இந்திரன் முதலிய இறைவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல் வீடும் நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத்தாகலின், துறவறம் ஆகிய காரணவகையான் கூறப்படுவதல்லது இலக்கணவகையான் கூறப்படாமையின், நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமே ஆம்.
அவற்றுள் அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழி்தலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.
அவற்றுள் ஒழுக்கமாவது, அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று, அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.
வழக்காவது, ஒரு பொருளைத் தனித்தனியே 'எனது எனது' என்று இருப்பார், அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு, அப்பொருள் மேல் செல்வது. அது 'கடன் கோடல்' முதல் பதினெட்டுப் பதத்தது ஆம்.
தண்டமாவது, அவ்வொழுக்க நெறியினும் வழக்கு நெறியினும் வழீஇயினாரை, அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்ப நாடி அதற்குத்தக ஒறுத்தல்.
இவற்றுள் வழக்கும் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதுஅல்லது, ஒழுக்கம்போல மக்கள் உயிர்க்கு உறுதி பயத்தல் சிறப்பில ஆகலானும், அவைதாம் நூலானே அன்றி உணர்வு மிகுதியானும் தேய இயற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து, ஈண்டு தெய்வப்புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதுதான் நால்வகை நிலைத்தாய், வருணந்தோறும் வேறுபாடு உடைமையின், சிறுபான்மை ஆகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலின் பெரும்பான்மை ஆகிய பொது இயல்பு பற்றி, 'இல்லறம்' 'துறவறம்' என இருவகைநிலையால் கூறப்பட்டது.
அவற்றுள், இல்லறமாவது, இல்வாழ்கை நிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கண் நின்று, அதற்குத் துணையாகிய கற்புடை மனைவியோடும் செய்யப்படுவது ஆகலின், அதனை முதற்கண் கூறுவான் தொடங்கி, எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற்பொருட்டுக் கடவுள் வாழ்த்துக்கூறுகின்றார்.
No comments:
Post a Comment