Friday, July 24, 2015

கோதம-இந்ரம்

சூரியனைத் தொழக் குவிந்தன
நாற்பத்தெண்ணாயிரம் ஜோடி
ரிஷிக் கரங்கள்.


நதியோரங்களில்
பாசி தகதகக்கும்
ஜல பிந்துக்களில்
ஆடை களைந்து நீராடும்
அகலிகைகளை
தேடி வருகின்றன
இன்னும் இன்னும் என
இந்ர தாபங்கள்.


ரே, இந்ர
அவர்களை முகர்ந்த உன்
தேவதா நாசியில் நிலவும்
நாற்றம் யாது?
உன் உலகை
ரிஷிக் கரங்களின்
சூர்ய வழிபாடு
ஊடுவுருகிறதே,
சதிபதிகளான கரங்கள்
ஒன்றை ஒன்று
புணர்ந்தன பார்!
உடனே அவை
கரங்களல்ல
சாபமுக்தனாகாத
உன் தசை வெளியில்
ஆயிரம்
பெண்குறிப் பிளவுகளாகி
மீன்வாடை  அடிக்கும்
மாமிச மலர்கள்.
சொல், உன் உலகினுள்
ரிஷிக் கரங்களின்
சூர்ய வழிபாடு
ஏற்றி ஓடும் புரை எது?


இந்ர  உவாச:


'மனிதர்கள் யாவரும்
கோதமர்கள்
பிள்ளைகுட்டிக்கார ரிஷிகள்.
அதே மனிதர்கள்
சந்தர்ப்பம் சமைந்தால்
இந்ரர்களும் கூட.
காலைக் குளிர்காற்றில்
தாடிகள் தத்தளிக்க
லோகசிக்ஷூவைக் கண்டதும்
இந்ரமோஹம் கூவி விடியாத
அசல் காலை இது என்று
கெக்கலித்துக் கும்பிட்டு
நீரேறிய கமண்டலங்களுடன்
கரையேறி
குடில்கள் நோக்கி
வேத மனனங்களை
அசைபோட்டு நடக்கின்றனர்.
நிசி வர
நிச்சலனத்தை
ஊடுருவும்
உன்மத்த விகற்பங்களில்
உடல் விழித்து
உணர்வுகளை
செயற்கை உபாதைகளாக்கும்

சம்சார விபரீதங்களை
தாமே நிகழ்த்தத் துணிகின்றனர்.


சாலையில் ஏறிய நீரில்
தத்தளிப்பு.
கமண்டலத்தினுள்
ஒருசிறு மீன்!
இந்ரன் நகைக்கிறான்.
ஆனால் ரே, இந்ர!
ஹே, கோதம!
மொக்குகளினுள்
மலர முயற்சிக்கும்
பேரதிர்வுகள்
காளையை
நடுநடுங்கவைக்கின்றன.
உங்களுள்
ஒருவர் மற்றவரை ஏய்க்க
மற்றவர் சபிக்கும் களேபரத்தில்
அதை அறியீர்.
சூர்யனைக் கேளுங்கள், புரியும்.
ப்ரஹ்ம முஹூர்த்தங்களுக்கு
துளைபோட்டு
ஓட்டுப் பார்த்து
பூமியை அகலிகையாக்கி
குடியைக் குதித்து
இறங்கிக்கொண்டேயிருக்கும்
முப்பத்து முக்கோடி குருட்டொளி
நிசிவேளைப் புழுக்களைக்
கேளாதீர், புரியாது!


சூர்ய உவாச:


யாரோ முரணற்று
யோகம் கொண்டு
ஒரே கணத்தில்
கோதமேந்ரனாகிறான்.
அவனிடத்துதித்த
இடையறாத பிரியத்தின்
தைல தாரை
வேரூன்றிட
யாரோ ஒரு அகலிகை
ஸ்தாவரமாகிறாள்
ஸ்தாவரங்களின்
புணர்ச்சிக் கருவிகள்
மீன்வடை அடிப்பதில்லை.
தசை அரிப்பின்
தன் முரணற்ற அவை
என்னைச் சிறை பிடிப்பவை
குழந்தைகளால்
இனிதென முகரப்படுபவை.
இதோ
மலரிதழ்களினுள்
புரட்சி!
ஆயிரம் அதிர்வெடி!
திசையெங்கும்
ஒரே ஒரு மலர்
பூக்கும் பேரொலி.


- பிரமிள்

No comments:

Post a Comment