Thursday, July 24, 2014

'WITH YOU, WITHOUT YOU' திரைப்படம்-எனது பார்வையில்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஃபியொதார் தாஸ்தயெவ்ஸ்கியின் (Fyodor Dostoyevsky) ‘வெண்ணிற இரவுகள்’ (White Nights) வாசித்துக் கொண்டிருக்கும் போது ஓர் அழைப்பு வந்தது. “ நாளைக்கு பனுவல்-ல ‘With you, Without you’ ஸ்க்ரீன் பண்றாங்க. போலாமா?”. “ம்ம்ம். கண்டிப்பா போலாம்.”, என்றேன். “ம்ம்ம்.. அந்தப் படம் பத்தி படிச்சேன். ஃபியொதார் தாஸ்தயெவ்ஸ்கியோட ‘A Gentle Sprit’ நாவலத் தழுவி எடுத்த படமாம். லிங்க் அனுப்புறேன். படிச்சுட்டு வா. நல்லா இருக்கு” என்றான். “படிச்சுட்டு வந்தா இன்டரெஸ்ட் இருக்காது. படம் பாத்துட்டு அப்புறம் புக் படிச்சுக்கிறேன்”, என்று சொல்லிவிட்டு கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்து என்ன ஒரு co-incidence என்று நினைத்துக் கொண்டேன். ‘வெண்ணிற இரவுகளை’ வாசித்து முடித்த போது  இந்தக் கதை பரிட்சயப்பட்ட கதையாக தோன்றியது. அப்போது தான் நினைவுக்கு வந்தது. இயக்குநர் SP ஜனநாதனின் இயக்கத்தில் ஷாம், குட்டி ரேவதி.. சாரி.. சாரி.. குட்டி ராதிகா மற்றும் அருண் விஜய் நடிப்பில் வந்த ’இயற்கை’ திரைப்படத்தின் மூலக்கதை இந்த நாவல் தான். கதையைக் கதைக் களத்திற்கேற்ப அற்புதமாக மாற்றம் செய்திருக்கிறார் இயக்குநர். 

With you, Without you’ திரைப்படத்தின் திரையிடலை ஒருமுறை தவறவிட்டதால் எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று பனுவல் புத்தக நிலையத்திற்குச் சென்றேன். ஆவணப் பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் திரைப்படம் குறித்த அறிமுகம் கொடுத்தார். ஆவணப்பட இயக்குநர் ராகுல் ராயின் ‘When four friends meet’ மற்றும் ‘Majma’ ஆகியவற்றின் திரையிடலின் போது நடந்த விவாதத்தில் அவருடன் நானும் கலந்து கொண்டேன் என்பதால் அவர் கொடுத்த அறிமுகம் போதுமானதாக இருந்தது.

ஏற்கனவே இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருந்து திரையரங்க உரிமையாளர்களின் அச்சத்தால் படம் திரையிடப்படுவது கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. படம் இன்னும் சில நாட்களில் இந்தியா முழுவதும் வெளியாகவிருக்கும் நேரத்தில் படத்தின் எக்ஸகியூட்டிவ் புரொடியூசர் ராகுல் ராயிடம் (மேற்சொன்னவர் தான்) சிறப்பு அனுமதி பெற்று பரிசல். சிவ. செந்தில்நாதன் மற்றும் ஆர்.பி. அமுதன் ஆகியோர் இந்தத்திரையிடலை நிகழ்த்தினர்.

கதை இலங்கையின் தேயிலைத் தோட்டங்களின் அருகே ஒரு கிராமத்தில் நிகழ்வதாய் அமைந்துள்ளது. நகை அடகுக் கடை நடத்தி வரும் ஒரு சிங்கள இளைஞன்; போரில் குடும்பத்தை இழந்த ஆதரவற்ற ஓர் ஈழ இளம்பெண். இருவருக்குமான சந்திப்பில் தொடங்கும் கதை நாயகனைப் பற்றிய எந்த விவரமும் தெரியாத போதும் அவனது காதல் வேண்டுகோளை ஏற்கும் நாயகி திருமணமும் செய்து அவனோடு வந்து விடுகிறாள். இருவருக்குள்ளும் காதல் இருந்த போதும், தனது சிறுசிறு விருப்பங்களை உதாசீனப்படுத்தும் நாயகனோடு வாழப் பழகிக் கொள்கிறாள். ஒரு சமயத்தில் நாயகன் யார் என்கிற உண்மை தெரிந்துவிடவே அவன் மீது பயமும் வெறுப்பும் கொள்கிறாள். மறைத்த காரணத்தை விளக்கும் நாயகன், கடந்த காலத்தை மறந்து அவளோடு தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாய் வாழ விரும்புவதாய்க் கூறி அவளிடம் கெஞ்சுகிறான். அவனை விட்டுச் சென்றுவிட நினைக்கும் நாயகி முடியாமல் அவனிடமே திரும்பி வருகிறாள். வரும் நாட்களில் நாயகனின் காதலைப் புரிந்து கொள்ள நினைக்கும் அவள், அவனை ஏற்றுக் கொள்ள நினைக்கிறாள். ஆனால் அவன் மீது ஏதோ ஒரு வெறுப்பும் பயமும் கொண்டு அவனை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள். இந்த மனப் போராட்டத்தின் முடிவில் அவள் என்ன முடிவெடுக்கிறாள் என்பதே கிளைமாக்ஸ்.

