Saturday, July 27, 2013

தீர்வைத் தருவீர்

                         - தனதன 
தான(த்) தனன தனதன
           தான தனன தனதன
தான(த்) தனன தனதன
           தான தனன - தனதன

மேலே உள்ளது நான் எழுதிய சந்தம்
அதை கீழே உள்ளபடி நிறுத்திப் படிக்கவும்

(கீழே உள்ளபடியே எழுதி இருக்கலாம்
சரி இப்படி இருந்தால்தான் படிக்க சுவாரசியமாக
இருக்குமென்று விட்டுவிட்டேன்.)

தனதன தான(த்) தனன
தனதன தான(த்) தனன
தனதன தான(த்) தனன



                                              - திசைதொறும்
ஏரி குளங்கள் மலைகளில்
           தோன்றும் நதிகள் பலபல
ஓடை சுனைகள் நிரம்பிய
            நாட்டில் பிறந்தும் - அவைகளைப்

போற்றத் தவறி மனிதர்கள்
            சோம்பித் ததனால் நிகழ்ந்தஅம்
மாற்றத் தினைநான் எனதுஇப்
             பாட்டில் சொலவா? - தெளித்திடும்

வாயிற் படியிற்  சிதறிய
             நீரின் துளியை தனதிளம்
நாவிற் தடவிக் குடித்திடும்
             கன்றைச் சொலவா? -களனியின்

பானை நினைவில் பிடித்திடும்
             காலிக் குடத்தில் முகத்தினை
நீட்டித் துழவும் பசுவதன்
             தாகம் சொலவா? - வெயிலினால்

கொவ்வை அலகில் அடிகுழாய்
             சொட்டும் துளியை குடித்திட
வேண்டித் தவிக்கும் பறவைகள்
             ஏக்கம் சொலவா? - அழிந்திடும்

காடு மலைகள் இறங்கியே
              ஊருள் புகுந்தே வயல்களில்
தாகம் தணிக்கும் விலங்குகள்
              பாட்டை சொலவா? - நகர்களில்

சாலைக் கடையில் விலைசொலும்
              நீரைப் பெறவே மனிதனே
மூச்சுத் திணறி அனுதினம்
              சோர்கின் றனனே - இனிவரும்

காலங் களிலே மனிதனே
              நீருக் கலையும் பொழுதினில்
ஏழைப் பறவை விலங்குகள்
              எங்கே செலுமோ? - எனதுஇக்

கேள்விக் கொருநல் பதில்சொல
              யாரும் உளரோ? உலகிடை
வாழும் அறிஞர் இதற்கொரு
              தீர்வைத் தருவீர்!

No comments:

Post a Comment