Sunday, May 7, 2017

ரேண்டம்-8

"ஏன்டா இவ்ளோ டீ குடிக்குற?"

"டீ குடிக்குறது அவ்ளோ தப்பா என்ன?"

"அப்படின்னு இல்ல. ஆனா நீ ரொம்பவே குடிக்குற. குறைச்சுக்க. ஒரு நாளைக்கு மூனு போதும்"

"ம்ம்ம். சரி!"

"சரினு சொல்லிட்டு இவளுக்கு எங்க தெரியப் போகுதுனு குடிச்சுட்டு இருக்காத"

"சரி லூசு!", என்று அழுத்தினான்.

அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். கடற்கரை மணலில் கிறுக்கிக் கொண்டிருந்த கையால் அவளது கன்னத்தை வருடினான். கையில் ஒட்டியிருந்த மணற்குருணைகள் அவளது கன்னத்திற்கும் அவனது விரல்களுக்கும் நடுவே உருண்டோடிக் கீழே உதிர்ந்ததன. கூச்சத்தில் அவளது கன்னத்தால் அவனது கையை அவளது தோளோடு வைத்து அணைத்துக் கொண்டாள்.

"வீட்ல ஒத்துக்கணும்டா!", கண்கள் முழுதும் எதிர்பார்ப்புகளுடன் அவனது கண்களைப் பார்த்தாள்.

"ஒத்துப்பாங்க. ஒத்துக்க வைப்போம்"

"எங்க வீட்ல பேசுறப்ப எங்க அப்பா ஏதாவது உன்னைத் தப்பா பேசினா பெருசா எடுத்துக்காதடா!"

"மாட்டேன். பட் அப்படி பேசுவாரா என்ன?"

"சான்ஸஸ் இருக்கு. என்னவா இருநதாலும் நீ பொறுமையா இரு. நமக்கு காரியம் நடக்கணும்"

"ஓகே", என்றான் சலித்த குரலில்.

"ஏன்டா?"

"ஒன்னும் இல்ல. உங்க வீட்ல ஒத்துப்பாங்களா?"

"ஒத்துப்பாங்க. அவங்களுக்கு என் சந்தோஷம்தான் முக்கியம்"

"உங்க வீட்ல?"

"பேசிப் புரிய வைக்கணும்"

அவனது கைகளைப் பிடித்து விரல்களைக் கோர்த்துக் கொண்டாள். அவனா அவளது விரல்களை இறுகப் பற்றிக் கொண்டான். விரல்களின் அழுத்தத்தின் அதன்வழியே நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டாள்.

"சீக்கிரம் வேற வேலை தேடுடா!"

"ஏன்?"

"இல்ல. எங்க வீட்ல வேற மாதிரி எக்ஸ்பெக்ட் பண்ணுவாங்க. நீ என்னைவிட பெட்டர் பொசிஷன்ல இருக்கணும்னு"

"உடனே எப்படி வேற வேலை கிடைக்கும்? இது கிடைச்சதே பெரிய விஷயம் எனக்கு."

"நீயே உன்னை அன்டர் எஸ்டிமேட் பண்ணிக்கிற. You are a talented guy. You have a lot of talents within you."

"இருக்கலாம். பட் ஒரு ஆப்பர்ச்சுனிட்டி கிடைச்சாதானே மத்ததெல்லாம்? உடனே எப்படி கிடைக்கும்"

"ட்ரை பண்ணுடா. ப்ளீஸ்! நமக்காக."

"சௌமி! இப்படி ப்ரெஷர் கொடுக்காத. நானே இதவிட நல்ல வேலை தேடிப்பேன்."

"சரிடா!"

"ம்ம்ம்!", என்று விரல்களின் பிடியைத் தளர்த்தி கையை விடுவித்தான்.

"ஏன்டா கோவமா?"

"இல்ல"

"பொய் சொல்லாத."

"கோபம் இல்ல. Disappointment. இதுதான் நான்னு தெரிஞ்சுதான லவ் பண்ண? இப்ப மட்டும் என்ன?"

"அதுக்குனு நீ அப்படியே இருக்க முடியுமா?"

"நான் இப்படியே இருப்பேன்னு சொல்லல. எனக்கு ப்ரஷர் கொடுக்காத. நான் பாத்துக்குறேன். அவ்ளோதான்."

" அத எங்க வீட்ல சொல்றதுக்கு முன்னாடி பாருனுதான் சொல்றேன்."

"சௌமி! ப்ளீஸ்."

"சரி! Sorry. கோவிச்சுக்காத. ஒழுங்காப் பேசு"

"ம்ம்ம். சரி!"

அவனது கையை மீண்டும் இழுத்துப் பிடித்துக் கொண்டாள்.

"இந்த வீக்கெண்ட் படத்துக்குப் போறோம்", என்றாள் தயக்கத்துடன்.

"ஓ! என்ன படம்?", பேச்சின் தொனி மாறியது.

"என்ன படம்னு டிசைட் பண்ணல. சும்மா ஷாப்பிங் போயிட்டு அப்படியே படத்துக்குப் போகலாம்னு"

"யாரெல்லாம்?"

"நான், ஆனந்தி, திவ்யா, கீர்த்தி, தீபக், அருண்"

"அதென்ன ஆர்டர்?"

"என்ன?"

"பசங்க பேர் எல்லாம் கடைசியா சொல்ற. இந்த டாபிக் பேசுறப்பவே ஏன் அவ்ளோ தயக்கம்?"

"உனக்குப் பிடிக்காதுன்னுதான்!"

"பிடிக்காதுன்னு தெரிஞ்சே ஏன் பண்ற?"

"அதுக்குனு சொல்லாம எப்படிப் போக முடியும்?"

"உன்னை யார் அப்படி போகச் சொன்னா? போகாம இருக்கலாம்ல"

"போகாம இருக்க முடியாது"

"ஏன்?"

"ஏன்னா? ஏன் வரலனு அவங்க கேட்பாங்க. நான் என்ன சொல்றது?"

"நான் போகக் கூடாதுனு சொன்னேனு சொல்லு"

"அப்படி எல்லாம் சொல்ல முடியாது. நான் போவேன். போறதுல இப்ப என்ன பிரச்சினை?"

"போகக் கூடாது. போகாம இருக்குறதுல என்ன பிரச்சினை?"

"பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்ல. எனக்குப் போகணும்னு இருக்கு. அவ்ளோதான்"

"போகக் கூடாது. அப்போ என்ன ரீஸன் சொல்றதுனு தெரிலனு சொன்ன. இப்போ போகணும்னு இருக்குனு சொல்ற. எது உண்மை"

"எனக்குப் போகணும்னு இருக்கு. அவங்ககிட்ட அப்படி சொல்லவும் முடியாது."

"போகக் கூடாது. அவ்ளோ தான்"

"போவேன்"

"போனா நானே அங்க வந்து செருப்பால அடிப்பேன்"

வெறுப்பின் உச்சத்தை அடைந்தவள் சட்டென எழுந்து அவனை நோக்கி நின்றாள்.

"உன்கிட்ட இனி பேசிப் புரிய வைக்க முடியாது. You are a male chauvinist", என்று திரும்பி வேகமாக சாலையை நோக்கி நடந்தாள்.


-தொடரும்...

1 comment: