Friday, March 14, 2014

நிலையில்லாக் கோட்பாடு - 2

எடுத்த எடுப்பிலேயே ஒரு கோட்பாட்டின் வரையறை(definition), விளக்கம்(explanation) மற்றும் பயன்பாடுகள் என்று சொல்லிக் கொண்டே போய்விட்டால் பள்ளிக்கூடப் பாடப்புத்தகம் போலாகிவிடும் என்பதால் கதை சொல்லியே கட்டுரையைக் கொண்டு போகலாம். அதற்கு முன் அறிவியலைப் பற்றிய ஒரு அறிமுகம் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன்.

இன்றைய அறிவியலின் பல விதிகளும்(Laws) கோட்பாடுகளும்(Theories) கிரேக்கர்கள் முன்மொழிந்தவை. அதோடு, அறிவியலில் பயன்படுத்தப்படும் பல குறியீடுகளும் கிரேக்க மொழியினது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தற்கால அறிவியலுக்கு கிரேக்கர்களே அதிகாரப்பூர்வமான முன்னோடிகளாய்க் கருதப்படுகின்றனர்.

அறிவியலைப் பொறுத்தமட்டில், எந்த நிலையிலும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளச் சற்றும் தயங்கியது இல்லை. இன்று கோட்பாடாகவோ(Theory) மாதிரியாகவோ(model) இருக்கும் ஒன்று நாளை தவறு என நிரூபிக்கப்படலாம். அவ்வாறு பல கோட்பாடுகளும் மாதிரிகளும் தவறு என நிரூபிக்கப்பட்டும் இருக்கின்றன. உதாரணமாக, அணு என்பது பிளக்க முடியாதது என்ற கருத்து நாளடைவில் தவறென நிரூபிக்கப்பட்டு இன்று உலகையே அச்சுறுத்தும் அணு சக்தியே உருவாக்கும் அளவுக்கு வந்திருக்கிறது.

இதனால் அறிவியலின் மீதான நம்பகத்தன்மையில் கேள்வி எழ வாய்ப்பிருக்கிறது. பலர் இதைக் காரணம் காட்டியே அறிவியலைக் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் அறிவியல் மாற்றங்களுக்கு இடமளித்து ஒழுங்கான முறையில் வகுத்தமைக்கப்பட்டுள்ளது. அறிவியலில் விதிகள்(Laws) மற்றும் கோட்பாடுகள்(Theories) என்று உண்டு. விதிகள் என்பவை முழுமைபெற்றவை; மாறாதவை. கோட்பாடுகள் என்பவை தற்காலிகமானவை; அந்தந்தக் காலகட்டங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தற்காலிகமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டவை; அவை நிரூபிக்கப்படும் போது விதிகளாய் முழுமைபெறும்.

அறிவியலைப் பற்றிச் சொல்லும் போது ஆத்திகமும் உள்ளே நுழைந்து விடுகிறது. அறிவியலும் ஆத்திகமும் எல்லா காலத்திலும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு தான் இருந்திருக்கின்றன. ‘சூரியன் பூமியைச் சுற்றி வரவில்லை; பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது’, என்று சொன்னதற்காக பூமியின் புனிதத்தைக் குறைப்பதாகச் சொல்லி, கலிலியோவை போப் ஆண்டவரிடம் மண்டியிடச் செய்து வீட்டுக்காவலில் வைத்ததிலிருந்து ஆத்திகமானது அறிவியலார்கள் மீது பல நிலைகளில் அடக்குமுறையைக் கையாண்டு இருக்கிறது. ஆனால் வழியில்லாமல் தனது பல நிலைப்பாடுகளை ஆத்திகம் மாற்றிக் கொள்ளவும் நேர்ந்திருக்கிறது.

