Sunday, June 16, 2013

அஞ்சலி

தவமாய்த் தவமிருந்து
தவப்பயனாய்த் தாம்பெற்ற
மகவைப் பறிகொடுத்துத்
தவிக்கின்றாள் தாயொருத்தி.

உலகமெல்லாம் புகழ்படவே
வளர்த்துவிடத் தாம்கண்ட
கனவெல்லாம் கருகிவிட
கதறுகிறாள் பெண்ணொருத்தி.

பத்திரமாய் அவளையுமே
பள்ளிவிட வந்தஅவள்
பேருந்துக் கரங்களிலே
பறிகொடுத்து நிற்கின்றாள்.

கண்மணிபோல் இருந்தவளை
கண்முன்னே கரைந்தவளை
என்னிடமே வந்திடென
இறைஞ்சுகிறாள் மார்தட்டி.

குழந்தைமுகம் கொண்டவளின்
குறும்புமொழி சொன்னவளின்
சிதைந்தமுகம் பார்த்திடவே
துடிக்கின்றாள் வெடிக்கின்றாள்.

சுண்டிவிடத் தோல்சிவக்கும்
மல்லிகைப்பூ கரங்களுமோ
துண்டித்துத் தான்கிடக்கப்
புலம்புகிறாள் துவழுகிறாள்

சந்தனமாய் மணந்தவளின்
சக்கரமாய்ச் சுழன்றவளின்
சந்தனத்தால் செய்தவுடல்
சக்கரத்தில் போனதன்றோ.

மடியினிலும் மாரினிலும்
தாலாட்டி வளர்த்தவளின்
பொன்னுடலைக் கட்டியழ
ஒன்றுமின்றிப் போகஅவள்
நைந்துபோன உடலினையும்
கட்டிவந்த உடைகளையும்
தொட்டுஅழு கின்றனளே !!!


No comments:

Post a Comment