Sunday, July 27, 2014

திரையிசைப் பாடல்களில் இலக்கியம் - கண்ணதாசன்

தமிழ் திரைத்துரையில் கண்ணதாசன் செய்துள்ள தமிழ்த்தொண்டு அளப்பரியது. அவர் திரையிசைப் பாடல்களில் இலக்கியம் சமைத்துள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.

ஏதோ வார்த்தை விளையாட்டு போல் இருக்கும் ஒரு பாடலில் ஒரு நாடகமே போட்டுவிடுவார் அல்லது ஒரு கதை சொல்லிவிடுவார். பல பாடலகள் ஆழ்ந்து யோசித்தாலே பாடல்களின் இலக்கிய நயம் தெரியவரும் அப்படிப்பட்ட ஒரு பாடலைப் பார்க்கலாம்.


அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப் போல் பெண்ணல்லவோ நீ
என்னைப் போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக் காய்

மாதுளங்காய் ஆனாலும்
என்னுள்ளங்காய் ஆகுமா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவா
என்னுயிரும் நீயல்லவா

இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த
ஏலக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும்
இவளைக் காய்

உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம்
வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம்போல்
தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ
ஒவ்வொரு பேர்ச் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே நீ சிரித்தாயோ

கோதை என்னைக் காயாதே
கொற்றவரங்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையிலேங்காய் வெண்ணிலா.

பாடலைப் பார்ப்பதற்கு முன் பாடலுக்கான சூழல்...

முதலிரவு அன்று.... பால்கனியின் ஒரு கோடியில் காதலன்(கணவன்) மறுகோடியில் காதலி(மனைவி) நடுவில் வெண்ணிலா. இருவருக்கும் ஊடல்(செல்லச் சண்டை) ஆதலால் வெண்ணிலவை இடைத்தரகராகவைத்து ( நிலாவிடு தூது) இருவரும் பேசிக்கொள்கிறார்கள் (சண்டைபோட்டுக்) கொள்கிறார்கள்.

இந்தப் பாடலில் காய் என்ற சொல் காய்கறி (vegetable) என்ற பொருளில் ஓரிரு இடங்களில் மட்டுமே வருகிறது.

காய் என்ற சொல் 'ஆய்' என்ற முன்னிலை வினைவிகுதியாக பலவிடங்களில் பயண்படுத்தப்பட்டுள்ளது. 'எனக்காய்' என்பது எனக்காக என்று பொருள்படும் இதே தொனியில் கன்னிக்காய் (கன்னிக்காக), ஆசைக்காய்(ஆசைக்காக) என்று பொருள்பட பல இடங்களில் அமைந்துள்ளது.

முக்கியமாக பல இடங்களில் காய் என்பது சுடு, கோபப்டு, திட்டு, எரி, வருத்து, வெறு, பிரகாசமாக ஒளி வீசு என்ற பொருள்களில் கையாளப்படுகிறது.

நிலவு காய்கிறது நிலவொளியில் குளிர்ச்சி இல்லை. எனவே நிலவு எரிப்பது போல் உள்ளது.

முதலில் பெண் சுடுவது(வருத்துவது) போல் பிரகாசிக்கும் நிலவைப்பார்த்துப் பாடுகிறாள்.

பெண் : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
        இத்திக்காய் காயாதே
        என்னைப் போல் பெண்ணல்லவோ நீ
        என்னைப் போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் - அத் திக்காய் (திக்கு -திசை) அந்தப் பக்கமாய். காய் காய் - சுடு, சுடு. ஆலங்காய் - ஆலம்(விஷம்) போல் கொடுமையோடு சுடுகின்ற. வெண்ணிலவே. இத்திக்காய் - இத் திக்காய் - இந்தப் பக்கமாய்(என் திசையில்)  காயாதே - சுடாதே நீ என்னப்போல் பெண்ணல்லவோ.( நீயும் என்னைப்போல்வே பெண்தானே ஆதாலால் அந்தப் பக்கமாய் இருக்கு அந்த ஆளைச்(காதல்னைச்) சுடு என் திசையில் சுடாதே என்கிறாள் வெண்ணிலாவிடம்)

ஆண்: அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
      இத்திக்காய் காயாதே
      என்னுயிரும் நீயல்லவோ
  என்னுயிரும் நீயல்லவோ

அதற்குத் தலைவன். நிலவைப் பார்த்து சொல்வது போல் தலைவியை நோக்கி என்னை நீ காயாதே(கோபப்படாதே) என்கிறான்.

பெண் : கன்னிக்காய் ஆசைக்காய்
        காதல் கொண்ட பாவைக்காய்
        அங்கே காய் அவரைக்காய்
        மங்கை எந்தன் கோவைக் காய்

கன்னிக்காய் - இந்த கன்னிக்காக ஆசைக்காய் - அவளது ஆசைக்காக காதல் கொண்ட பாவைக்க்காய் - காதல் கொண்ட இந்தப் பாவை(பெண்ணு)க்காக அங்கே காய் - அங்கே சுடு அவரைக்காய் - என் காதலனை(அவரை)ச் சுடு
மங்கை எந்தன் கோவைக்காய் - மங்கையாகிய என்னுடைய ("கோ" - அரசன்) தலைவனைக் காய்.

ஆண்: மாதுளங்காய் ஆனாலும்
      என்னுள்ளங்காய் ஆகுமா
      என்னை நீ காயாதே
      என்னுயிரும் நீயல்லவா
      என்னுயிரும் நீயல்லவா

மாதுளங்காய்  ஆனாலும்- மாது(பெண்) உளம்(உள்ளம்) காய் - பெண்ணாகிய உன் உள்ளம் காயாக இருப்பினும்
என்னுளம் காய் ஆகுமா - என்னுடைய உள்ளம் காய் ஆகுமோ? (ஆகாது கனி போன்றது)
என்னை நீ காயாதே (கோபிக்காதே) என்னுயிரும் நீயல்லவா.

