சினிமா என்பது வெறும் entertainment அல்ல. என்னைப் பொறுத்தவரை, அது ஒரு infotainment. நீ சொல்வது யாருக்கு வேண்டும்? என்று பலர் கேட்கக் கூடும். சரி. இந்தியாவைப் பொறுத்தவரை, குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை, அது வெறும் பொழுதுபோக்கு (entertainment) என்று எவராவது சொன்னால் அதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. அது தமிழர்களின் அரசியலில்-வாழ்வில் கலந்து விட்ட ஒன்று.
அதற்கு உதாரணம் என்று சொல்லி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அரசியலில் - ஆட்சி அதிகாரங்களில் இருந்தவர்களில் - இருப்பவர்களில் சினிமா தொடர்பு இல்லாதவர்களைப் பொறுக்கி எடுப்பது அரிது. சினேகா-பிரசன்னா திருமணத்தை 'எங்க வீட்டுக் கல்யாணம்' நிகழ்ச்சியில் வெறித்துப் பார்க்கும் பலர் அவர்களது சொந்த வீட்டுத் திருமண கேசட்டை முழுவதுமாகப் பார்த்து இருப்பார்களா? என்பது சந்தேகம். பல இளைஞர்கள் காதல் கொள்வதே சினிமாவும் சினிமா பாடல்களும் அவர்களுக்கு ஏற்படுத்தும் ஏக்கத்தினால் தான். சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் முதல் காதல் சொல்லும் விதம் வரை பலரது இயல்புகளையே சினிமா மாற்றி விடுகிறது. அப்படி சினிமாவின் மீது மோகமும் நேசமும் தமிழர்களிடையே எப்போதும் இருந்திருக்கிறது.
சென்ற தலைமுறைகளில், நடிகர்களாகும் ஆசையில் சொந்த ஊரை விட்டு பலர் சென்னை சென்ற வரலாறு உண்டு. சிலர் வென்றனர். பலர் தங்கள் வாழ்வை இழந்தனர். இந்தத் தலைமுறையில் இயக்குநர் என்ற ஆசை பெரும்பாலான இளைஞர்களிடம் இருப்பதைக் காணலாம். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.உலக நிகழ்வுகளை - வாழ்வுகளைப் பதிவு செய்ய போதிய அனுபவமும், அறிவும் இல்லை என்பதால் அதை ஒத்தி வைத்துவிட்டேன்.
ஒரு இறப்புச் செய்தி கேட்ட நபர், எந்த மிகையும் இல்லாமல் எப்படி எதிர்வினை புரிவார் என்பதே அறியாதவன் எப்படி ஒரு படத்தை எடுத்து விட முடியும்? இப்போதைய சூழலில் குறும்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று டிஜிட்டல் கேமராக்களைத் தூக்கிக் கொண்டு திரிபவர்களை அதிகம் பார்க்கலாம். நானும் அப்படி திரிந்தவன் தான். இன்னும் சிலர், சில ஆங்கிலப் படங்களைப் பார்த்து விட்டு தன்னை விட சினிமாவை அறிந்தவர் எவரும் இலர் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆங்கில சினிமாவை அறிவென்று நினைப்பவர்களும் உண்டு.
நாட்டில் இருக்கும் சினிமா இயக்குநர்கள், எழுத்தாளர்கள், போட்டோகிராபர்கள் மற்றும் நடிகர்களின் எண்ணிக்கையைக் கூட்டினால் நாட்டின் மொத்த மக்கள் தொகையைத் தாண்டிவிடும் என்று நினைக்கிறேன். அப்படி கலை ஆர்வம் எங்கும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால், விளம்பரம் தான் மிகப் பெரிய காரணமாக இருக்க முடியும். சினிமாவில் விளம்பரம் கிடைக்கும் அளவுக்கு வேறு எதிலும் அவ்வளவு எளிதில் கிடைத்திடாது.
சினிமாவில் கிடைக்கும் விளம்பரத்தைச் சிலர் அரசியலுக்குப் பயன்படுத்துகின்றனர். இருந்து விட்டுப் போகட்டும். அவர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்றில்லையே. அனால் தற்போது அரசியலுக்கு வரப் போகிறேன் என்று போக்கு காட்டிக் கொண்டிருக்கும் சில சினிமாக் காரர்களுக்கு நாட்டை நிர்வகிக்கும் - தீர்க்கமான முடிவு எடுக்கும் திறன் இருக்கிறதா என்று பார்க்காமல் அவர்களது சினிமா வசனங்களை நம்பி அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் அறிவிலிகளை என்ன சொல்வது?