சிடு மூஞ்சியான நாயகன் அவளுக்காகத் தன்னை மாற்றிக் கொள்வதும், எந்தவொரு பெரிய லட்சியமும் இல்லாமல் முதன்முதலாக தியேட்டரில் விஜய் படம் பார்த்து வந்த சந்தோசத்தை நாயகி நாயகனிடம் சொல்வதும், அவனை மன்னித்துவிட நினைக்கும் அவள் ‘மன்னிப்பாயா’ என சினிமா பாடலை முனுமுனுப்பதும், தன் குடும்பத்தை இழந்த கதையை நாயகி விளக்குவதும், அவளை சமாதானம் செய்ய நினைக்கும் நாயகன் அவளது காலில் விழுவதும், அதற்கு அவள் பதறி விலகுவதும், அவனை மன்னிக்க முடியாததற்காக அவள் கதறுவதும் கிளாஸ்.

போர்க் காட்சிகள் ஏதும் இல்லாமல் போரின் கோரங்கள் மற்றும் இராணுவ வீரர்களின் அத்துமீறல்களை நாயகியின் உணர்வுகள் மூலம் காட்டிய இயக்குநர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். போரின் சுவடே இல்லாத இந்த மாதிரியான ஒரு பசுமையான லொகேஷனைத் தேர்வு செய்தது இயக்குநரின் அரசியலா அல்லது பட்ஜெட் காரணமா என்று தெரியவில்லை. எனினும் ஒரு சிங்களனாக கருத்துச் சுதந்திரம் கேள்விக்குள்ளான இலங்கையில் இப்படி ஒரு படம் எடுப்பதற்கு தைரியம் வேண்டும். இதற்காக நிச்சயம் அவர் பல பிரச்சினைகளைச் சந்தித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

பௌத்தனான நாயகன் கிறிஸ்தவப் பெண்ணான நாயகியைச் சர்ச்சில் இறக்கிவிட்டு திரும்ப அழைத்து வரும் போது ‘உன் கடவுளால கூட உன்ன காப்பாத்த முடில; நான் தான் உனக்கு வாழ்க்கை கொடுத்தவன்’ என்று திமிராகப் பேசுவதும், ‘உன் ஆசைய பத்தி எல்லாம் என்னால யோசிக்க முடியாது; ஏன்னா அது என்னோட ஆசைய பாதிக்கும்’ என்று சொல்லி பணம் சேர்க்க வேண்டும் என்கிற தனது ஆசை நிறைவேற அவளை ஒத்துழைக்கச் சொல்வதும் நாயகனை முழுக்க நல்லவனாகவே காட்டாமல் அவனது ஆணாதிக்கத் தனத்தைக் காட்டுவதாக யதார்த்தமாக இருக்கிறது.

படத்தின் பெரும்பான்மையான இடங்களில் (டைட்டில் கார்டு போடும் போது தவிர) பின்னணி இசை இல்லை. பின்னணி இசை இல்லாமல் காட்சியமைப்பு, ஒலிப்பதிவு மற்றும் வசனங்களின் மூலமே உணர்ச்சிகளைக் காட்டியிருப்பது அற்புதம். அந்த அளவிற்கு ஒலிப்பதிவில் நுணுக்கமாக வேலை செய்துள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் (நம்மூர் ஸ்ரீகர் பிரசாத் தான்) அற்புதம்.

ஒரு நாவலை எவ்வாறு படமாக எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். நம்மூர் இயக்குநர்கள் இந்த விசயத்தில் பிரசன்ன விதனாகேயிடம் கொஞ்சம் ‘யானை பால்’.. (ம்க்கும்.. ஞானம்..ஞானம்..) குடித்து வந்தால் நம்மூர் இயக்குநர்களுக்கு ஹாலிவுட் திரைப்படங்களின் டிவிடி தேவையிருக்காது.

நுண் அரசியல், குறியீடு, அது இதுவென்று எங்கேயோ சில டெர்மினாலஜிகளைப் படித்துவிட்டு குருட்டு அரசியல் பேசுவோரைப் புறக்கணித்துவிட்டு திறந்த மனதோடு பார்த்தால் இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் ஈழத்தமிழர்களின் அவலம் என உலக அரசியல் பேசும் ஒரு காதல் கதையைத் தந்த இயக்குநர் பிரசன்ன விதனாகே நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்.

No comments:

Post a Comment