Saturday, January 4, 2014

இது ஜனநாயக நாடுங்க!!

கார்ட்டூனிஸ்ட் மதனின் 'கி.மு.,கி.பி.,' படித்து முடித்தேன்.பிரபஞ்சம் உருவானது முதலாக, உயிர்கள் தோன்றியது, மனிதன் தோன்றியது வழியாக கிறிஸ்து பிறந்தது வரை காலப் பயணம் செல்கிறது. மிகவும் சுவாரஸ்யமான புத்தகம். ஆனால் வரலாறு என்பது உண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. காரணம், வரலாறைப் பதிவு செய்தவர்கள் உண்மையாக இருந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சில சமயம் இயற்கையே அதைப் பதிவு செய்தாலும் வரலாறைத் தோண்டியெடுக்கும் போது கிடைக்கும் எச்சங்கள் அதில் சொற்பமே. அவற்றைக் கண்டெடுத்து வரலாறாகச் சொல்லும் வரலாற்று வல்லுனர்கள் தாங்கள் புரிந்து கொண்டவாறு அல்லது தமக்கேற்றவாறு அதைத் திரித்தோ மறைத்தோ சொல்லிட வாய்ப்பிருக்கிறது. இப்படி பல வாய்ப்புகளில் சரித்திரம் உண்மையானதாக இல்லாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தப் புத்தகத்தை வாசிப்பதிலும் இதுபோல் பல நெருடல்கள் இருக்கின்றன. 

உதாரணமாக, சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்ம எச்சம்(காலடிச் சுவடு) ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் கிடைத்ததாகவும் அது ஒரு பெண்ணின் காலடித்தடம் என்பதாலும் அதற்கு முந்தைய மனிதச் சுவடுகள் ஏதும் இல்லாததாலும் அதுவே 'முதல் மனிதன்' எனவும் முதல் மனிதன் ஒரு பெண் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இது போன்ற ஊகங்களை நம்புவது என்பது சற்றே கடினமான விஷயம் தான். இருந்தும் புத்தகத்தில் சுவாரஸ்யமான மற்றும் திடுக்கிடச் செய்யும் பகுதிகள் நிறையவே இருக்கிறது. குறிப்பாக தத்துவ ஞானி சாக்ரடீஸ் மற்றும் அவரது சீடர்களின் வரலாறு.வசதிக்காக இறந்த காலத்திலேயே எழுதவதால் இங்கு நான் கதை சொல்வது போலவே இருக்கும். இங்கு நான் வெறும் கருவிதான்.

சாக்ரடீசுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாததால் ஏதென்ஸில் நடந்த ஜனநாயக ஆட்சிக்கு அவர் ஆதரவு அளிக்கவில்லை. இதனால் அரசுக்கு எதிராக செயல்படுவதாக அவர் மீது  வழக்குகள் போடப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். 'சிந்தித்துப்  பார்த்து முடிவெடுக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் ஆட்சி செய்ய அருகதையற்றவர்கள்' என்று சொல்லி ஜனநாயகத்தின் மீதான தனது நிலைப்பாட்டை அவர்  மாற்றிக் கொள்ள மறுத்ததால் அவரே விஷம் குடித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒருநாட்டின் குடிமகன் அந்த நாட்டின் சட்டதிட்டங்களை மதிப்பது தான் நியதி என்று சொல்லி அவரும் விஷம் குடித்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். சாக்ரடீஸ் மீதான வழக்கின் வாதங்கள் மற்றும் பிரதிவாதங்கள் மற்றும் அவரது இறுதி நிமிடங்கள் என அனைத்தையும் அவரது சீடர் பிளாட்டோ 'Great Dialogues' என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இந்தச் சோக  நிகழ்வால் ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கை கொண்ட பிளாட்டோ ஏதன்ஸை விட்டு வெளியேறிவிட்டார். தகுதி இல்லாத பலரால் ஆளப்படும் ஜனநாயக நாடு உருப்படாது என்றும் அறிவாற்றல் மிகுந்த சிலருக்கு சிறந்த கல்வியும் பயிற்சியும் அளித்து ஆட்சி செய்ய தயார்படுத்த வேண்டும் என்றும் 'லட்சிய மன்னர்' கனவு கொண்டிருந்தார். இருந்தும் அவரால் அவரது கனவை எட்ட முடியவில்லை. அனால் அவரது சீடர் அரிஸ்டாட்டில் மாசிடோனியாவின் மன்னர் பிலிப்பின் மகன் அலக்ஸாண்டரை பயிற்சி செய்து உலகம் வியக்கும் மாமன்னனாக மாற்றி தனது குருவின் கனவை நிறைவேற்றினார் என்பது மீதிக் கதை. இருந்தும் அவரது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த அவர் புரிந்த போர்களினால் மடிந்த உயிர்களின் எண்ணிக்கை இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் மனிதத்தைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது.

மன்னராட்சியைப் பொருத்தவரை  தனி ஒரு மனிதனுக்கு சர்வ அதிகாரங்களோடும் முடிசூட்டி உயரே தூக்கி வைத்துவிடுவதால் பொது மக்களுக்கு நாட்டின் அரசியல் நிர்வாக முடிவுகளில் எந்தவித பங்கெடுப்பும் இல்லாமல் போய் விடுகிறது. இதனால் மன்னரின் நிர்வாக முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வழி இல்லாமல் போய்  விடுகிறது. மக்களின் அடிப்படை சுதந்திரங்களும் கேள்விக்குறியாகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. இன்றைய இந்தியாவின் அரசியலைப் பொருத்தவரை அரசியல்வாதிகளின் ஊழல், குடும்ப அரசியல், வாக்கு வங்கி அரசியல், நிர்வாகச் சீர்கேடு, பணத்துக்காக வாக்குகளை விற்கும் அவலம்  என பல சர்ச்சைகள் உள்ளன.  இதனால் ஜனநாயகத்தின் மீது குறை சொல்பவர்களும் உண்டு. லோக்பால் மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி இந்தியாவில் இளைஞர்களும் சமூக ஆர்வர்களும் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக கிளம்பினர். இவ்வாறாகக் கிளம்பிய பல இளைஞர்களிடம் ஒன்றை மட்டும் அவதானித்தேன். பலர் இதுவரை ஜனநாயகத்தில் பங்கெடுத்ததில்லை (அதாவது தேர்தலில் வாக்களித்தது இல்லை). மற்றும் பலர்  பல லட்சங்கள் நன்கொடையாகக்(!) கொடுத்து கல்லூரிகளில் சேர்ந்தவர்கள்.

லோக்பால் மூலம்  இவர்கள் சொல்லும் 'தவறு செய்தால் கடுமையான தண்டனை' என்கிற கருத்துக்கு முதலில் அடிபடுவது இவர்கள் தான் என்பதைச் சிந்திக்கும் அளவிற்கு கூட இவர்கள் பக்குவம் பெறவில்லை என்பது தான் வருத்தமான விஷயம். எந்தவொரு தவறுக்கும் கடுமையான தண்டனை இருந்தால்தான் தவறுகள் குறையும் என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவன் நான். தனி மனித ஒழுக்கம் இல்லாத ஒரு சமூகத்தில் தண்டனைகள் தவறுகளைக் குறைத்துவிடப் போவதில்லை. மேலும் நீதி வழங்குவது மனிதன் என்பதால் அதிலும் தவறுகள் நிகழ பெருமளவில் வாய்ப்பிருக்கிறது. தவறு செய்யாதவனுக்கு தவறாக வழங்கப் பட்ட தண்டனைக்கு காரணமானவர்களுக்கு என்ன தண்டனை வழங்குவது?ஒவ்வொரு தவறுக்கும் தண்டனை என்றாகி விட்டால் தவறுக்குப் பயந்தே முடிவுகள் எடுக்காமல் தட்டிக் கழிக்கும் 'இயலாமைச் சமூக'மாகிவிடும் என்பதே எனது பயமாகிறது.

இளைஞர்கள் அரசியலுக்கு வந்தாலும் தவறுகள் நடைபெறாது என்று சொல்லிவிட இயலாது. ஏனெனில் அவர்களும் மனிதர்கள் தான். தவறு செய்வது மனித இயல்பாகிறது. துடிப்பான இளைஞர்கள் பக்குவமற்ற முடிவுகளையும் எடுத்துவிட வாய்ப்பிருக்கிறது. எனவே ஜனநாயகம் என்பது இளைஞர்களும் மூத்தவர்களும் ஆண்பெண் பேதமின்றி ஒட்டு மொத்த மக்களும் நாட்டின் நிர்வாகத்தில் பங்கெடுப்பது.

தற்போது டெல்லியில்  ஆட்சிப்  பொறுப்பேற்றிருக்கும் 'ஆம்ஆத்மி' கட்சியின் வெற்றி மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே தோன்றுகிறது. காங்கிரஸ்- பாரதிய ஜனதா மற்றும் எந்த வித அமைப்புவாத இயக்கங்களும் அல்லாத சாமான்யர்களின் கட்சி ஆட்சிக்கு வர முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இதுவும் ஜனநாயகத்தின் வெற்றியே!அவர்கள் முன்வைக்கும் லோக்பால் சட்டத்தில் இருக்கும் குறைகளை அவர்கள் கண்டிப்பாக உணர வேண்டும். அதில் இருக்கும் பல பக்குவமற்ற கருத்துகள் முடிவுகள் எடுக்க முடியாதவாறு நாட்டின் நிர்வாகத்தை முடக்கிவிடும் என்பதை அவர்கள் உணர்வது அவசியம். மற்றபடி தவறுகளைத் திருத்தி நாட்டின்- நாட்டு மக்களின் வளர்ச்சிக்கான ஒரு அரசு அமைய வேண்டும் என்பதே இந்நாட்டின் பிரஜையாக என்னுடைய விருப்பமும் கூட. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்து விட முடியாது. அப்படிச் செய்தால் ஜனநாயகம் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இல்லை.

No comments:

Post a Comment