அட்டுப்பிடித்த பத்திரிக்கைகளுக்கு
அரோகரா !
வாய்க்கட்டுப்போடப்பட்ட
விமர்சகர்களின்பாடும் அதோகதி !
அவர்களின் குடல்களை
புழுக்கள் குதறட்டும்.
புத்துணர்வு வேண்டாம் என்றவர்களின்
பிணக்குக்குழிகள் இதோ!
அவர்களின் தொழில்
ஒத்தூதுதல், கட்சிகட்டுதல்.
ஏய், வேசித் தொப்பை முடக்குவாதி!
உன்கதியும் இதுதான்!
எழுத்தின் சுதந்திரம், உன்னதம்
இரண்டுக்கும் நீ பரம வைரி!
ஏய் காளானே!
விட்டுக்கொடுக்காத புற்றுவியாதி நீ!
வாருங்கள், புத்தியாக்கம் அழைக்கிறது.
முதுகு சொறிகிறவர்களையும்
தொழில் நடத்துகிறவர்களையும்
விரட்டியடிப்போம்.
லாபத்துக்காக
பணத்தொப்பைகளைத்
தடவுவோர் மீது
காறித் துப்புவோம்!
கொஞ்சம் காற்றாட
வெளியே செல்வோம்!
ஓகோ! முப்பது வயதிலேயே நான்
செத்துப்போவேன் என்கிறாயா?
குஷியாகச் செய்! - அதற்கு
எப்போதும் உண்டு என்
ஒத்துழைப்பு!
நல்ல எழுத்தாளர்களை
ஒழித்துக்கட்டுதல் உன்
பழக்கக்கதோஷம்.
ஒன்று அவர்களை
பைத்யமாக்குவாய்!
அல்லது அவர்களின்
தற்கொலையைப் பார்த்து
கண்கொட்டுவாய் !
அவர்களின் போதை பழக்கம்
அத்தியாவசியம் என்று சொல்வாய்!
மேதமை பைத்யம்
என்று அளப்பாய்!
ஆனால் உன் திருப்திக்காக நான்
பைத்யமாகமாட்டேன்,
உன் குஷிக்காக
இளமையிலேயே சாகவும் மாட்டேன்.
ஓ! வாழ்வை நான் சமாளிப்பேன்!
உன் மீதுள்ள தங்கள் வெறுப்பை
வெளியிடப் பயந்தவர்கள் பலர்.
எண்ணெய் பொறுத்தவரை
உனது வெறுப்புப் புழுக்கள்
என் பாதங்களைச் சுற்றிச் சுற்றி
கிச்சுக் கிச்சு மூட்டட்டும்.
எனது பூட்ஸின் ருசியா வேண்டும்?
இதோ என் பூட்ஸின் ருசி!
தடவு, நாக்கு!
(தமிழில் பிரமிள்)
No comments:
Post a Comment