Monday, May 27, 2013

இந்தியா ஜெயிக்கணும்!!!

கோடை காலத்தின் வழக்கமான வாட்டல் அந்த ஞாயிற்றுக் கிழமையின் காலையே ஆரம்பித்திருந்தது. மணி அண்ணன் கடையில் இருந்து அண்ணனுக்குத் தெரியாமல் திருடி வந்த தினத்தந்தி நாளிதழைப் பார்த்துக் கொண்டு இருந்தான் செக்கடி மாடசாமி. கடையநல்லூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 'ஆறாப்பு' படிக்கிறான். கோடை காலம், அதுவும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் காலையிலேயே அப்பா ஐஸ் விற்கச் சென்று விட்டதால் சாவகாசமாக பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.

விளையாட்டுச் செய்திகளைத் தவிர வேறு ஏதும் படித்திராத அவனது இலக்கிய ஆர்வத்திற்கு அன்று நடைபெறவிருந்த  உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியே காரணம்.  'சச்சின் எங்களுக்கு சிம்மசொப்பனம்' என்ற தலைப்புடன் இடம் பெற்றிருந்த க்ளென் மெக்ராத்தின் பேட்டியைப் பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அந்த உலகக் கோப்பைத்  தொடர் தொடர்பான அலசல்களைப் படித்த பிறகு ஒருவித பயம் அவனைத்  தொற்றிக் கொண்டது.அதுவரை நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா தோற்றதே இல்லை. இந்தியா, ஆஸ்திரேலியா உடனானப் போட்டியில் மட்டும் தோற்று இருந்ததே அவனது பயத்திற்கு காரணமாக இருந்தது. இருந்தும் இந்தியா முழுவதும் ரசிகர்கள் செய்த யாகங்கள், பிரார்த்தனைகள் குறித்த செய்திகளைப் படித்து சாமி காப்பாற்றும் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான். அனைத்து தொடர்களையும் வாசித்து முடித்து விட்டு வீரர்களின், குறிப்பாக அவனது சூப்பர் ஸ்டாரான சச்சினின் புகைப்படத்தைக் கத்தரித்து அவனது கிரிக்கெட் நோட்டில்(!) ஒட்டிக் கொண்டிருந்தான்.

'ஏலே! பல்லு வெலக்காம கொல்லைக்குப் போவாம என்னத்தல படிச்சுட்டு இருக்க? கொல்லைக்குப் போய்ட்டு வந்து பழைய சோத்த வச்சு தின்னு'. அங்கணத்தில் பாத்திரம் விலக்கிய படியே அவயம் போட்டாள் செக்கடியின் அம்மா.

பல் விலக்கி விட்டு,பன்றி விரட்ட கம்பை எடுத்துக் கொண்டு அவனும் அவனது நண்பன் சாமித்துரையும் கொல்லைக்குப் போகும் போது பேசிக்கொண்டே சென்றனர். 'தெரியுமால? இந்தியா இன்னிக்கு செவிச்சா நாளைக்கு பெப்சி ஒரு ரூவாய்க்கு விப்பாங்களாம்', என்று தான் கேட்ட புரளியை சாமித்துரை சொன்னான். 'போல ! அதுவே சூடத் தண்ணி மாரி இருக்கும். அத வாங்கி என்னத்த  பண்ண? இந்தியா செவிக்கணும். சச்சின் தங்க பேட் வாங்கணும். அது போதும்'. என்றான் செக்கடி.

எல்லாம் முடித்து(!) விட்டு வீட்டுக்கு வந்து மதியானம் எங்கு டிவி பார்ப்பது என்ற எண்ணத்துடன் சோறு வைத்து தின்று முடித்தான். கடைசியில் பொன்ராசு அண்ணன் வீட்டில் பார்க்கலாம் என்று முடிவு செய்தான். செக்கடியின் வீட்டில் சிறிய  கறுப்பு- வெள்ளை டிவி என்பதால் ஸ்கோர் சரியாகத் தெரியாது. அதுவுமில்லாமல் பொன்ராசு அண்ணன் வீட்டில் கார்த்தி அண்ணனும் இருப்பான். கார்த்தி அண்ணன் மனக் கணக்காகவே ரன்ரேட் எல்லாம் சொல்லும் என்பதே காரணம். 

குட்டி போட்ட பூனையாக சுற்றிச் சுற்றி வந்தவன் கடைசியாக, குளித்து  மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு கருமாரியம்மன் கோயிலுக்குச் சென்று உண்டியலில் சேர்த்து வைத்திருந்த  ஒன்னே கால்  ரூபாயை போட்டு விட்டு வந்தான். பின் பொன்ராசு அண்ணன் வீட்டுக்குச் சென்றான்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கங்குலி  பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார். ஆவலோடு அனைவரும் மேட்ச் பார்க்க அமர்ந்திருந்தனர். முதல் ஓவரை வீசிய ஜாகிர்கான் முதல் ஓவரில்  15 ரன்களை விட்டுக் கொடுத்தான். அதில் வைடாக வீசிய பந்து போருக்கு(4) சென்ற போது  ஜாகிர்கானை அனைவரும் வசை பாடியதை அப்பாவியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். 

பின்பு ஸ்ரீநாத் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த அடுத்த ஓவர்களில் ரன் வேகம் குறைந்த போதும் பின்பு கொஞ்சமாக உயரத் தொடங்கியது. விக்கெட்டும் விழாததால் கடுப்பேறிய அனைவரும் கிரிக்கெட் விளையாடச் செல்லலாம் என்று டிவியை அணைத்து விட்டுக் கிளம்பினர்.

 'ஏலே! நீயும் வாரீயா? மேலத் தெரு காரங்க  கூட 5  ரூவா  பெட் மேட்ச். உனக்கு 'ஒன்  டவுன்' பேட்டிங் தாரேன்', செக்கடியைப் பார்த்து கார்த்தி அண்ணன் கேட்டான்.அவன் பொய் சொல்கிறான் என்று தெரியும். எப்பயுமே ஆட்டத்துல ஒப்புக்குச் சப்பாணி  இவன் தான். அவர்களுக்கு தண்ணி, ரஸ்னா வாங்கிக் கொடுக்கத்  தான் இவனை அழைக்கிறார்கள் என்று இவனுக்குத் தெரியும். மேலும் இந்தியா ஜெயிப்பதைப் பார்க்க வேண்டும் என்று வர மறுத்தான்.

அவனது வீட்டுக்கு வந்து பார்க்கத் துவங்கினான். விக்கெட் விழவே இல்லை. எப்படியோ 105 ரன் இருந்த போது கில்கிறிஸ்ட் அவுட் ஆனான்.  சந்தோசப் பட வழியில்லாமல் அடுத்து வந்த கேப்டன் ரிக்கி பாண்டிங் அடித்து விளாசினான். இறுதியாக வெறும் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 359 ரன் எடுத்த போது கதறி அழ ஆரம்பித்து விட்டான்.

'இந்தியா செவிச்சுரும்ல', என்று ஆறுதல் கூறி அவனது நெற்றியில் விபூதி பூசி விட்டாள் அவனது அம்மா. கண்ணைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்த போது அப்பாவும் வந்து விட்டார். ஐஸ் பெட்டியில் இருக்கும் ஐஸ் பார்களை(bar) எடுக்க 'ரெண்டாப்பு, மூனாப்பு பசங்க' எல்லாம் வீட்டு முன்னாடி நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் அழுததைக் காட்டிக் கொள்ளாமல் சாமித்துரையைத் தேடி சென்றான்.

'ஏலே தெரியுமா? பாண்டிங் பய ஸ்ப்ரிங் பேட் வச்சு அடிச்சு இருக்கானாம். பாத்தியால ஒத்த கைல சிக்ஸ் அடிச்சத' மற்றுமொரு புரளியை அவிழ்த்து விட்டான் சாமித்துரை. இருந்தாலும் அது அவனுக்கு காரணம் சொல்லி ஆறுதல் அளித்தது. எப்படியும் பந்துக்கு இரண்டு ரன் என்று அடித்தாலும் ஈசியாக அடித்து விடலாம் என்று கணக்குப் போட்டு கொண்டிருந்தான். 'சச்சின் பாகிஸ்தான் கூட அடிச்ச மாரி அடிச்சா ஈசியா அடிச்சுரலாம். அப்டியும் இல்லாட்டி இருக்கவே இருக்கான் நம்ம சிக்ஸர் மன்னன் கங்குலி ' என்று அவனிடம் சொல்லி விட்டு மீண்டும் மேட்ச் பார்க்க வந்தான்.

