Thursday, June 20, 2013

எங்கே செல்லும் இந்தப் பாதை?

எங்களது கல்லூரியில் எங்களுக்குப் 'பிரிவு உபச்சார விழா' (தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். Farewell Day Function) நடைபெற இருந்தது. சிறப்பு விருந்தினராக எழுத்தாளர். சோம. வள்ளியப்பன் என்பவர் வருவதாகச் சொன்னார்கள். ஏதோ நிறுவனத்தில் மனித வளத் துறையிலும் பணியாற்றுகிறாராம். சில கல்லூரிகளின் பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவிலும் இருக்கிறாராம். நேரடியாக இரவு விருந்துக்குச் செல்ல இருந்த நான் எழுத்தாளர் என்றவுடன் விழாவுக்குச் செல்ல முடிவு செய்தேன். எனது சில நண்பர்கள் வராததற்கு அப்போது நான் காரணம் அறியவில்லை.

விழாவும் தொடங்கியது.மேடையில் இருந்த எல்லாரும் 'ஆற்றிய' பிறகு அவரும் பேச வந்தார். கொடுத்த காசிற்குக் கல்லூரியைச் சிறிது நேரம் புகழ்ந்து விட்டுப் பேச ஆரம்பித்தார். 'இந்தியாவில் பொறியியல் படிப்பிற்குப் பெரிய எதிர்காலம் இருக்கிறது. இப்போது அமெரிக்கப் பொருளாதாரம் சீராகிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்தியப் பொருளாதாரமும் சீராகி விடும்.எனவே பொறியியல் மாணவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை' என்று பேசினார்.

கடுப்பாகிய நான் வசை பாடத் துவங்கினேன். அருகில் இருந்த எனது நண்பன் 'அவர் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது' என்றான். இந்தியாவின் பொருளாதாரம் தன்னிச்சையானது இல்லை என்பதை எவ்வளவு பெருமையாக பேசுகிறார் என்றும் இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குக் கீழ் கொண்டு வரப் படுவதைப் பற்றியும் விளக்கிக் கொண்டிருந்தேன். கார்ப்பரேட் ஆசை காட்டி மாணவர்களைக் கொத்தடிமைகளாக மாற்றிக் கொண்டு இருப்பதைப் பற்றியும் கூறினேன். 

அதற்கு அவன்,'அவ்வாறு நினைப்பது உனது தாழ்வுமனப்பான்மை. அமெரிக்காவிற்கு வேலை செய்வதில் எந்தத் தவறும் இல்லை. அமெரிக்கா போன்று ரஷ்யா வெளிப்படையாக எதையும் செய்வதில்லை. அமெரிக்கா வெளிப்படையான நாடு', என்று கூறினான். 

ரஷ்யா பற்றி இதில் பேச எதுவுமில்லை. அமெரிக்கா வெளிப்படையான நாடு என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டும். அதற்கு விக்கிலீக்ஸ் மற்றும் சமீபத்தில் ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடென் பற்றி அறிந்து கொண்டாலே போதும். அமெரிக்காவின் CIA மற்றும் NSA என்பவை வெளிப்படையான நிறுவனங்களா?என்பதை உணர வேண்டும். உலக நாடுகளை அமெரிக்க ஏகாதிபத்தியதிற்குக் கீழ் கொண்டு வர அவை செய்யும் முயற்சிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இதற்காகப்  பல நாட்டுத் தலைவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

நம் நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதற்கு பின்னணியில் அந்த நிறுவனங்கள் இருக்கக் கூடும் என சந்தேகிக்கப் படுகிறது. அமெரிக்காவிற்கு எதிரான போக்கு கொண்டிருந்ததால் அவர் கொல்லப்பட்டார் எனக் காரணமும் சொல்லப் படுகிறது. கூடங்குளம் உட்பட பல திட்டங்களில் அவர் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட விரும்பியதாகவும் இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா அவர் கொலையின் பின்னணியில் இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. 

இரண்டாண்டுகளுக்கு முன்பு நாளிதழில் வந்த செய்தி நினைவிற்கு வருகிறது பிரிட்டன் பிரதமர் அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் ஆற்றிய உரை பற்றியது. 'இங்கிலாந்தின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு அளப்பரியது. இந்தியாவின் பொருளாதாரம் 'கால் சென்டர் பொருளாதாரம்' என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்தியப் பொருளாதாரம் அதை மட்டும் சார்ந்து இருக்கவில்லை. உதாரணமாக, இந்தியாவின் டாடா நிறுவனம் தான் ஜாகுவார் சொகுசு கார் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது', என்பது அந்த உரையின் ஒரு பகுதி.

