Thursday, June 20, 2013

தீட்டு

'ஏ மூதி! தரித்திரியம் புடிச்சவன. மணி ஒம்போது ஆவுது. எந்தில', என்று  வைத படியே போர்வையை மூடிப் படுத்திருந்த சாமித்துரையை எத்தி எழுப்பினான் மாரிமுத்து.

போர்வையை விடுவித்தவன் வீட்டுக்குள் விழும் சூரிய ஒளியை எதிர்கொள்ள முடியாமல் பாதியளவு இமைகளைத் திறந்து மாரிமுத்துவைப் பார்த்தான் தூக்கக் கலக்கத்துடன்.

'கோழி கூப்புட எந்துச்சு நீ என்ன கலெக்டர் ஆயிட்டியோ? போல மயிரு', என்று சோம்பல் முறித்தபடியே பாயை விட்டு எழும்பினான் சாமித்துரை.

கையில் பல்பொடியை எடுத்துக் கொண்டு துலக்கிய படியே மாரிமுத்துவைப் பின்தொடர்ந்து வெளியே வந்தான். வாசலில் சாமித்துரையின் தங்கச்சி பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள். காம்பவுண்டு குடியிருப்பு. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒவ்வொரு வேலை நடந்து கொண்டிருந்தது. பாத்திரம் கழுவிய நீர், குளித்து விட்டிருந்த நீர் என காம்பவுண்டின் வாசலை அடையும் வரை நடக்க முடியாத படி இருந்தது. வெளியே வந்தவன் காம்பவுண்டின் அருகிலிருக்கும் கற்பக விநாயகர் கோயிலில் அவர்களது சேக்காளிகள் (நண்பர்கள்) அனைவரும் கூடியிருப்பதைக் கண்டான். அடிபம்பில் 'தண்ணி' அடித்து விட்டு குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு இவனை ஓரக் கண்ணால் பார்த்த படியே கருமாரி இவனைக் கடந்து சென்றாள்.

முன்னால் சென்ற மாரிமுத்து அங்கிருந்த திண்டில் அமர்ந்தான். தள்ளாடியபடியே அவன் உட்கார்ந்த விதம் அவன் குடித்திருப்பதை அப்படியே காட்டியது. அனைவரது முகத்திலும் ஒரு இறுக்கம் இருப்பதை சாமித்துரை உணர்ந்தான்.

'என்னல ஆச்சு? எல்லா பயலும் பேயறஞ்ச மாரி இருக்கீங்க. ஒரு பயலும் வேலைக்கு போவலியா? ஏலே செக்கடி! நீ காலேஜுக்கு போவலியா?'. எல்லோர் மீதும் கேள்வியை வைத்த படியே வாயிலிருந்த பல்பொடியைத் துப்பினான்.

'ஒரு துட்டி. போவணும். சீக்கிரம் கெளம்பு', என்றான் செக்கடி.

'யாருல? என்ன ஆச்சு?'. செக்கடியிடமே கேள்வியை வைத்தான் சாமித்துரை.

'மணி பய அப்பாவ வயித்துல கட்டினு ஐகிரவுண்டுல சேத்து இருந்தவோலா? நைட்டு எறந்துட்டாராம். மணி பய போன் போட்டு வரச் சொல்லி அழுதான். கெளம்பு',என்றான்.

'நீங்க போய்ட்டு வாங்க.எங்கய்யா மாரியம்மன் கோயிலுக்கு மால போட்டுருக்காருலா. என்னால வர முடியாது', என்றபடி அரைகுறையாக விலக்கிவிட்டு வாய் கொப்பளிக்க அருகிலிருந்த அடிபம்பை நோக்கி நடந்தான்.

'அவரு தான போட்டுருக்காரு. ஒனக்கென்ன? வர வேண்டியது தான?'. மாரிமுத்து குறுக்கிட்டான்.

'லூசு மாரி பேசாதல. தீட்டு புடிச்சு எங்க குடும்பம் வெளங்காம போவவா? ஒனக்கு தெரியாதோ?'. முகத்தைக் கழுவிவிட்டு லுங்கியால் முகத்தைத் துடைத்துக் கொண்டே கேட்டான்.

'பெரிய கவர்னர் குடும்பம். வெளங்காம போறதுக்கு அங்க என்ன இருக்கு?'

'ஏலே! என்ன வாய் நீளுது? எங்களுக்கு என்ன பண்ணணுனு தெரியு. நீ மூடிட்டு இரு'. வாக்குவாதம் முற்றத் தொடங்கியது.

'நாளைக்கே ஒன் தங்கச்சி சடங்காயி உக்காந்தா என்னல பண்ணுவ? அதையு தீட்டுனு தான சொல்லுவீங்க?'

'எங்களுக்கு எல்லா மயிரும் தெரியும். நீ ஒரு மயிரும் வெளக்கம் கொடுக்க வேண்டா. போயிரு பாத்துக்க'.

இருவரும் விட்டபாடில்லை. நடப்பதை செக்கடியும் மற்ற அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். கைகலப்பு நடக்கப் போவதை உணர்ந்த செக்கடி சாமித்துரையைப் பிடித்து இழுத்தான்.

'ஏலே! என்ன பெரிய வெண்ண மாரி கூடக் கூட பேசிட்டு இருக்க. அவன் வந்தா வாரான். வராட்டி போறான். அவன எதுக்கு சீண்டிட்டு இருக்க?'