சச்சின் ஓபனிங் இறங்கினான். நான்காம் பந்தில் போர்(4). ஐந்தாம் பந்தில் தூக்கி அடிக்க அதை மெக்ராத் தானே  பிடித்து விட அவனது கனவு எல்லாம் கலைந்து போனதாய் உணர்ந்தான். பின்பு சேவாக் அடித்த ஓவரை மெய்டனாக்க ரன் விகிதம் சரிந்தது. கங்குலி, டிராவிட் என விக்கெட்டுகள் விழ விழ ஏமாற்றத்தின் உச்ச நிலையை அடைந்தான். பதற்றத்தில் ஒரு பத்து முறையாவது ஒன்னுக்கு போய்விட்டு வந்திருப்பான். இருந்தும் சேவாக் அடித்து விடுவான் என்று நம்பிக் கொண்டே இருந்தான். இந்தியாவும் தோற்றது. அழுது அழுது தொண்டை வற்றிப் போனது. ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. சச்சினுக்கு தங்க பேட்.

அழுததில் காய்ச்சலே வந்தது. மறுநாள் பள்ளிக்கூடம் செல்ல மனமில்லாமல் படுத்துக் கொண்டே இருந்தான். வலுக்கட்டாயமாக அவனது அம்மா அவனை எழுப்பி மூஞ்சு கழுவி, எண்ணெய் வைத்து தலை சீவி, பவுடர் பூசி திருநீறு  வைத்து விட்டாள். சோறு தின்ன மறுத்தான். ' ஏங்க! இந்தப் பயல பள்ளிவூடத்துல விட்டுட்டு போங்க. இடும்பு பண்ணுதான். இப்பவே மணி 9 ஆவுது', அப்பாவிடம் அம்மா முறையிட்டாள்.

பின்னாடி ஐஸ் பெட்டி இருந்ததால் சைக்கிளின் பாரில்(bar) வைத்து  அழைத்துச் சென்றார். ப்ரேயர் முடிந்து இருந்தது. வகுப்பிற்குள் அசன்பிள்ளை வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்பாவிற்கு பதில் வணக்கம் போட்டபடியே அருகில் வந்தார். ' இவன என்னணு கேளுங்க சார்வால். இந்தியா தோத்துருச்சுனு பள்ளிவூடத்துக்கு வர மாட்டிக்கான்', அப்பா முறையிட்டார். அனைவரின் பார்வையும் ஏளனமாக அவன் மீது விழுந்ததை உணர்ந்தான். தலை குனிந்தான்.

'ஏலே லூசுப் பயலே! அந்தப் பயலுகளே துட்டு வாங்கிட்டு விளையாடாம இருக்கானுங்க. அதுக்காக அழுதுட்டு இருக்க. அவனா வந்து ஒனக்கு சோறு போடப் போறான். போய் உக்காருல ' என்று அதட்டினார். 'இவருக்கு கிரிக்கெட்டப் பத்தி என்ன தெரியும்' என மனதில் கடிந்து கொண்டான். அனைவரின் பார்வைகளைக் கிழித்துக் கொண்டு இடத்தில் சென்று அமர்ந்தான். தான் பெருமையாக நினைத்த விஷயத்தை வைத்து அனைவர் முன்னிலையிலும் தலைகுனிய வைத்ததை அவனால் செரிக்க இயலவில்லை.

அருகிலிருந்த சாமித்துரை,' ஏலே! நாஞ்சொன்னது உண்ம தான். பாண்டிங் ஸ்பிரிங் பேட் வச்சு தா அடிச்சு இருக்கான். கப்ப அவங்க கிட்ட இருந்து புடிங்கி இந்தியா கிட்ட கொடுத்துடாங்களாம். இன்னிக்கு காலைல இங்கிலீஷ் டிவில சொன்னாங்களாம் . இப்ப தமிழ் டிவில சொல்லி இருப்பாங்க ', மீண்டும் கிளப்பி விட்டான். இருக்காது என்று தெரிந்தும், இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேஓரத்தில் ஒருவித சந்தோசத்துடன், எங்கேயாவது  டிவி பார்த்து உறுதி செய்து விட வேண்டுமென்று  ரீசஸ் பீரியடை எதிர் நோக்கிக் காத்திருந்தான்.

4 comments:

  1. good one da!!! convert it into short film!!!

    ReplyDelete
  2. Super machi... made me remember my old days.. pepsi-1Re, Spring bat.. i felt like reading my "10th std thunaipaadam".. i loved it..

    ReplyDelete
  3. Good Narration da thambi

    -Sathyamoorthy

    ReplyDelete
  4. சிறப்பு நண்பா... அத்தனை நிகழ்வுகளையும் கண்முன் காட்சியாக விரிகிறது...

    ReplyDelete