எதைப் பற்றி எழுதலாம்? என்று என்னுள் எழுந்த எண்ணமே இந்தப் பதிவை எழுதுவதற்குக் காரணம். இந்தப் பதற்றமான உலகில் நாம் சிந்திப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி விட முடியவில்லை. குளிக்கும் போதும், வண்டி ஓட்டும் போதும், சாப்பிடும் போதும் தான் நாம் சிந்திக்க வேண்டி உள்ளது. நிறைய பேருக்கு புத்தக வாசிப்பு இல்லாததற்கு நேரம் இல்லாமையே காரணம் என்று சொல்கின்றனர். இருக்கலாம்.
ஆனால் நாம் வாழ்வின் பெரும்பான்மையான நேரத்தை தேவையில்லாத காரியங்களுக்கு தான் செலவழிக்கிறோம் என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கிறோம். அதைப் பற்றி நமக்கென்ன கவலை? நிம்மதியாக ஒரு நடை சென்று வருவதற்கும், ஓரத்தில் அமர்ந்து காற்று வாங்குவதற்கும், பிடித்த இசையைக் கேட்பதற்கும் நாம் இயல்பாக நேரத்தைச் செலவிட முடிவதில்லை. ஒரு கால அட்டவணைப்(Time Table) போட்டுதான் இத்தனையும் செய்ய வேண்டி உள்ளது. இல்லையெனில் மேற்சொன்ன காரியங்களைச் செய்யும் போது தான் செய்ய வேண்டி உள்ளது.
நானும் அப்படித்தான். கல்லூரி வாழ்க்கையும் முடிந்து விட்டது வேலையில் சேர்வதற்கு இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது. இந்தக் காலத்தில் ஏதாவது உருப்படியாக எழுதிவிட்டுப் போகலாம் என்று எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பது தான் அன்றாட வேலை.
விமர்சனக் கட்டுரைகள் எழுத எத்தனையோ கருக்கள் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் எழுத சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட போராளிகள் இருக்கின்றனர். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். வேறு என்ன தான் எழுதுவது? எனது நண்பன் ஒருவன் எங்களது பள்ளி வாழ்க்கையைப் பற்றி ஏதாவது எழுதலாமே என்றான். நானும், " சரி தான். ஆனால் நான் ஏதாவது எழுதி, அது 'சிலர்' மனதைப் புண்படுத்துகிறது என்று எவராவது போராட்டம் நடத்தினால் என்ன செய்வது?" என்றேன். " அதுவும் சரிதான். அப்படியென்றால் எதைப் பற்றி எழுதப் போகிறாய் என்று என்னிடம் சொல்லிவிட்டு எழுது" என்றான். எனக்கு சிரிப்பு தான் வந்தது.
'நிலையில்லாக் கோட்பாடு', 'அகடு- முகடு' என்று குறும்படங்களுக்காக நான் யோசித்து வைத்திருந்த கதைகளை சிறுகதைகளாக எழுதி விடலாமா என்றும் தோன்றியது. நான் முழுமையாக சொல்வதற்கு முன்னதாகவே இந்தக் கதைகள் எனது நண்பர்களால் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. நான் நினைத்ததை அப்படியே அவர்களிடம் சொல்ல முடியாத எனது கதை சொல்லாடலைத் தான் இங்கு குறை சொல்லியாக வேண்டும். அதனால் கதையாக எழுதி விளக்கி விடலாம் என்ற யோசனை.
வேறு ஏதாவது பயண அனுபவத்தை அல்லது தென்காசி, கடையநல்லூர், குற்றாலப் பகுதிகளோடு நான் கொண்ட நெருக்கத்தை எழுதலாமா என்றும், எனது பல நாள் ஆசையான 'பால்வாடி' என்ற தலைப்பில் குழந்தைகள் மனதைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஒரு கதை எழுதலாமா என்றும் தோன்றியது. சிலநாட்களுக்கு முன்னர் மனதில் தோன்றிய 'சுடுகாட்டுச் சகவாசத்'தையும் மனம் விட்டு வைக்கவில்லை.
அன்று வேலைகளை முடித்துவிட்டு, மதிய உணவிற்கு தொடுகறி இல்லாததால் அப்பளமும், வடகமும் வாங்கி வரச் சொல்லி இருந்தார்கள். கடை வீதியில் வண்டியை நிறுத்த சிறிது கூட இடமில்லை. வாகன நெருக்கடி மட்டும் காரணமில்லை. மூன்று வண்டிகள் நிறுத்தக் கூடிய இடத்தில் ஒரு வண்டியைக் குறுக்காக நிறுத்தியிருந்தனர். எப்படியோ வாங்கிவிட்டு வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினேன்.