ஆண் : இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த
       ஏலக்காய்
       நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும்
       இவளைக் காய்

இரவுக்காகவும் நம் உறவுக்காவும் ஏங்குகின்ற இந்த ஏழையேனுக்காக
(நிலவே) நீயும் சுடு நிதமும் சுடு நேரில் நிற்கும் இவளைச் (காதலியைச்) சுடு.

பெண் : உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
       என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

உருவம் காய் ஆனாலும் - தோற்றத்திற்கு நான் கோபிப்பது போல் தோன்றினாலும் பருவம் காய் ஆகுமா - இந்த சூழ்நிலையில்(முதலிரவு) என் பருவம்  காரணமாக நான் கோபமாக இல்லை. என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவா என்கிறாள் காதலி.

முதல் சரணத்தில் காதலி கோபிக்க காதலன் சமாதனப்படுத்துகிறான். இரண்டாவது சரணத்தில் காதலன் தன் மீது சற்று எரிச்சலுருகிறான் (தன்னை சுட சொல்கிறான் நிலவிடம்) எனும்போது அவள் சமாதனத் தூது விடுகிறாள்.
சமாதானமடைந்த காதலன் பாடுகிறான்.

பெண் : ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம்
        வாழக்காய்
        ஜாதிக்காய் பெட்டகம்போல்
        தனிமை இன்பம் கனியக்காய்

ஏலக்காயினது வாசனையைப் போல் எங்கள் உள்ளம் வாழவேண்டும் அதற்க்காக நிலவே நீ காய்.
ஜாதிக்காய்ப் பெட்டகம் எப்படித் தனித்தனியே பிரிந்திருக்கிறதோ அப்படி நாங்கள் இருவரும் மற்றவரிடமிருந்து தனித்து இருக்க நிலவே நீ காய்.

ஆண் : சொன்னதெல்லாம் விளங்காயோ
       தூதுவிளங்காய் வெண்ணிலா
       என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

(நான்) சொன்னதெல்லம் விளங்காயோ (விளங்கிக் கொண்டாயா)
தூதுவிளங்காய் வெண்ணிலா - நாங்கள் விட்ட தூதினை விளங்காமல் இருக்கும் வெண்ணிலா. (என்றதும் காதலி சற்று முறைக்கிறாள்)
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லாவோ (இப்பொழுது நான் உன்னைப் பார்த்து பாடவில்லை நிஜமாகவே நிலவைப் பார்த்துத் தான் பாடுகிறேன் என்னை இதற்க்காக கோபிக்காதே என்கிறான்)

இன்னும் ஊடல் தீரவில்லையாதலால்

ஆண் : உள்ளமெல்லாம் மிளகாயோ
       ஒவ்வொரு பேர்ச் சுரைக்காயோ
       வெள்ளரிக்காய் பிளந்தது போல்
       வெண்ணிலவே நீ சிரித்தாயோ

உள்ளமெல்லாம் மிளகாயோ - உள்ளமெல்லாம் இளகாயோ - கொஞ்சம் எனக்காக உள்ளம் உருகமாட்டாயா
ஒவ்வொரு பேச் சுரைக்காயோ - ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ - ஏதாவது பேசமாட்டாயா (என்று அவன் சொல்ல அவள் பொய்க் கோபம் விடுத்து சிரித்துவிடுகிறாள்)
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே (காதலியே) நீ சிரித்தாயோ.

பெண் : கோதை என்னைக் காயாதே
        கொற்றவரங்காய் வெண்ணிலா
ஆண் : இருவரையும் காயாதே
        தனிமையிலேங்காய் வெண்ணிலா.

கோதை என்னைக் காயாதே கொற்றவரங்காய் வெண்ணிலா - கோதை (பெண்) என்னைக் சுடாதே கொற்றவர் (அரசர், தலைவர்) அங்காய் - அங்கு இருக்கிறார் அவரை காய் வெண்ணிலா என்கிறாள் பெண்.

(இப்படியே மாறி மாறி சண்டையிட்டால் இது முடிவடையாது என்று உணர்ந்த காதலன் ஊடலை இத்துடன் முடித்துக்கொள்ள நினைத்து)

இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா - எங்கள் இருவரையும் நீ சுடவேண்டாம் தனிமையிலேயே நீ காய்ந்துகொண்டு இரு.

என்று வெண்ணிலவைக் களட்டிவிட்டு இருவரும் பள்ளியறை சேர்கிறார்கள்.
பாடலில் ஒரு சிறு நாடகமே நடத்திக் காட்டிவிடுகிறார் கவிஞர்.
இதில் விளங்காய், கொற்றவரங்காய், தூதுவிளங்காய், மாதுளங்காய், மிளகாய், சுரைக்காய், அத்திக்காய், அவரைக்காய் என்ற காய்களை அவர் கையாண்டுள்ள விதம் அற்புதம்.

ஏன் இப்படி ஆணும் பெண்ணும் (காதலன் காதலி) இப்படி அடிக்கடி சண்டையிடுகிறார்கள் பின்பு கூடிக்கொள்கிறார்கள் ஒரே மாதிரி அன்போடே இருக்ககூடாதா என்று வள்ளுவரைக் கேட்டல் அவர்..... இவிங்களுக்கு இதாம்பொழப்பு சண்டபோடுவாய்ங்க, சமாதானமாவாய்ங்க அப்பரமா கூடுவாய்ங்க அதெல்லா ஒனக்கெதுக்கு நீ போய் ஓம்பொழப்ப பாருன்னுட்டார்.

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் கண்ட பயன்.

குறள் - 1109

No comments:

Post a Comment