Monday, September 1, 2014

வயிற்றெரிச்சல்

கல்லூரியில் பிரம்மாண்ட ஆடிட்டோரியம் கட்டிவிட்ட காரணத்திற்காக வருடத்தில் ஒருமுறை இரண்டு நாட்களுக்கு கல்ச்சுரல்ஸ் நடத்துவார்கள்.. இரண்டு வாரங்களுக்கு முன்பே அதற்கு இதற்கு என ஆன் டியூட்டி வாங்கி விடுதியில் ஓய்வெடுப்பதில் தொடங்கும் பரபரப்பு முந்தைய நாள் விடுதியில் ஒவ்வொரு அறையாக சென்று துணிகளைத் தேடிப்பிடிப்பதில் உச்சம் அடையும்.. காலையிலேயே வானவில்லின் ஏழு நிறங்களின் அத்தனை காம்பினேசன்களிலும் ஆடைகள் அணிந்து வலம்வருவர்.. அப்போது அந்நியன் பிரகாஷ்ராஜ் மாதிரி 7X6X5X4X3X2X1 என ஃபேக்டோரியல் எடுத்தால் கிடைக்கும் 5040 கலர்களிலும் ஆடைகளைக் காணலாம்..
ஒருமாதத்திற்கு முன்பிருந்தே அப்போதைய டிரென்ட் பாடல்களுக்கு ஆண்களும் பெண்களும் பிராக்டிஸ் செய்து ஜிகுஜிகுவென காஸ்ட்யூம் ரெடி செய்து வைத்திருப்பார்கள்.. ஆண்கள் பெண்களின் மனம் கவர்ந்த பாடல்களைத் தேர்வு செய்து ஸ்டைலாக ஆடினால் ஹிட் ஆகும்.. பெண்கள் ஆடினாலே போதும் ஹிட் தான்.. நான் பார்த்த வரை ஆண்களை விடப் பெண்கள் நன்றாகவே நடனமாடுவர்.. ஆனால் ஆண்களோ பெண்களோ எல்லா நடனங்களிலும் ஒரே மாதிரியான பாடல்களே இருக்கும்! தீம்களும் கோரியோகிராஃபியும் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, ஜோடி நம்பர் ஒன், மானாட மயிலாட ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிலிருந்து அடிபிறழாமல் காப்பி அடிக்கப்பட்டிருக்கும்..
பாடகர்களைப் பொறுத்தவரையிலும் அப்போதைய டிரென்ட் பாடல்களைப் பாடினால் ஹிட்.. ஆனால் பாடும் போது அவர்கள் கொடுக்கும் கெஸ்ச்சர் தான் தாங்க முடியாது.. அனந்த வைத்தியநாதனை ஓரங்கட்டிவிடுவார்கள்.. பெண்களின் விருப்பமான பையன் பாடவோ ஆடவோ வரும் போது ஒரு பக்கம் பெண்களின் சப்தம் ஹை பிட்சில் எகிறும்.. இதையெல்லாம் பார்த்துவிட்டு நாம் எல்லாம் தேவையில்லாமல் பிறந்துவிட்டோமா என்கிற எண்ணம் எழுந்து வயிற்றெரிச்சலுடன் வெளியேறி ஃபுட் கோர்ட் பக்கம் சென்றால் அங்கு ஒரே புகைமூட்டமாக இருக்கும்.. அங்கே ஒரு கூட்டம் காதலின் கடைசி கணங்கள் என்பது போல உருகி உருகி வறுத்துக் கொண்டிருப்பர்.. காதலியோடு இருக்கும் நம் நண்பன் கூட நம்மை யாரென்று தெரியாதது போல குனிந்த தலை நிமிராமல் பத்தினி வேசம் போட்டுக் கொண்டிருப்பான்.. டீக் கடை சென்றால் ஆடிட்டோரியத்தின் உள்ளே இருக்கவும் முடியாமல் வீட்டிற்குச் செல்லவும் முடியாமல் தவிக்கும் பேராசிரியப் பெருமக்கள் புகைவிட்டுக் கொண்டிருப்பர்.. ஹாஸ்டலில் பவர் அணைத்து இருப்பார்கள் என்பதால் அங்கும் போக முடியாது.. கடைசியாக காதலனே இல்லாத அந்த ஆயிரத்தில் ஒருத்தியைத் தேடிப் பிடித்து அதட்டி மிரட்டி அப்படியும் அசராவிட்டால் காலில் விழாத குறையாய்க் கெஞ்சி செலவுக்கு நூறோ இருநூறோ தேற்றினால் பெண் வாசமே அறிந்திராத நம் நண்பர்கள் பங்கு போட பின்னால் வந்து நிற்பர்.. சிலர் பட்ட கடனுக்காக அந்தப் பெண்ணின் காலில் விழுந்து அந்தப் பெண்ணுக்கே வாக்கப்பட்ட கதைகளும் உண்டு.. அந்தப் பெண்ணிடம் காசு வாங்கிவிட்டதைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்து நம்மை ப்ளே பாய் அளவிற்கு பேசுவர்.. வேறு வழியில்லாமல் கிடைத்த காசை வைத்து ஒரு மொக்கை தியேட்டரில் ஒரு மொக்கைப் படத்தில் நண்பர்களோடு அமர்ந்திருக்கும் தருணத்தில் உலக வாழ்க்கையில் பற்றற்று அனைத்தும் துறந்து முக்தி நிலையை அடைந்துவிடுவோம்!
பிகு : இது இலக்கியமோ புரட்சிப் போராட்டமோ அல்ல.. வெறும் வயிற்றெரிச்சல் தான்!

No comments:

Post a Comment