Sunday, May 7, 2017

ரேண்டம்-7

கண்விழித்தபோது உலகமே உறைந்திருந்தது. பின்கழுத்தில் வியர்த்து அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தது மின்விசிறி இயங்கவில்லை என்பதை உணர்த்தியது. கண்ணிமைகளை முழுமையாக திறக்கவோ, காலையா மாலையா என்கிற சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவோ மனமில்லை. வெளிப்பொருள் ஏதும் இல்லாத காரணத்தினால், எதிரே சுவரில் உறைந்திருக்கும் கடிகாரத்தின் நாடித்துடிப்பை உறுதிசெய்யும் வினாடிமுள், துடிக்கும் அவனது இதயம், பெரிதாக முயற்சியில்லாமல் இங்குமங்கும் அலையும் விழிகள், சுவாசிப்பதால் விரிந்து சுருங்கும் வயிறு போன்றவை மட்டுமே அந்தக் கணத்தில் உலகத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தான். வெளியே கதவு திறக்கப்படும் சத்தம் அவனுக்கு தான் எங்கிருக்கிறோம் என்ற பிரக்ஞையைத் தந்தது; ஆனால் எப்போது இங்கு வந்தான் என்பது நினைவுக்கு எட்டவில்லை.

அவள்தான். அறைக்குள் நுழைந்து கட்டிலில் படுத்திருக்கும் அவனைக் கண்டதும் புன்னகைத்தாள்.

"எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?", என்றபடி அவனை நெருங்கி வந்தாள். அவன் அசையவில்லை.

அவனருகில் அமர்ந்தவள் கையில் வைத்திருந்த காகிதத்தை விரித்து விபூதி எடுத்து அவனது நெற்றியில் மெல்லிய கோடிட்டாள். அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறேதும் செய்யவில்லை. கண்ணைச் சிமிட்டி புன்னகையோடு அவளது உதடுகளை அவனது உதடுகளருகே கொண்டு வந்தாள். புன்னகை கலையாது அவனது உதடுகளில் மெல்ல முத்தமிட்டாள். ஏற்கனவே மென்மையான அவளது உதடுகளால் கொடுக்கப்படக்கூடிய மிகக்குறைவான அழுத்தம் அந்த முத்தமாகத்தான் இருக்கமுடியும். அந்தக் கணநேரம் கண்கள்முடித் திறந்திருந்தாள். அவன் அசையவில்லை; நடப்பதைப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

"கவிதையோ காமமோ முத்தத்துடன் முடித்துக் கொள்வோம்", என்று பரவியிருந்த அமைதிக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

அவனது பின்னங்கழுத்தில் விரல்களை நுழைத்து வருடிக் கொடுத்தாள்.

"என்ன? எல்லாம் புதுசா இருக்கு?", என்றான்.

"எத சொல்ற?"

"திருப்பாவை, கவிதை எல்லாம்..."

"ச்ச்சும்மா!", என்றாள் மழலைக் குழைவுடன்.

"சின்ன வயசுல பாட்டிகூட சேர்ந்து மார்கழி மாசம் பெருமாள் கோவிலுக்குப் போவேன். அப்படியே பழக்கமானதுதான்"

தலைக்குக் குளித்து குதிரைவால் போட்டிருந்தாள். காதோரம் ஈரக்கற்றைகள் எஞ்சியிருந்தன.

"ஜன்னல் திறந்து வச்சுக்கலாமே?", என்றாள்.

அவள் கேட்டதும் மின்விசிறி சுழலத் தொடங்கியது. வியர்வை ஆவியாகி பின்கழுத்தில் குளிர்ச்சியை உண்டுபண்ணியது.

"கல்யாணம் பத்தி கேட்டுகிட்டே இருக்காங்கடா", என்றாள். அதுவரை உதட்டில் இருந்த புன்னகை மறைந்து கவலைக் கோடுகள் பரவின.

"பண்ணிக்க"

"Not interested. நீ என்ன நெனக்கிற?"

"பண்ணிக்க. உனக்குதான் கம்மிட்மெண்ட் ஏதும் இல்லல"

"நீ எப்ப பண்ணிக்க போற?"

"பண்ணணும். இப்ப என்ன அவசரம்?"

"யார பண்ணிக்க போற?"

"தெரியல."

"தயவுசெஞ்சு வீட்ல பாக்குற பொண்ண கட்டிக்கிறேனு ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுத்துறாத"

"ஏன் அப்படி சொல்ற"

"உனக்கெல்லாம் செட் ஆகாது. You are different. எப்படினு சொல்லத் தெரில. எல்லாப் பொண்ணுங்களாலயும் உன்னோட இருந்துட முடியாது. உன்னைப் பத்தி நல்லா தெரிஞ்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்க"

"கல்யாணம் பண்ணிக்காம எல்லாம் இருக்க முடியாதா?"

"லூசுப்பையா! You need a companion. நாளைக்கு ஏதாவது ஒன்னுனா கூட இருக்குறதுக்கு ஒரு ஆள் வேணும்ல"

"அதுக்கு ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்?"

"உனக்கு புரிய வைக்க முடியாது"

"எனக்குப் புரியுது. I don't believe in the system called 'marriage'. என்னோட இருக்குறவங்க இருக்கட்டும். எப்ப போகணும்னு நெனக்கிறாங்களோ போய்க்கட்டும். நான் தடுக்கமாட்டேன்."

"எல்லாரும் அத ஏத்துக்க மாட்டாங்க. அட்லீஸ்ட் சொஸைட்டிக்காகவாது கல்யாணம்னு ஒன்னு பண்ணிக்கணும்ல"

"சரி. அப்படின்னா யாரைக் கல்யாணம் பண்ணிக்கிறது?"

"அடிங்... உங்க ஆயாவ", என்றாள் கோபத்துடன்.

"ஏன் நேரா சொல்றதுக்கு என்ன? சுத்தி வளைச்சு சொல்ற."

"சார் மட்டும் என்னவாம்? கிஸ் எல்லாம் வாங்கிட்டு வேற எவனையோ கல்யாணம் பண்ணிக்க சொல்வாறாம்."

"நானா கொடுக்க சொன்னேன்?"

"எனக்கும் இதெல்லாம் தேவைதான்! நீ சரியான தத்தியா இருக்க. நீ இப்படி இருந்தா நான்தான் எல்லாம் பண்ணணும்"

"நான் என்ன தத்தி?"

"இந்தா! என் ரூமுக்கு வந்துட்டு நல்லா இழுத்து மூடிட்டு தூங்கிட்டு இருக்கீல்ல. எவ்ளோ நேரம்தான் இந்த மூஞ்சியவே பார்த்துட்டு இருக்குறதுனு குளிச்சுட்டு கோயிலுக்கு போயிட்டு வந்தேன். நீ என்னடா'னா இன்னும் தூங்கிட்டு இருக்க. தத்தி!"

"அதுக்குனு என்ன பண்ண சொல்ற?"

"ஒன்னும் பண்ண தேவையில்ல", என்றபடி வெடுக்கென்று எழுந்தவளது கையைப் பிடித்துக் கொண்டான். திமிறியவளைப் பிடித்து இழுத்தான். சலனமின்றி அவனது கைகளுக்குள் அடங்கிக் கொண்டாள்.


தொடரும்...

No comments:

Post a Comment