நியூட்டனின் ஈர்ப்பியல் கருதுகோள்படி, ஈர்ப்பு
விசையினால் எல்லா கோள்களும் நட்சத்திரங்களும் ஒன்றையொன்று ஈர்த்து ஒரு புள்ளியில்
எல்லாம் மோதிக் கொள்ள வேண்டுமல்லவா? இந்தக் கேள்வி அன்றைய காலகட்டத்தில் நியூட்டன்
மற்றும் அவரது ஈர்ப்பியல் கருதுகோளை ஆமோதித்தவர்கள் மீது வைக்கப்பட்டது. ஈர்ப்பியல்
விசை குறித்த நியூட்டனின் ஆய்வுகளும் அதன் வழி வந்த முடிவுகளும் ஈர்ப்பியல் விசை
குறித்த அவரது கருதுகோளுக்கு வலுவூட்டின. அதே சமயம் அவர்கள் மீது வைக்கப்பட்ட
கேள்விக்கு விளக்கம் அளிக்க முடியாமல் நியூட்டன் உட்பட அனைவரும் திணறினர்.
ஒரு கருதுகோள் அல்லது தத்துவம் மீது சந்தேகமோ
அல்லது கேள்வியோ எழுப்பப்படும் போது, அந்தக் கருதுகோள் அல்லது தத்துவத்தை
முன்மொழிந்தவர்களும் ஆமோதிப்பவர்களும் அவற்றிற்கு தரும் விளக்கங்கள், பெரும்பாலும்
அவற்றின் மூலக் கருத்தை காப்பாற்றும் நோக்கில் சொல்லப்படும் சமாளிப்பாகவே
இருக்கும். அந்தக் கருதுகோள் அல்லது தத்துவம் குறித்த விளக்கம் வலிமையானதாக
இருந்தால் மட்டுமே அவை இது போன்ற விவாதங்களில் வெற்றி பெறும். இதற்கு ஓர் உதாரணம்:
எனது இஸ்லாமிய நண்பர்கள் மதங்கள் குறித்த
விவாதங்களில் அடிக்கடி என்னைக் கோர்த்து விடுவதுண்டு. அப்பொழுதெல்லாம் நானும்
இஸ்லாமிய மதம் குறித்த எனது சந்தேகங்களை முன் வைப்பேன். அதில் ஒன்று, இஸ்லாம் கூறும்
மனிதனின் தோற்றம் குறித்த எனது சந்தேகம். கடவுள் மனிதனைக் களிமண்ணால் படைத்தார்
என்று இஸ்லாம் கூறுகிறது. கிறித்துவமும் இதைத் தான் சொல்கிறது.
கடவுள் மனிதனைக் களிமண்ணால் தான் படைத்தார்
என்றால் மனிதனின் உடல் செல்களில் சிலிகான் (silicon) போன்ற தனிமங்கள் (elements) பெரும்பான்மையான விகிதத்தில் காணப்பட வேண்டும்; மாறாக கார்பன் (Carbon) அதிக விகிதத்தில் காணப்படுவது ஏன் என்ற எனது
கேள்விக்கு விளக்கம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஒரு இஸ்லாமிய வலைத்தளத்தில்
கொடுக்கப்பட்ட விளக்கத்தினை மேற்கோள் காட்டினர்.
அதாவது, களிமண்ணால் படைத்தார் என்று சொன்னால்
அதற்கு நேரடியான பொருள் எடுத்துக் கொள்ளக் கூடாதாம். களிமண்ணில் விரவிக் கிடக்கும்
இரும்பு(iron), மக்னீசியம், துத்தநாகம்(zinc) மற்றும் கால்சியம் போன்ற சத்துப் பொருட்களிலிருந்து
(தாதுப் பொருட்கள்-minerals) படைத்தார் என்று பொருள் கொள்ள வேண்டுமாம். களிமண்ணால்
வார்த்து உருவாக்கினார் என்பதற்கும் இந்த விளக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று என்னைக்
கேட்க வேண்டாம். மேலும் அல்-குரானின் இப்படிச் சில வசனங்கள் வருகின்றன.
அத்தியாயம்-112: ஸூரத்துல் இஹ்லாஸ்(ஏகத்துவம்)
வசனம் 2: (அல்லாஹ்) எத்தேவையுமற்றவன்
வசனம் 4: அன்றியும், அவனுக்கு நிகராக எவருமில்லை
எத்தேவையுமற்ற எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒரு
படைப்பை உருவாக்க உப பொருட்கள் தேவைப்படுவது ஏன் என்று எனக்கும் குழப்பம்
நிலவுகிறது. நம்பிக்கையின் அடிப்படையிலான இதுபோன்ற வெகுஜன விளக்கங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமான
முடிவைத் தரப் போவதில்லை.
ஆனால் நியூட்டனும் அவரது கருதுகோளை ஆமோதித்தவர்களும்
இது போன்ற கதைகள் தயாரிக்கும் தவறுகளை செய்யவில்லை. மேலும் நியூட்டனின் கருதுகோள் தவறென்று சொல்ல இயலாதவாறு அவதானிப்புகளுடன் ஒத்துப் போனதால் அதற்கான அவசியமும் இல்லாமல் போனது. அவர்கள் அறிவியல் பூர்வமான அணுகுமுறையையே மேற்கொண்டாலும் அவர்களால்
சரியான காரணத்தைச் சொல்ல முடியவில்லை. நியூட்டனின் ஈர்ப்பு விசை கருதுகோளின் படி ஈர்ப்பு
விசையால் அனைத்தும் ஒரு நிலையில் மோதிக் கொள்ளும் என்ற காரணத்தினால் பிரபஞ்சமானது நிலையாக
இருக்க முடியாது என உணர்ந்தவர்கள் நியூட்டனின் கருதுகோளை சிறிது மாற்றம் செய்ய
முனைந்தனர். பிரபஞ்சமானது நிலையாக இருக்கிறது என்ற வகையிலேயே அவர்கள் இதற்கு விடை
காண முயற்சித்தனர். எனவே, ஈர்ப்பு விசையானது மிக அதிக தொலைவுகளுக்கு இடைப்பட்ட
பொருட்களுக்கு விலக்கு விசையாக (repulsive force) அமையும் என நியூட்டன் ஈர்ப்பியல் கருதுகோளை
மாற்றி அமைக்க முற்பட்டனர். கோள்களின் இயக்கம் பற்றிய கணிப்புகளைப் பாதிக்காத
வகையில், பிரபஞ்சத்தில் கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் முடிவிலாப் பரவலானது (infinite
distribution) சம நிலையில் (equilibrium) இருப்பதற்கு இதுவே சரியான காரணமாக இருக்குமெனக்
கருதினர் (அதாவது, அருகிலுள்ள பொருட்களின் ஈர்ப்பு விசையானது மிக அதிக தொலைவிலுள்ள
பொருட்களின் விலக்கு விசையால் சமன் செய்யப்பட்டு சம நிலையில் இருக்குமென்று
கருதினர்).
ஆனால், சில பகுதிகளில் உள்ள நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று மிக அருகில்
இருந்தால் ஈர்ப்பு விசை மிக அதிகமாகி அவை மோதிக்
கொள்ளும். அதே சமயம், சில பகுதிகளில் உள்ள நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று மிக அதிக
தொலைவுகளில் இருந்தால் அவை ஒன்றையொன்று
விலக்கி இன்னும் வெகு தொலைவில் தள்ளி விடும். இதனால் அவர்கள் கருதிய முடிவிலா
மற்றும் நிலையான பிரபஞ்சம் (infinite static
universe) என்பது சாத்தியமற்றதாகக் கருதப்பட்டது.
நியூட்டனின் ஈர்ப்பியல்
கருதுகோள் உண்மையெனக் கொண்டால் இந்தப் பிரபஞ்சத்தில் பொருட்களும் கோள்களும்
நட்சத்திரங்களும் மோதிக் கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்ன? பிரபஞ்சம் நிலையானது
இல்லையெனில் உண்மையில் அது எத்தன்மை கொண்டது? அடுத்த கட்டுரையில் காண்போம்.
No comments:
Post a Comment