Saturday, November 16, 2013

தமிழ் இனி மெல்லச் சாகும் !!!

எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரைக்கான எதிர்வினையே இக்கட்டுரை. கொஞ்சம் தாமதமான  எதிர்வினைதான். ஆனால் அவரது கருத்துகளை எதிர்க்கும் எண்ணத்திலோ ஆதரிக்கும் எண்ணத்திலோ இந்தக் கட்டுரையை நான் எழுதவில்லை. ஜெமோ கூறிய கருத்துகளில் சில கேலிக்குரியனவாக தெரிந்தாலும் அவரது கருத்துகளை முட்டாள்த்தனம் என்று முற்றிலும் ஒதுக்கிவிட முடியவில்லை. அதனாலேயே இக்கட்டுரையை எழுதுகிறேன்.

தமிழர்களுக்கு தமிழ் மொழி  மீதான ஆர்வம் குறைந்து விட்டதையும் தமிழ் வாசிப்பு கிட்டத்தட்ட நின்றுவிட்டதையும் தெளிவாக உணர்த்தும் கட்டுரையாகவே எனக்கு தோன்றுகிறது. இன்றைய தலைமுறையான இளைஞர்களிடம்  வாசிப்புப் பழக்கம் முற்றிலும் இல்லை என்று கூறிவிட முடியாது. எனினும் வாசிப்பவர்கள் பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்களையே வாசிக்கின்றனர். அதையே அவர்கள் படைப்புத் திறமையின் உச்சமாகவும் அறிவாகவும் கருதுகின்றனர். 

பெரும்பாலான பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலமே முதன்மை மொழியாகிவிட்டது. பணம் கொடுத்துப் படிக்க வழியில்லாத பாமரர்களின் மீது தமிழ்வழிக் கல்வி திணிக்கப்பட்டு தமிழின் வாழ்வுக்கு(மன்னிக்கவும்.. பிழைப்புக்கு!) அவர்கள் சோதனை எலிகளாக அரசாலும் அரசியல்வாதிகளாலும் பயன்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் (ஒரு சிலரைத் தவிர) சந்திக்கும் இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. கல்லூரிகளில் பலரது கேலிக்குரியவராவதிலிருந்து வேலைக்கு நாயாகத் திரிவது வரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருவித மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இவற்றிற்கு எல்லாம் நம்முடைய மூத்த தலைமுறையினரையும் அரசியல்வாதிகளையும் கல்வித் திட்டத்தையும் அதை வகுத்தமைத்தவர்களையும் குற்றம் சொல்லிவிட்டுப்  போவது தான் நம் கடமை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான தீர்வை நாம் எவரும் சிந்தித்துக் கூடப் பார்த்ததில்லை. அங்கு தான் பிரச்சினை எழுகிறது.

தமிழை வாழ வைக்கும் காலகட்டத்தை நாம் தாண்டிவிட்டோம் என்றே எனக்கு  தோன்றுகிறது. இனி குறைந்தபட்சம் அதைப் பிழைக்க வைக்க வேண்டிய முயற்சியாவது செய்யலாம். அதை விடுத்து 'தமிழ் வாழ்க' 'தமிழ் வாழ்க' என்று ஊரெங்கும் பலகைகள் வைப்பதால் மட்டும் தமிழ் வாழ்ந்து விடாது. ஏதாவது ஒரு பிரச்சினையை வைத்து அப்போதைக்கு நேரத்தை ஓட்டிவிட்டுச் செல்லும் சமூக வலைத்தள எழுத்தாளர்களாலும் இதைச் செய்ய முடியாது.

மாற்றம் என்பது இயற்கை. தமிழும் அதன் எழுத்து வடிவமும் இலக்கிய வடிவமும் பல மாற்றங்களை அடைந்தே இப்போதைய நிலையை அடைந்திருக்கின்றன. ஒவ்வொரு மாற்றத்தின் போதும் அது பல எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறது. அவ்வாறு இல்லாவிட்டால் இன்றைய தமிழின் இலக்கிய வடிவமான உரைநடைத் தமிழையும் புதுக் கவிதைகளையும் கொண்டாடிக்கொண்டிருக்க முடியாது. அதற்காக ஜெமோவின் யோசனையை நான் வழிமொழிவதாக அர்த்தமில்லை. அவர் அவரது யோசனையைக் கூறியிருக்கிறார். அதை ஆதரிப்பதும் நிராகரிப்பதும் அவரவர் விருப்பம்.

தமிழ் அழிந்து வருவது நிதர்சனமான உண்மை. தமிழை முதல் மொழியாகப் பள்ளிகளில் பயின்ற பலர் தமிழில் எழுதுவதை நிறுத்திவிட்டு தங்கிலீஷில் தான் எழுதுகின்றனர். தமிழின்  எழுத்து வடிவில் பல குழப்பங்கள் இருப்பதால் பிழைகள் வரும் என்ற பயத்தாலேயே அவ்வாறு எழுதுவதாகக் காரணமும் கூறுகின்றனர். தமிழை முதல் மொழியாகக் கொண்டு படித்தவர்களுக்கே இந்த நிலை என்றால் இரண்டாம் மொழியாகப் படித்தவர்களைப் பற்றியோ பேருந்து பலகைகளை மட்டும் படிப்பவர்களைப் பற்றியோ சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இணையத்தில் பொங்கும் கூட்டம் தமிழ் வெறியர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ள ஜெமோவை மலையாளி என்றும் அவர் ஏன் அவர் தங்கிலீஷில் புத்தகம் எழுதவில்லை என்றும் எள்ளி நகையாடிக் கொண்டிருக்கின்றனர். பெரியாரையும் தெலுங்கர் என்று சொல்லி நகையாடிய கூட்டம் தான் நமது கூட்டம் என்பது இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. இதில் சாருவைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். தங்கிலீஷில் எழுதுவது  தாயைக்  கூட்டிக் கொடுப்பது போன்றது என்று குறிப்பிட்டு இருந்தார். 'ஸீரோ டிகிரி', 'எக்ஸ்டன்ஸியலிஸமும் பேன்சி பனியனும்', 'எக்ஸைல்' எனும் இவை அவருக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. இது யார் தாயை யாருக்கு கூட்டிக் கொடுத்தது என்பதை அவர் தெளிவு படுத்தவேண்டும். இது ஏற்புடையது எனில் ஜெமோ சொல்வதும் ஏற்புடைய ஒன்றுதான்.

ஆத்திரத்தில் ஏதேதோ பேசும் இவர்கள் தமிழை  வாழ வைக்க ஏதும் யோசனை வைத்திருக்கிறார்களா? தெரியவில்லை. மாறாக சமூக வலைத்தளங்களில் இவர்கள் பதியும் கேலிப் பதிவுகள்தான் நவீன தமிழ் இலக்கியம் என்று பின்னாளில் சொல்லக் கூடும்.  இவர்கள் என்ன தான் கூச்சலிட்டாலும் ஏதோ ஒரு மாற்றம் நடக்கத்தான் போகிறது. அது தமிழுக்கு இழுக்கு இல்லாதவாறு அமைய நம்மால் முடிந்த முயற்சியை  எடுத்தாக வேண்டும். அந்த முயற்சி என்ன  என்பதை கண்டறிய வேண்டியது இன்றியமையாதது. இல்லையென்றால் எதிர்காலத்தில் 'English பேசினாலும் தமிழன்டா ' என்று பெருமையாகச் (!) சொல்லிக் கொள்ள வேண்டியது தான். அப்போது தமிழர் என்பது வெறும் அடையாளமாகத்தான் இருக்கும்.

1 comment: