அப்போது பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இலக்கியத்தின் மீதோ அறிவியலின் மீதோ எவ்வித நாட்டமும் இல்லாத காலகட்டம். ஒரு முறை நண்பனின் வீட்டிற்கு சென்றிருந்த போது அங்கு சுஜாதாவின் 'ஏன் எதற்கு எப்படி' புத்தகம் இருந்தது. வீட்டில் அவனைத் தவிர யாரும் இல்லாததால் எடுத்துப் புரட்டத் தொடங்கினேன். திடீரென்று ஒரு பக்கத்தில் நிறுத்தினேன்.
கமல்ஹாசன் தனது திரைப்பட நாயகிகளுடன் முத்தம் பகிரும் காட்சிகளின் புகைப்படங்கள் இருந்தன. புகைப்படங்களில் மூழ்கி இருந்தவன் சுயநினைவு வந்தவனாய்க் கேள்வியைப் படிக்கலானேன். ஏதோ முத்தங்களைப் பற்றிய கேள்வி. சுஜாதாவும் அறிவியல் பூர்வமாக பதிலளித்து இருந்தார். என்னவென்று இப்போது நினைவில் இல்லை (வசனமா முக்கியம்??).
அப்படியே புத்தகம் முழுவதையும் வாசித்து முடித்து விட்டு சுஜாதாவைப் 'பெரிய ஆளு தான்' என்று நினைத்துக் கொண்டேன். (சுஜாதா ஒரு ஆண் என்று அதுவரை தெரியாது). பின்பு தான் எனது தமிழ்ப் பாடப்புத்தகத்தில் (துணைப்பாடப் பகுதியில்) இருக்கும் 'அனுமதி' என்னும் சிறுகதையை எழுதியது அவர் தான் என்பதையும் மணிரத்னம் மற்றும் சங்கர் திரைப்படங்களுக்கு அவர்தான் ஆஸ்தான வசனகர்த்தா என்பதையும் தெரிந்து கொண்டேன். (நான் மணிரத்னம் படங்களை DVD தேயும் வரை பார்க்கும் பழக்கம் கொண்டவன்).
ஒருமுறை 'ஆயுத எழுத்து' திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு காட்சியில் சூர்யா காவல் நிலையத்தின் கைதிகள் அறையின் சுவரில் தனது நண்பர்களுக்குப் பாடம் நடத்துவார். அப்போது ஒரு சமன்பாட்டைத் (equation) தருவித்து விட்டு, "And this proves that 'The Universe' is not made up of infinitely dense matter" என்று சொல்லி விட்டு மேலும், "Grand Unified Theory'னு சொல்வாங்க : GUT; உலகத்துல இருக்க மொத்த மேட்டரையும் ஒரே ஈக்குவேசன்ல சொல்ல ட்ரை பண்றாங்க" என்று விளக்கம் கொடுப்பார். அப்போது அதுபற்றி எனக்கு ஏதும் புரியவில்லை.
கல்லூரி படிக்கும் போது ஒரு வார இதழில் ஸ்டீபன் ஹாகிங் எழுதிய 'The Grand Design' புத்தகத்தைப் பற்றி சிறு குறிப்பு எழுதி இருந்தார்கள். அதற்கு முன்பு ஸ்டீபன் ஹாகிங்கை ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் பார்த்திருக்கிறேன், படித்துமிருக்கிறேன். அப்போதே இந்தப் புத்தகத்தை வாசித்தாக வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். புத்தகமும் கிடைத்தது. வாசிக்கவும் தொடங்கினேன். ஆனால் அதிலிருந்த ஆங்கிலம் தான் எனக்கு வில்லனாக இருந்தது. திணறித் திணறி இருபது பக்கங்கள் வாசித்து விட்டேன். இருபது பக்கங்கள் முடித்ததும் முதல் பக்கம் என்ன படித்தேன் என்பதே மறந்து போயிற்று. ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொண்டு அதை வாசிப்பதென முடிவு செய்து அதோடு மூட்டை கட்டி வைத்து விட்டேன். ஆங்கிலப் புலமையை(!) வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்தில் சேட்டன் பகத் புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கினேன்.