நிலையில்லாக் கோட்பாட்டை விளக்குவதற்கு முன் அது உருவாகக் காரணமான வரலாற்றைத் தெளிவு படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதற்கு குறைந்தபட்சம் நாம் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டு முன்பாவது போக வேண்டியுள்ளது.
கி.மு.340ல் கிரேக்க அறிவியல் அறிஞர் அரிஸ்டாட்டில்(Aristotle), பூமியானது தட்டையானது(Flat) இல்லை; கோள(Sphere) வடிவமானது என்பதை கிரகணங்களுக்கு(eclipses) அவர் அளித்த விளக்கங்களின் மூலம் எடுத்துச் சொன்னார். மேலும் சூரிய கிரகணமானது(Solar eclipse) (ஒரே நேர்கோட்டில்) சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் நிலவு வருவதால் ஏற்படுகிறது என்றும், சந்திர கிரகணமானது(Lunar eclipse) (ஒரே நேர்கோட்டில்) சூரியனுக்கும் நிலவிற்கும் நடுவில் பூமி வருவதால் ஏற்படுகிறது என்றும் விளக்கம் கொடுத்தார்.

இதன்மூலம் கிரகணங்கள் புனிதமான நிகழ்வுகள் அல்ல; இயற்கையான நிகழ்வுகளே என்றும் விளக்கினார். இருந்தும் இன்றுவரை கிரகணங்களுக்குப் பல கதைகளும் விளக்கங்களும் அதன் வழிவந்த மூட நம்பிக்கைகளும் உலகளவில் பரவலாக இருந்து வருகின்றன.

அரிஸ்டாட்டில், பூமி இந்தப் பிரபஞ்சத்தின் மையத்தில் நிலையாக(stationary) உள்ளது என்று கருதினார்.

அரிஸ்டாட்டிலின் இந்தக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் வந்த தாலமி(Ptolemy), ஒரு வானவியல் மாதிரியை (Cosmological model) உருவாக்கினார். எட்டு கோளங்களைக்(Spheres) கொண்ட இந்த மாதிரியில், நிலையான பூமியைச் சூரியனும் நிலவும் மற்ற கோள்களும்(Planets) நட்சத்திரங்களும் தத்தமது வட்டப் பாதைகளில் சீரான இயக்கத்தில் சுற்றி வருவதாக இருந்தது. இந்த எட்டுக் கோளங்களுக்கு அப்பாற்பட்ட பகுதி மனிதனால் புரிந்து கொள்ள முடியாதது என்றும் நம்பப்பட்டது. இந்த மாதிரியில் பல குறைகள் இருந்தாலும், வேதக் கருத்துகளோடு ஒத்துப் போவதால் அப்போதைய கிறிஸ்துவ சபையால் இந்த மாதிரி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கி.பி.1514ல் கிறிஸ்தவ மதபோதகரான கோபர்நிகஸ்(Copernicus), சூரியனை நிலையாக மையத்தில் கொண்டு பூமியும் மற்ற கோள்களும் நட்சத்திரங்களும் வட்டப்பாதைகளில் சுற்றிவருவதாக ஒரு மாதிரியைப் பல எதிர்ப்புகளுக்கிடையே வெளியிட்டார். ஆனால் இதில் சுற்றுப்பாதைகளின்(Orbits) மீதான கணிப்புகள்(predictions) அவதானிப்புகளோடு(observations) ஒத்துப்போகவில்லை என்ற குறை இருந்தது.

கி.பி.1609ல் கலிலியோ(Galileo), வியாழன்(Jupiter) கிரகத்தை தொலைநோக்கியில் அவதானித்த போது பல துணைக்கோள்கள் (நிலவுகள்) அந்தக் கிரகத்தைச் சுற்றிவருவதைக் கண்டறிந்தார். இதன்மூலம் சூரியனை, பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் (தம்மைச் சுற்றி வரும் நிலவுகளோடு சேர்ந்து) வட்டப்பாதைகளில் சுற்றி வருகிறது என்றார். இதன் மூலம் கோபர்நிகஸின் சூரிய மையக் கொள்கையை அவர் வழிமொழிந்தார். அதே நேரத்தில் மற்றொரு அறிவியல் அறிஞர் கெப்ளர்(Kepler), கோள்கள் சூரியனை வட்டப்பாதையில்(Circle) சுற்றி வரவில்லை; நீள்வட்டப் பாதையில்(Ellipse) சுற்றி வருகின்றன என்ற கருத்தை வெளியிட்டார்.

