Wednesday, April 30, 2014

கவிஞர் கலாப்ரியா

நான் இடைகால் மீனாட்சி சுந்தரம் ஞாபகார்த்த மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகள் படித்தேன். எங்களுக்கு திருமதி. சரஸ்வதி என்று கணித ஆசிரியை ஒருவர் இருந்தார். ஒருநாள், எங்கள் வகுப்பில் கடையநல்லூரைச் சேர்ந்த மாணவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று மற்ற மாணவர்களிடம் கேட்டிருக்கிறார். அவர்களும் என்னைச் சொல்லியிருக்கின்றனர். அவரும் என்னை அழைத்து வருமாரு கேட்டிருக்கிறார். எனது நண்பர்கள் என்னிடம் வந்து “டேய்! மேத்ஸ் மேடம் உன்ன கூப்டுறாங்க. இப்ப என்ன பண்ணித் தொலச்ச? போ. ரவுண்டு கட்ட போறாங்க”, என்று சொல்லி அவரிடம் அனுப்பி வைத்தனர்.

பள்ளியில் பிரச்சினைக்குரிய மாணவர்களில் நானும் ஒருவன். ஏதாவது ஒரு பிரச்சினையில் தெரிந்தோ தெரியாமலோ மாட்டிக் கொண்டு நிறைய வாங்கி! இருக்கிறேன். அதனால் ‘அப்டி என்ன பண்ணோம்?’ என்ற குழப்பத்துடனும் பயத்துடனும் அவரைச் சந்திக்கச் சென்றேன். 

அவரும் என்னை அழைத்து ஒரு தபால் உறையைக் கொடுத்து, பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்கையில் கடையநல்லூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒரு நபரிடம் அதைக் கொடுக்கச் சொன்னார். “அங்க போய் கலாப்ரியா சார் இல்லாட்டி சோமசுந்தரம் சார்னு கேளு; சொல்லுவாங்க” என்று சொல்லி அனுப்பி வைத்தார். ‘எதுக்கு ரெண்டு பேர் சொல்றாங்க’ என்று எனக்கொரு சந்தேகம்.

நானும் அங்கு சென்று ஒரு வங்கி அலுவலரிடம் “கலாப்ரியா சார் எங்க இருப்பாங்க”, என்று கேட்டேன். தெரியாது என்ற வகையில் தலையாட்டினார். “சோமசுந்தரம் சார்???”, என்று மறுபடியும் கேட்டேன். ஒரு மாதிரி முறைத்தவாறு ஒருவரை நோக்கிக் கையை நீட்டினார். நானும் அவரிடம் சென்று “மேத்ஸ் மேடம் கொடுக்க சொன்னாங்க”, என்று சொல்லிக் கொடுத்து விட்டேன்.

இதுதான் ஒரு பிரபல எழுத்தாளருடனான எனது முதல் சந்திப்பு (அதன் பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை). அவருக்கு என்னையோ இந்த நிகழ்வையோ நினைவிருக்க துளிகூட வாய்ப்பில்லை.

எங்கள் பள்ளியின் ஆண்டு மலருக்கு எங்களது கணித ஆசிரியை தான் பொறுப்பாசிரியர். கவிதை ஓவியம் கட்டுரை என மாணவர்கள் படைப்புகளை அவரிடம் சமர்ப்பிக்கச் சொல்லியிருந்தனர். நானும் மூட நம்பிக்கைகளைச் சாடும் வகையில் கவிதை என்ற பெயரில் ஒன்றை எழுதிக் கொடுத்தேன். அவர் என்னை அழைத்து விசாரித்தார். “ஒனக்கு என்ன ஆம்பிஷன்”, என்று கேட்டார். ஒருமுறை எனது இயற்பியல் ஆசிரியரிடம் “எனக்கு ஆம்பிஷன் எதுவும் இல்லை”யென்று சொன்னதற்கு, “நீ உருப்ட மாட்ட” என்று அவரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன். இந்த முறை அப்படி ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே, நான்கு மணிரத்னம் படங்கள் பார்த்த வேகத்தில் “சினிமா டைரக்டர் ஆகணும்”, என்று சொல்லிவிட்டேன்.