ஒரு வருடத்துக்கு பின்பு ஒருநாள் நண்பன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்த போது இந்தப் புத்தகத்தைப் பற்றி பேச்சு ஆரம்பித்தது. நான் இதைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் தன் அறைக்குச் சென்றவன் ஸ்டீபன் ஹாகிங் எழுதிய 'The brief history of time' புத்தகத்துடன் வந்து தனக்கும் இதில் ஆர்வம் உண்டு என்று சொன்னான். பிறகு இருவரும் சேர்ந்து அந்தப் புத்தகத்தை வாசிப்பதென முடிவு செய்து பல மாதங்களாக வாசித்து ஒரு வழியாக வாசித்தும் முடித்து விட்டோம். அதில் கூறப்படும் ஒவ்வொரு விதிகளையும் கோட்பாடுகளையும் ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டி தேடித் தேடி வாசித்தோம். அவற்றின் மீதான எங்கள் விவாதம் பின்னிரவு தாண்டி நீளும். இதனால் மறுநாள் கல்லூரி செல்லாமல் பகலில் தூங்கிவிடுவதும் உண்டு. அப்படித் தேடிய போது புதுமையான மற்றும் சுவாரஸ்யமான பகுதியாக அமைந்தது 'நிலையில்லாக் கோட்பாடு'. ஆங்கிலத்தில் 'The Uncertainty Principle'. பன்னிரெண்டாம் வகுப்பில் வேதியியல் பாடத்தில் ஒரு சிறிய பகுதியாக படித்திருந்தாலும் இரண்டு மதிப்பெண் கேள்வியில் தான் கேட்பார்கள் என்பதால் அலட்சியமாக விட்டு விட்ட பகுதி. இயற்பியல் விதியாக முழுமை பெறாமல் கோட்பாடகவே இருந்தாலும் நவீன இயற்பியலில் தவிர்க்க முடியாத பகுதி.
பிரபஞ்சத்தில் நிகழும் நிகழ்வுகளுக்கு ஒரேயொரு தீர்க்கமான வரலாறு மட்டும் இருக்க முடியாது; பல சாத்தியமான வரலாறுகள் இருக்கக் கூடும் என்பதே இந்தக் கோட்பாடு. அதாவது, இப்போது இங்கே நான் இதைப் பற்றி எழுதுவதற்கு கமல்ஹாசன் தனது நாயகிகளுக்கு முத்தம் கொடுத்ததுதான் காரணம் என்று சொல்லலாமா? அதுவும் ஒரு காரணம். அவ்வளவே! அதே நேரத்தில் அவர் முத்தம் கொடுக்காது இருந்திருந்தால் நான் இதைப் பற்றி எழுதுவதற்கு சாத்தியமும் மிகக் குறைவு. குழப்புவதாகத் தெரியலாம். இனிவரும் கட்டுரைகளில் தெளிவுபடுத்த முயற்சி செய்கிறேன்.
பிரபஞ்சத்தில் நிகழும் நிகழ்வுகளுக்கு ஒரேயொரு தீர்க்கமான வரலாறு மட்டும் இருக்க முடியாது; பல சாத்தியமான வரலாறுகள் இருக்கக் கூடும் என்பதே இந்தக் கோட்பாடு. அதாவது, இப்போது இங்கே நான் இதைப் பற்றி எழுதுவதற்கு கமல்ஹாசன் தனது நாயகிகளுக்கு முத்தம் கொடுத்ததுதான் காரணம் என்று சொல்லலாமா? அதுவும் ஒரு காரணம். அவ்வளவே! அதே நேரத்தில் அவர் முத்தம் கொடுக்காது இருந்திருந்தால் நான் இதைப் பற்றி எழுதுவதற்கு சாத்தியமும் மிகக் குறைவு. குழப்புவதாகத் தெரியலாம். இனிவரும் கட்டுரைகளில் தெளிவுபடுத்த முயற்சி செய்கிறேன்.
No comments:
Post a Comment