நீள்வட்டப் பாதையின் ஒரு குவியத்தில்(Focal point) சூரியனைக் கொண்டு சூரியனைச் சுற்றிவரும் கோள்கள், சூரியனுக்கு அருகாமையில் செல்லும் போது வேகமாகவும் விலகிச் செல்லும் போது மெதுவாகவும் செல்கின்றன என்பதையும் அவர் நிரூபித்தார். இந்தக் கணிப்புகள் அவதானிப்புகளுடன் ஒத்துப் போவதால் கோபர்நிகஸ் மாதிரியில் இருந்த குறை களையப்பட்டது. சூரியனைக் கோள்கள் நீள்வட்டப் பாதையினின்று விலகிச் செல்லாமல் சுற்றி வருவதற்கு சூரியனுக்கும் கோள்களுக்கும் இடைப்பட்ட ஒருவித காந்த விசைதான்(magnetic force) காரணம் என்று கெப்ளர் நம்பினார். ஆனால் இந்தக் கூற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

1687ல் நியூட்டன் மூலம் இதற்கான சரியான விளக்கம் கிடைத்தது. பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்றையொன்று ஈர்க்கின்றன என்று அவர் கண்டறிந்தார். அந்த விசைக்கு ஈர்ப்பியல் விசை(Gravitational force) என்று பெயரிட்டு, அந்த விசையானது அவற்றின் நிறைகளைப்(mass) பொறுத்தும் அவற்றிற்கிடைப்பட்ட தொலைவைப் பொறுத்தும் அமையும் என்பதையும் விளக்கினார். இந்த ஈர்ப்பு விசையே நிலவு பூமியைத் தனது நீள்வட்டப்பாதையில்  சுற்றி வருவதற்கும், பூமியும் மற்ற கோள்களும் சூரியனைத் தத்தமது நீள்வட்டப்பாதைகளில் சுற்றி வருவதற்கும் காரணம் என்பதை உணர்த்தினார். மேலும் அவர் கால-வெளியில்(Space-time) பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை விளக்கியதோடு அவற்றின் இயக்கங்களை ஆராய்வதற்குச் சமன்பாடுகளையும் (equations) தருவித்தார். நியூட்டனினின் ஈர்ப்பு விதியால் கெப்ளரின் கருதுகோளில் இருந்த குறையும் களையப்பட்டது. இவ்வாறு அறிவியல் தனது நிலைப்பாடுகளின் மீது அனுமதித்த ஆக்கப்பூர்வமான மாற்றங்களினால் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய மனிதனது பார்வையில் ஒரு தெளிவு ஏற்பட்டது. அதை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லவும் வித்திட்டது.


சரி! நியூட்டனின் ஈர்ப்பு விசை கருதுகோள்படி, நட்சத்திரங்களும் கோள்களும் ஒன்றையொன்று ஈர்த்து ஒரு நிலையில் எல்லா கோள்களும் நட்சத்திரங்களும் மோதிக் கொள்ளாதா என்ற கேள்வி நமக்கு எழ வாய்ப்பிருக்கிறது. அது பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்!

2 comments:

  1. Nandraga ulathu nanbarae.. Ungal ezhuthu nadaiyil oru thelivum gavanathai eerkum oru thanmaiyum ullathu.. Thoderenthu ungal keyboard alathu touch pad-i payan paduti puthiya puthiya aruviyal isaiyai meetungal..

    ReplyDelete