'அப்ற என்னல? வர இஷ்டம் இல்லனா சொல்ல வேண்டிதான. சும்மா சாமி மயிருன்னு எதையாது சொல்லிட்டு இருக்கது. பொறக்கும் போது ரொம்ப சுத்த மயிரா பொறந்த மாரி பேசுதான்'. மாரிமுத்து கொந்தளித்தான்.

'அடேங்கப்பா! உங்க உறுத்து எங்களுக்கு தெரியாதா? போன தடவ மதுரைல பாலு பய அம்மா செத்து போனப்ப தண்ணி அடிச்சுட்டு டூர் மாறி ஜாலியா போயிட்டு பொணத்தப்  பாத்த ரெண்டு நிமிஷம் மட்டும் நீலிக்கண்ணீர் வடிச்சுட்டு வந்தவன் தான. சும்மா பேசிட்டு இருக்கான்'. சாமித்துரையும் விடவில்லை.

கோபம் ஏறிய மாரிமுத்து சாமித்துரையின் காதோடு சேர்த்து கன்னத்தில் அறைந்தான். அனைவரும் அவனைப் பிடித்து இழுத்தனர். தெருவில் இருந்த அனைவரும் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 'செவத்த பையன்' என்பதால் கன்னத்தில் விரல்கள் பதிந்தன.

பின்பு இருவரையும் தனித் தனியே அழைத்துச் சென்று சமாதானம் செய்தனர். பின்பு சாமித்துரையைத் தவிர்த்து அனைவரும் துட்டிக்குச் செல்ல முடிவு செய்தனர். மணியிடம் பணம் இருக்காது என்று மாரிமுத்து நினைவூட்டினான். செக்கடி வீட்டிற்குச் சென்று ஏ.டி.எம். கார்டை எடுத்து விட்டு வாடகைக்கு பைக் வாங்கி விட்டு வருவதாகச் சொன்னான். மாரிமுத்துவும்  ரமேஷும் ஒரு பைக்கில் செல்ல மற்றவர்கள் பேருந்தில் செல்லவும் முடிவு செய்தனர்.

'ஏய்! செல்போன எங்க வச்சு இருக்க? காலைல சுவிச் ஆப்னு வந்துச்சு', செக்கடியிடம் மாரிமுத்து கேட்டான்.

'சார்ஜ் போட மறந்துட்டேன். நான் நேரா ஐகிரவுண்டு வந்துடறேன். நீ போ'. அனைவரும் கலைந்தனர். சாமித்துரை மட்டும் கோயில் திண்டில் அமர்ந்து கொண்டு இருந்தான்.

வீட்டிற்கு சென்று ஏ.டி.எம். கார்டை எடுத்துக் கொண்டு பைக் வாடகைக்கு விடும் கடையை நோக்கி நடந்தான். அன்று பார்த்து எவனும் 'லிப்ட்' தர முன் வரவில்லை. நடந்தே சென்றான். பின்பு வண்டியை எடுத்துக் கொண்டு பெட்ரோல் போட்டு விட்டு வண்டியைக் கோயிலை நோக்கி விட்டான். தனியாகச் செல்வதால் யாராவது கூட  வருகிறார்களா? என்று பார்த்து விட்டுச் செல்லலாம் என்ற எண்ணம். கோயிலின் திண்டில் முட்டியைக் கட்டிய படி சாமித்துரை மட்டும் உட்கார்ந்திருந்தான்.

'ஏலே லூசுப் பயலே! அவன்தா குடிச்சுட்டு பேசுதான். அதுக்கு போட்டு மூஞ்சத் தூக்கிட்டு உக்காந்துருக்க. நம்ம பயலுக யாராது வந்தானுவலா?', என்று கேட்டுக் கொண்டே வண்டியை விட்டு இறங்கினான்.

மெதுவாக முகம் தூக்கிப் பார்த்தான். அழுதிருப்பது தெரிந்தது.

'என்னல ஆச்சு? இப்ப எதுக்கு அழுவுத?'

'மாரிமுத்து போய்ட்டாம்ல', என்று அவனைப் பிடித்துக் கொண்டு அலற ஆரம்பித்தான்.

பாவூர்சத்திரம் அருகில் லாரியை முந்தும் போது விபத்தாகி கீழே விழுந்த மாரிமுத்துவின் தலையில் லாரி ஏற தலை நசுங்கி அந்த இடத்திலேயே இறந்துவிட்டதையும் தலையில் காயத்துடன் இருந்த ரமேஷையும் மாரிமுத்துவின் சடலத்தையும் ஐகிரவுண்டு கொண்டு சென்றிருப்பதையும் விளக்கினான். செக்கடிக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தன. என்ன செய்வதென்று அறியாமல் விழித்தான். விடு விடுவென பைக்கை நோக்கி நடந்தான்.

வண்டியை ஸ்டார்ட் செய்தான். கியர் போடும் போது கால்கள் நிலையிழந்து நடுங்குவதை உணர்ந்தான். முதல் கியர் போட்டு ஒரு ஜெர்க்கில் முன்னேறும் போது, 'ஏய்!', என்ற சத்தம் கேட்டுத் திரும்பினான்.

சாமித்துரை ஓடிவந்து பின்னால் ஏறிக் கொண்டான். வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு செக்கடி வண்டியைச் செலுத்தினான்.

No comments:

Post a Comment