Tuesday, June 25, 2013

தகுந்தன தப்பிப் பிழைத்தல்

தலைப்பைப் பார்த்து குழம்பிவிட வேண்டாம். சார்லஸ் டார்வினின் 'பரிணாமக் கோட்பாட்டினுடைய' (Theory of Evolution) ஒரு கூற்றான ' Survival of the fittest' என்பதன் தமிழாக்கமே இது. மரபணு குறித்த எந்த விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் தனது அவதானிப்புகளின் மூலமாகவும் தொடர் ஆராய்ச்சிகளின் மூலமாகவும் அவர் உருவாக்கிய இந்தக் கோட்பாடு அறிவியல் உலகில் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.இந்தக் கோட்பாட்டை வைத்து ஆன்மீகவாதிகளுக்கும் அறிவியலார்க்கும் வாக்குவாதங்கள் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன (குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது தான்). 

தற்போதைய அறிவியலார்கள், இதில் இருக்கும் 'fittest' என்று அவர்- டார்வின்- குறிப்பிடும் அந்தத் 'தகுந்த இனம்' என்று எதுவும் இருக்க முடியாது; எல்லா இனங்களுக்கும் இந்த உலகில் வாழும் உரிமை இருக்கிறது என்பது போன்ற சில குறைகளை இந்தக் கோட்பாட்டில் கூறுகின்றனர்.

இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் மிதமிஞ்சிய இனப்பெருக்கத் திறனைக் கொண்டிருக்கின்றன. அனால் அதற்கேற்ற அளவு உணவு உற்பத்தி இருக்காது. எனவே அவை பிற உயிரினங்கோளோடு ( அதே இனம் அல்லது வேறு இனம்) ஒரு வாழ்க்கைப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் தேவையான மாறுபாடுகளைக் கொள்ளும் இனம் தப்பித்துக் கொள்ளும். இதுவே தகுந்தன தப்பிப் பிழைத்தல் என்பதாகும். இந்த மாற்றங்கள் மரபுப் பண்புகளின் வழியே கடத்தப் பட்டு அதன் சந்ததிகளும் அதன் பண்புகளைப் பெரும்.

இதில் ஒரே இனத்தில் நடக்கும் போராட்டம் மிகவும் ஆபத்தானது. அதுவும் குறிப்பாக மனித இனத்தில். ஏனெனில் அவை ஒரே மாதிரியான தேவைகளைக் கொண்டிருக்கின்றன. அவதானிப்புகளை வைத்துப் பார்க்கும் போது, இந்தப் போராட்டம் வெறும் உணவின் காரணமாக மட்டும் அமைவது இல்லை. உலகம் தொழில்நுட்பத்தாலும் பொருளாதாரக் கொள்கைகளாலும் சுருங்கிவிட்டதால் இந்தப் போராட்டம் பல காரணங்களுக்காக நடப்பதை நாம் அன்றாடம் காணலாம். தினமும் வீட்டிற்கு தாளில் அச்சாக மட்டுமே வந்து கொண்டிருந்த நாளிதழ்கள் தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்பட்ட போட்டியின் காரணமாக இணையங்களிலும் தங்களை நிறுவிக் கொண்டிருப்பது இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

அனால் இந்தத் 'தகுந்தன தப்பிப் பிழைத்தல்' என்பது நம்மால் எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டது என்பது முக்கியமானது. பெரும்பாலும் தம்முடைய பலத்தை முன்னிலைப்படுத்தி எவரும் பிழைப்பதில்லை. மாறாக பிறரது பலவீனத்தை முன்னிலைப்படுத்தி பிழைத்துக் கொள்வதே எங்கும் நடக்கிறது.

பெரும்பாலான 'பிரபல' படைப்பாளிகள் வளரும் படைப்பாளிகளை அங்கீகரிப்பது இல்லை. அவர்களது-பிரபலங்களது- வாய்ப்புகள் கேள்விக் குறியாகிவிடும் அல்லது தன்னை விடப் பெரியவன் ஆகிவிடுவான் என்ற எண்ணம் இதற்கு காரணமாக அமைகிறது. ஒரு மூத்த இசையமைப்பாளர் இது போன்ற ஒரு காரியத்தைச் செய்து பின்னர் வெளியே தெரிந்து  'குட்டு' பட்டது பலருக்கு நினைவிருக்கலாம்.

இப்போது எழுத்தாளர் உலகில் நடக்கும் ஒரு நிகழ்வையே இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.பெரும்பாலான எழுத்தாளர்கள் பிற(ரை) எழுத்தாளர்களை விமர்சித்தே தங்களுக்காக விளம்பரத்தைத் தேடிக் கொள்வது இன்றைய சூழலில் எங்கும் நடைபெறுகிறது. இதில் தாக்கப்படும் எழுத்தாளரும் பிரபலம் அடைகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.('விஸ்வரூபம்' பிரச்சினைக்கும் இது பொருந்தும்). மேலும் சமூக வலைத்தளங்களில் பதியப்படும் பல கருத்துகள் பிறரை விமர்சித்தே இருக்கின்றன என்பதும் காணக் கூடியதே.

பெண்கள் மீதான ஆண்களின் அடக்குமுறை என்பது ஆணினத்தின் ஆதிக்கத்தைக் கட்டிக் காக்க ஆணினம் முழுவதும் ஏதோ காரணங்களினால்  ஏதோ சந்தர்ப்பங்களில் பெண்ணினத்துடன் நிகழ்த்தும் போராட்டமே. இதனால் பெண்களின் குறைகளை முன்னிலைப்படுத்துவதும்  பெண்களின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதும்(திணிப்பதும்) ஆணினத்தின் பொதுப் புத்தி. மேலும் ஒரு பெண்ணோடு பழகும் பல ஆண்களிடம் ஒரு எண்ணம் பரவலாக இருப்பதைக் காணலாம். அந்தப் பெண்ணின் நம்பிக்கைக்குரியவனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு எழும் பிறரைப் பற்றிய தவறான விமர்சனங்களுக்கு இங்கு இடம் அதிகம். 

இன்னும் ஏராளமான உதாரணங்கள் இதற்கு சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றால் 'தகுந்தன தப்பி பிழைத்தல்' என்பது நம்மால் எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் அதற்கு நாம் பின்பற்றும் குறுக்கு வழிகளையும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். இங்கு போராட்டமானது பொறாமையாக பரிணாமம் அடைந்து இருப்பதே இந்தப் போராட்டத்தின் பரிணாம வளர்ச்சியாக இருக்கிறது.

முடிப்பதற்கு முன் ஒரு விஷயம். எனது அப்பா எங்கள் வீட்டின் போர்டிகோவில் குருவிகளுக்காக ஒரு மண்பானை கட்டி விட்டிருக்கிறார். தினமும் காலை நான் எழும் போது அதில் வசிக்கும் குருவிகளின் சத்தத்துடன் தான் எழும்புகிறேன். முன்பெல்லாம் எங்கள் வீட்டின்  சாணி கரைத்து தெளித்த முற்றத்தைச் சற்றி கொய்யா, நெல்லி, முருங்கை, வேம்பு என பல  மரங்கள் இருந்தன.வீட்டின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு அந்த மரங்களை வெட்டி அவற்றின் இயற்கை வசிப்பிடங்கள் அழிக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட மாற்றங்களைச் சமாளித்து இன்று அந்தப் பானைகளில் அவை வசிக்கின்றன. இதுபோன்ற மாற்றங்களை எதிர்கொள்ள அவற்றால் தம்மைத் தகவமைத்துக் கொள்ள முடிகிறது. அனால் நாம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் கதிர்வீச்சுகளை எதிர்கொள்ள எப்படி அவை தம்மைத் தகவமைத்துக் கொள்ள இயலும்? தற்கால அறிவியலார்கள் சொல்வது போல் அவற்றிற்கு இந்த உலகில் வாழும் உரிமை இருக்கலாம். அனால் வெறும் உரிமையை வைத்துக் கொண்டு எப்படி அவை தனது இனத்தை நிலை நிறுத்த இயலும்? இங்கு டார்வின் சொன்னதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. எனவேதான் அவற்றின் அழிவைப் பார்த்துக் கொண்டே நாம் நமது போராட்டத்தில் வென்று கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment