Friday, July 5, 2013

நானொரு சாதி கெட்டவன்

யாராவது நண்பர் வீட்டிற்கு சென்றால் வீட்டில் உள்ள பெரியவர்கள் நாசுக்காக விசாரிப்பார்கள். 'நீங்க என்ன ஆளுக்(ங்)கயா?' என்று. இது ஒருபுறம் இருக்கட்டும். நானும் எனது நண்பனும் முன்பொருமுறை எங்கள் ஊரின் அருகில் உள்ள சுந்தரேசபுரம் என்ற கிராமத்தின் வழியாக பொடிநடையாக சுற்றித் திரிந்த போது ஒரு 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் எங்களிடம் கேட்டான். 'ஏலே! எந்தச் சாதிக் கார பயல நீ? எங்க ஊருக்குள்ள வந்துருக்க', என்று. அவனை என்ன செய்வது? அவனுக்கு சாதியத்தை சொல்லிக் கொடுத்தவர்களைச் சொல்ல வேண்டும் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டோம்.

இப்படி சாதியம் என்பது இங்கு ஒரு பெருமையாகவும் கர்வமாகவும் சிறுவயதில் இருந்தே பலரது மனதில் விதைக்கப்படுவது தான் நாட்டில் நடக்கும் சாதிக் கலவரங்களுக்கு முக்கிய காரணம். இவர்களுக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இருப்பதில்லை என்பதே வருந்தத்தக்க விஷயம். சாதியாலும் சாதியின் பெயரால் தீண்டாமையாலும் மக்களில் ஒரு பகுதியினர் கொடுமைப்படுத்தப்படுவது நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடைக்கல்லாக அமைகிறது.

ஆரியர்களின் வருகையே இந்தியாவில் தீண்டாமைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. நாடோடி வாழ்க்கை வாழ்ந்த அவர்கள் தங்களை ஆதிக்க வர்க்கத்தினராக நிலைநாட்டிக் கொள்ள உழைப்பைத் தீட்டென ஒதுக்கி உழைத்து வாழ்ந்த மக்களைத் தீண்டத்தகாதவர் ஆக்கியது தான் இன்றைய தீண்டாமையின் அடிப்படை. இதில் அவர்களது மொழியை தேவமொழியாக அறிவித்து அதை இங்குள்ளவர்களையும் நம்ப வைத்து அவர்களை சமூகத்தில் மேலே வைத்துக்கொண்டனர்.

சாதியின் முன்னோடியான வர்ணப் பிரிவினையில் பார்ப்பன, சத்திரிய, வைசிய மற்றும் சூத்திர பிரிவுகள் மக்களின் தொழிலின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. மேலும் பிரிவினையை எதிர்ப்பவர்கள் 'அவர்ணர்கள்' என்று ஒதுக்கிவைக்கப்பட்டனர். வர்ணங்களுக்கு இடையேயும் வர்ணத்தவருக்கும் அவர்ணத்தவருக்கும் இடையேயும் இனக்கலப்பு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. சூத்திரர்கள் மீது மற்ற அனைத்துப் பிரிவினரும் தீண்டாமையையும் மேற்கொண்டனர். இதில் காமெடி என்னவென்றால், இதில் 'சூத்திரர்' என்னும் பிரிவில் இருந்த சில சாதிகள் பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேறியவுடன் தங்களையும் ஆதிக்கசாதியோடு சேர்த்துக் கொண்டு சூத்திரர் பிரிவில் இருக்கும் மற்ற சாதியர் மீது தீண்டாமையை மேற்கொள்கின்றனர்.

யாராவது சண்டாளர் என்று திட்டுவதைப் பார்த்திருக்கிறீர்களா? இனி அவ்வாறு திட்ட வேண்டாம் என்று சொல்லுங்கள். அது வசைச் சொல் அல்ல. அது ஒரு சாதியின் பெயர். ஆதிக்க சாதியினர் திட்டுவதற்கு  பயன்படுத்தியதால் நமது வழக்கத்திற்கு வந்துவிட்டது. இனியும் அவ்வாறு செய்து அவர்கள் மீது தீண்டாமையைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆரம்ப காலங்களில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தேன். பின்னர் எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். ஆதிக்க சாதியினர், தாழ்த்தப் பட்டவர்கள் தங்கள் சொத்தைப் பங்கு போடுவது போல் நினைக்க இங்கு ஒன்றுமில்லை. அவர்கள்  இந்தச் சமுதாயத்தில் ஒரு நிலையை அடைய அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியம். காலம்காலமாக குனிந்து வாழ்பவர்களுக்கு கண்டிப்பாக நிமிர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மன்னிக்கவும். யாருக்கு யார் வழங்குவது? எடுத்துக் கொள்வது அவர்களது உரிமை.

அதே சமயம், சில இடங்களில் சிலர் தலீத்களைத் தவறாக பேசியதாக ஆதிக்க சாதியினர் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தைத் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்காகப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். இதையும் ஊக்குவிக்க முடியாது. உரிமைகளை மீட்டெடுக்க தலீத்களுக்கு அத்தனை உரிமையும் இருக்கிறது. அதே சமயம் அத்துமீறுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

காதலர்கள் மீது கட்டவிழ்க்கப்படும் இந்தச் சாதிய கொடுமைகள் ஏற்புடையது அல்ல. காதலை நாடகக் காதல், பக்குவமற்ற காதல் என்று விமர்சிக்கிறார்கள். அப்படியென்றால்  உண்மையான காதல் எந்த வயதில் வர வேண்டும், யார் மீது வர வேண்டும் என்று வரையறை இருக்கிறதா? அவர்களால் சொல்ல முடியாது. தங்களது சாதிய கட்டுப்பாடுகளால் உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஏதும் செய்ய முடியாது என்ற கர்வத்தில் ஆடுகிறார்கள். இந்தச் சமுதாயத்தில் பிறந்ததற்காக நொந்து கொள்ளத்தான் என்னால் முடிகிறது.

சாதியமும் தீண்டாமையும் ஒரே பொருளின் இரு வேறு பரிமாணங்கங்கள். இவற்றை ஒழிக்காதவரை இந்தச் சமுதாயத்தில் மனிதம் பிறக்காது. மனிதத்தை நிலைநாட்டும் முயற்சியில் நானும் சாதியை ஒழிக்கத் தலைப்படுகிறேன். மேலும் இங்கு நான் ஒன்றைப் பெருமையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நானொரு சாதி கெட்டவனென்று!

நன்றி (தகவல்களுக்காக):
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா 

No comments:

Post a Comment