“சரி! சரி! கவிதை எழுதணும்னா நெறய கவிதை புஸ்தகம் படி; ஒனக்கு நெறய தெரிய வரும்”, என்று அறிவுரை சொல்லி விட்டு அனுப்பி வைத்தார். ‘விளையாட்டுக்கு நாம கவிதைனு எழுதிக் கொடுத்தோம். எதுக்கு இவ்ளோ அட்வைஸ் பண்றாங்க?’ என்று நினைத்துக் கொண்டேன். எனது கவிதையும் நிராகரிக்கப்பட்டது. நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பின்பொரு நாள், நண்பனின் வீட்டில் ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். தலைப்பு நினைவில்லை. கலைஞர் உட்பட பிரபல எழுத்தாளர்கள் தங்களது முதல் காதலைப் பற்றி எழுதியிருந்தனர். அதில் கவிஞர் கலாப்ரியாவின் எழுத்தும் இடம்பெற்றிருந்தது. அப்போது தான் அவர் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

அதன்பிறகு தான் புத்தகங்கள் மீது எனக்கு நாட்டம் வந்தது. அப்போதும் வைரமுத்து, சுஜாதா, வாலி, கண்ணதாசன் என சினிமா தொடர்புடைய எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தான் தேடி சென்றேன். அப்படியே தொட்டுத்தொட்டு பல புத்தகங்களை வாசிக்கலானேன்.

கல்லூரி படிக்கும் சமயத்தில் ஆனந்த விகடனில் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு குறித்த அறிவிப்பு செய்திருந்தார்கள். அதில் இடம்பெற்றிருந்த எழுத்தாளர்கள் பட்டியலில் கவிஞர் கலாப்ரியாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. நானும் எதிர்பார்த்து பல வாரங்கள் விகடன் வாங்கிப் படித்தேன். அந்த இதழ்களிலெல்லாம் அவரது சிறுகதை வரவில்லை. பின்பு பாக்கெட் மணி பற்றாக்குறையால் விகடன் வாங்குவதையும் நிறுத்திவிட்டேன்.

நான் இது வரை அவரது புத்தகங்கள் படித்ததில்லை என்ற வருத்தம் இருக்கிறது. ஆனால் அவரது இப்போதைய ஃபேஸ்புக் வருகை அதைக் கொஞ்சம் குறைத்துவிட்டது. தினமும் குறைந்தது ஐந்து கவிதைகளாவது பதிவு செய்கிறார். நானும் அவரது கவிதைகளுக்கு தீவிர வாசகனாகிவிட்டேன்.

எனது இலக்கிய ஆர்வத்திற்கு அவரும் அவரது மனைவியான எனது கணித ஆசிரியையும் காரணம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நான் எதிர்காலத்தில் இலக்கியவாதி ஆவேனா என்று தெரியவில்லை. ஆனால் இன்று நான் பார்க்கும் உத்தியோகம் எனக்கு கிடைத்ததற்கு எனது அரைகுறை கவிதைகளும் ஒரு காரணம். நேர்முகத் தேர்வில் ஆங்கிலத்தில் பேசத் திணறியவன் இந்த அரைகுறை இலக்கிய ஞானத்தை வைத்துச் சமாளித்து விட்டேன். அதற்கு அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

பொதுவாக நம்முடைய இலக்கியப் பரிட்சயம் சினிமா பாடல்கள் மற்றும் வார இதழ்களோடு முடிந்து விடுகின்றன. அப்படியே போனாலும் மேலை நாட்டு எழுத்தாளர்கள் தான் அனைவரின் கண்முன் தோன்றுவர். அதனால் தான் இத்தகைய ஒரு எழுத்தாளரைப் பற்றி இலக்கியவாதிகளைத் தவிர வேறு எவரும் அவ்வளவு அறிந்திருக்கவில்லை. சினிமா மற்றும் ஊடகங்களினால் பிரபலமானவர்களின் எழுத்துளுக்குக் கிடைக்கும் விளம்பரமும் வரவேற்பும் கூட தரமான எழுத்தாளர்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது.

தரமான இலக்கியவாதிகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது இலக்கிய உலகில் உள்ள ஒவ்வொருவரின் தலையாயக் கடமை. வளர்ந்துவிட்ட தொழில்நுட்பத்தின் உதவியோடு இதைச் செய்வது எளிதுதான். எழுத்தாளர்களும் பதிப்பகத்தினரும் பணம் பார்ப்பதையும் விளம்பரம் தேடுவதையும் தாண்டிச் சிந்தித்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

No comments:

Post a Comment