எங்கும் வாகன நெருக்கடி. ஹார்ன் என்ற பெயரில் ஒவ்வொரு வாகனமும் இரைச்சலைக் கிளைப்பி எனது கடை மூளையைக் குடைந்து கொண்டிருந்தன. பதிலடி கொடுக்கலாம் என்றால் அன்று பார்த்து எனது வண்டியின் ஹார்ன் பழுதடைந்துவிட்டது. எப்படியோ நகரை விட்டு வெளியேறிய கணத்தில் எங்களது ஊரின் சிறப்பம்சமான சாரலின் அறிகுறியாக சில துளிகள் எனது முகத்திலும் கைகளிலும் விழுந்தன. அத்தனையும் அணுவணுகவாக ரசித்துக் கொண்டே வண்டியைச் செலுத்தினேன். எழுத்துக்கான தேடலும் மூளையின் பாதியை ஆக்கிரமித்து இருந்தது.
'ஏய்!ஏய்!', என்று யாரோ அழைத்த கணத்தில் தலையைத் திருப்ப எத்தனித்த தருணத்தில் ஓரத்தில் நிறுத்தியிருந்த ஒரு லாரி சட்டென்று சாலையில் ஏறியிருந்தது. ஓட்டுநர் இண்டிகேட்டரைப் போட்டிருக்கவில்லை. பிரேக் போடும் முன்பே லாரியின் முகப்பில் மோதி விட்டேன். எனது இடப் பக்கத்தில் நெஞ்சோடு சேர்த்து அடித்த அடியில் நிலைகுலைந்து எனது வண்டி வலப்பக்கம் சரிந்தது.
அந்த நொடியில் எனது தலை சாலையில் அடிபட, அத்தனையும் டியூன் செய்து கொண்டிருக்கும் டி.வி. சேனல் போல அதிர் வுகளுடன் தெரிந்தது. கைகள் செயலிழந்தது போல் ஒவ்வொரு கோணத்தில் இருந்தன. பதற்றத்தில் இதயத் துடிப்பு உச்சத்தை அடைந்தது. பின்பு நிலை கட்டுக்குள் வந்தது. எழுந்து பார்த்த போது இடது தொடையில் பட்ட அடியின் காரணமாக pant கிழிந்திருந்தது. காயம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே சாலையின் ஓரத்தில் வந்து நின்ற போது யாரோ அதற்குள் வண்டியை ஓரத்தில் நிறுத்தியிருந்ததைக் கவனித்தேன்.
அனைவரும் என் மீது வசை பாடி கொண்டிருக்கும் வேளையில் ஒருவர் மட்டும் தண்ணீர் பாக்கெட் வாங்கிக் கொடுத்தார். லாரி ஓட்டுநரும் அவர் மீதான தவறை மறைக்க என்னைக் குறை சொல்லிக் கொண்டு இருந்தார். தவறில் எனக்கும் பங்கு இருந்ததால் நானும் ஏதும் பேசவில்லை. வண்டியை எடுத்துக் கொண்டு அப்பாவை கடையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தேன். வீட்டின் அழைப்பு மணியை அழுத்த கையை உயர்த்திய போது தான் அடிபட்ட வலியை உணர்ந்தேன்.கையை உயர்த்த முடியவில்லை. பின்பு சில மணி நேரத்தில் தலையில் அடிபட்ட இடத்தில் இரத்தம் வருவதைக் கண்டேன். பின்பு ஒவ்வொரு இடத்திலும் காயங்களையும் வலியையும் உணரத் துவங்கினேன்.
இது மிகப் பெரிய விபத்து இல்லை என்றாலும், பெரிதாக ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை என்று குடும்பத்தினரிடம் காட்டிக் கொள்ள வலியை மறைத்து இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுவது சற்று கடினம் தான்.
எல்லாவற்றிற்கும் மேலாக...
அன்று காலையில் நானும் அப்பாவும் வீட்டை விட்டுக் கிளம்பியபோது ஒரு மூதாட்டி(விதவை) ஒருவர் எதிரில் வந்தார். அப்போது ஸ்டார்ட் செய்திருந்த வண்டியை அப்பா நிறுத்தி விட்டு அவர் போகும் வரை காத்திருந்தார். எனக்கு சகுனங்களில் நம்பிக்கை இல்லாததால், 'இதெல்லாம் ஒன்னுமில்லப்பா. வண்டிய எடுங்க', என்று கிளம்பச் செய்தேன். இப்போது அதுதான் காரணம் என்று அந்த மூதாட்டி மீது பழி விழுந்தது.
பாதி கவனத்தை எங்கோ வைத்திருந்த நான், இண்டிகேட்டர் போடாமல், பின்னால் வரும் வண்டியை கவனிக்காமல் வண்டியைத் திருப்பிய லாரி ஓட்டுநர், தேவையில்லாமல் என்னைக் காப்பாற்றுவதாக நினைத்து என்னை 'அலெர்ட்' செய்ய சத்தம் போட்ட கிளீனர் என அனைவரது தவறுகளும் மறைக்கப்பட்டு அந்தப் பாட்டி காரணமாகி விட்டார். காரணமாக்கி விடப்பட்டார்.
நானும் சுய நலவாதிதான். என்னைக் காப்பற்றிக் கொள்ள நானும் அதற்கு உடந்தையாகிவிட்டேன்.
No comments:
Post a Comment