்.

தரையினில் சுவரில் வீட்டினின் ஓட்டில்
மழையே பாடும் இடிதாளமும் போடும்.

ஐம்பொறி தன்னில் அமுதினை யூட்டும்
மழையினில் நனைவோம் உயிரினை உணர்வோம்!!!


No comments:

Post a Comment