இதிலிருந்து ஒரு உண்மை புலப்படும். இந்தியாவின் பெரும்பான்மையான பொருளாதாரம் ரிலையன்ஸ், டாடா மற்றும் பிர்லா ஆகியோரிடம் தான் இருக்கிறது. அவர்களின் வளர்ச்சி ஒட்டு மொத்த தேசத்தின் வளர்ச்சியல்ல என்பதை நாம் அறிவோம். அப்படியென்றால் இந்தியப் பொருளாதாரம் எத்தகையது என்பதை நாமே முடிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்தியர்கள் யாருக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதும் புரியும்.

அந்நிய முதலீடு இந்தியாவில் பொருளாதார ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தியதுடன் இந்தியாவின் வளங்கள் சுரண்டப் படுவதற்கும் காரணம். இங்கிலாந்தின் வேதாந்தா நிறுவனம் தான் ஒரிசா போன்ற பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் உருவாகக் காரணம். அதன் கிளை நிறுவனமான ஸ்டெர்லைட் பிரச்சினை அனைவரும் அறிந்ததே. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட தொழில்களை அவர்கள் இங்கு துவங்குகிறார்கள். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் நமது வளத்தைச் சுரண்டுவதுடன் அவர்கள் கலாச்சாரத்தைத் திணித்து இந்தியாவை ஒரு சந்தையாக மாற்றி உள்ளனர்.

கார்ப்பரேட்டுகளால் அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்ற மாயை இங்கு உள்ளது. மாறாக அவை சிறு தொழில்களை நசுக்கவே செய்கின்றன. நாட்டில் இருக்கும் 25% பொறியாளர்களுக்கு தான் கார்ப்பரேட்டில் பணி புரியும் திறமை இருக்கிறது என்று NASSCOM சொல்கிறது. அவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறது என்பது அவர்களுக்கே வெளிச்சம். அப்படியென்றால் மற்றவர்களின் கதி?

பல கனவுகளோடு படிக்கும் மாணவர்கள் வேலை கிடைக்காமல் வாழ்வின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் நாட்டில் குற்றங்களின் வீதம் அதிகரிக்குமே தவிர நாடு முன்னேறாது. கல்வித் திட்டம் ஏற்கனவே படு மட்டமாக உள்ளபோது இது போன்று கார்ப்பரேட்டுகளை வளர்த்து விடுவது எங்கு கொண்டு செல்லும்? இதைத் தொழில் வளர்ச்சி என்று பீற்றிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

அறிவின் சின்னமாகக் (!) கருதப்படும் ஒரு எழுத்தாளர் இப்படி கார்ப்பரேட்டுகளின் கொள்கை பரப்பும் விதமாகப் பேசுவதும் கல்வியை வணிகமாக்கி வரும் கல்வி நிறுவனங்களைப் புகழ்வதும் எதற்காக என்பது அவர்களுக்கே தெரியும். இப்படி இருக்கையில் பல கல்லூரிகளுக்கு இது போன்ற ஆட்கள் பாடத் திட்டத்தை வடிவமைப்பது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்வி குறியாக்கிவிடும். பின்னர் அவர் தன்னம்பிக்கை நூல்கள் எழுதுகிறார் என்று கேள்விப்பட்டவுடன் மேலும் கடுப்பேறியது. மாணவர்களின் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் காயடிக்கும் வேலையையே இந்தப் பாடத்திட்டங்கள் செய்கின்றன. இதைச் சேவையாக(!) செய்யும் கல்வி நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளின் கங்காணிகளாக ச் செயல்படுகின்றன.

இத்தனை பேசும் என்னால் இதைப் பற்றி பேசுவதைத் தவிர வேறு எதையும் செய்ய இயலாது. அடுத்த மாதம், ஒரு அமெரிக்க நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து தொழில் நடத்தும் ஒரு இந்திய நிறுவனத்தில் வேலையில் சேர வேண்டும். அவ்வளவுதான் எனது புரட்சி.

No comments:

Post a Comment