ஒரு நல்ல சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று நான் ஒரு வரையறை கொடுக்க இயலாது. அப்படியென்றால் ஒரு இயக்குநரோ தொழில்நுட்பக் கலைஞரோ வரையறுக்கலாமா என்றால் அவர்களுக்காக சினிமா எடுக்கப் படவில்லையே. ஒரு ரசிகன் வரையறுக்கலாம் என்றால் அவன் சினிமா எடுப்பதற்கான கலையும், அறிவும், தொழில்நுட்பமும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. பிறகு யார் தான் வரையறுப்பது? ஒரு சினிமாவிற்கு எந்த ஒரு இலக்கணமும் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அது எடுக்கப்படும் மக்கள், அவர்களது வாழ்க்கை முறை, ரசனை சார்ந்து அமைவது.
பாடல்கள் இல்லாமல் எடுப்பது தரமான சினிமா என்று சிலர் சொல்லக் கூடும். தமிழர் கலாச்சாரத்தில் இயல்- இசை- நாடகம் என்று இசை ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. பிறக்கும் போது தாலாட்டு பாடுவதும் இறக்கும் போது ஒப்பாரி பாடுவதும் தான் தமிழ்க் கலாச்சாரம். அதற்காக ஒரே சீனில் நாடு கடந்து மரத்தைச் சுற்றி டூயட் பாடுவது கண்டிக்கத் தக்கது. இப்போது தாலாட்டும் ஒப்பாரியும் மறைந்து விட்டாலும் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியைப் படத்தில் வைக்கும் போது என்ன செய்வது?
வசனம் குறைவாக இருப்பது நல்ல சினிமாவா என்றால் தமிழ்நாட்டினர் பொதுவாக வாயடிப்பதிலும் சத்தமாகப் பேசுவதிலும் பெயர் பெற்றவர்கள். கருத்து சொல்லும் படங்கள் நல்ல சினிமாக்கள் என்றால் அதை ஒரு 'template'ஆக எடுப்பது பெரிய குற்றம்.மேலும் கருத்து சொல்பவன் எப்போதும் யோக்கியனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆங்கில வசனங்கள் அதிகம் இருப்பது நல்ல சினிமா என்பது அபத்தமானது.
வாழ்வை அப்படியே பிரதிபலிக்கும் - நிகழ்வுகளைப் பதிவு செய்யும் சினிமா தான் தரமான சினிமா என்றால் கற்பனைக் கதைகள் வைத்து எடுக்கும் சினிமா நல்ல சினிமா இல்லையா என்ற கேள்வி எழும். எனக்கே மூளை குழம்பி விட்டது. வேண்டுமானால் ஒரு குழு அமைத்து எது நல்ல சினிமா என்று தீர்மானிக்கலாம். அதிலும் தவறு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
எது நல்ல சினிமாவாக இருந்தாலும் சிறந்த முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும். சினிமாவை ஒரு வரையறைக்குக் கீழ் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல என்பது எனது கருத்து நாடகங்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அடைந்த பரிணாம வளர்ச்சியே சினிமா. தொழில்நுட்பங்களை கலைக்கு ஒரு கருவியாக உபயோகிக்க வேண்டுமே தவிர, தொழில்நுட்பத்திற்காகக் கலையைச் சிதைப்பது கூடாது. எப்படி இருந்தாலும், பரிணாம வளர்ச்சி பொறுப்புணர்ச்சியைப் பாதித்து விடாமல் பார்த்துக் கொள்வது சினிமா துறையினரின் கடமை என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
எது நல்ல சினிமாவாக இருந்தாலும் சிறந்த முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும். சினிமாவை ஒரு வரையறைக்குக் கீழ் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல என்பது எனது கருத்து நாடகங்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அடைந்த பரிணாம வளர்ச்சியே சினிமா. தொழில்நுட்பங்களை கலைக்கு ஒரு கருவியாக உபயோகிக்க வேண்டுமே தவிர, தொழில்நுட்பத்திற்காகக் கலையைச் சிதைப்பது கூடாது. எப்படி இருந்தாலும், பரிணாம வளர்ச்சி பொறுப்புணர்ச்சியைப் பாதித்து விடாமல் பார்த்துக் கொள்வது சினிமா துறையினரின் கடமை என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment