Monday, June 24, 2013

சவச்சொற்கள்

காதலின் அறிகுறிகள் ஏதுமின்றி
நீங்கள் சொல்லும்
Love You!!!

நன்றியுணர்வு துளியுமின்றி
நீங்கள் சொல்லும்
Thanks!!!

வருந்தியதற்கான சுவடுகள் ஏதுமின்றி
நீங்கள் சொல்லும்
Sorry!!!

இதயத்தினின்று அன்றி
இதழிளிலிருந்து மட்டுமே வரும்
Wishes!!!

பதிவுசெய்தபடியே ஒலிபரப்பப்படும்
காலை மாலை இரவு வணக்கங்கள்!!!

குதூகலமின்றி
நீங்கள் சொல்லும்
Cheers!!!

மட்டுமல்ல....

தீய எண்ணங்கள் ஏதுமின்றி
நீங்கள் சொல்லும்
"F*** ***" வும்

என்னை மிகவும் கலங்க வைக்கின்றன.

காதலின் மதகுகள்
உடைந்த வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்ட ஒருவர்
மற்றவரை உதவிக்கு அழைக்கும்
கூக்குரல்
Love You!!!

நன்றியுணர்வு பெருக்கெடுத்து
பேச்சிழந்து மூச்சிழந்து
சொல்வதற்கு ஏதுமின்றி
நாவரண்டு நிற்கையில்
நுனிநாவின் கடைசி ஈரப்பதத்தில்
மலரும்
Thanks!!!

குற்றவுணர்வு நெஞ்சைக்குடைய
குறுகுறுப்பில் கூனிக்குறுகி
கைகூப்பி வணங்கிநிற்க்க  
கண்ணீர்த் துளியுடன் சேர்ந்து
சொட்டும்
Sorry!!!

எதிர்ப்படுபவரை மட்டுமல்லாமல்
எதிர்ப்படுவதையும் நோக்கி
கைகூப்பி
நீயும் நானும் வேறுவேறு அல்ல
ஒரே சக்தியின் இருவேறு
பரிமாணம் என்று கூறும்
வணக்கம்.

இதுபோன்று
மகிழ்ச்சியின் பெருக்கத்தில்
வருத்தத்தின் வலியில்
வலியின் துடிதுடிப்பில்
காதலின் சுகத்தில்
காமத்தின் உச்சத்தில்
குற்றவுணர்வின் குருகுருப்பில்
கோபத்தின் கொந்தளிப்பில்
சொல்லாடப்படவேண்டிய சொற்கள்
இங்கு சர்வ சாதாரணமாகப்
பந்தாடபடுகின்றன.

குறைந்தபட்சம் அவற்றை உங்கள் 
தாய்மொழியிலாவது  
சொல்லுங்கள் 
மற்றமொழிகளை விட தாய்மொழிக்கு சற்று 
உணர்ச்சி அதிகம்.

உணர்ச்சிப் பந்தம் ஏற்றப் பயன்படும்
வார்த்தைத் தீக்குச்சிகளை
கொளுத்தி கீழே போட்டுக்கொண்டு
நடக்காதீர்கள்.

உணர்ச்சிக் கடலில்
நீந்தும்
வார்த்தை மீன்கள்
மிகவும்
அழகானவை
தயவுசெய்து
அவற்றை
கண்டபடி தரையில்
வீசாதீர்கள்
அவை துடிதுடித்துச்
சாவதை
என்னால் பார்க்க முடியவில்லை.

1 comment: