Sunday, May 7, 2017

இட ஒதுக்கீடு

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு கூடாது; பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு வேண்டும்; இந்தியா பின்தங்கியிருப்பதற்கு இடஒதுக்கீடே காரணம் என்பது இன்றைய இளைஞர்களிடையே பரவலாகக் காணப்படும் கருத்தாக இருக்கிறது. இடஒதுக்கீட்டின் மூலம் பயன்பெறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் இதே கருத்தைக் கொண்டிருப்பதுதான் முரண்.
'மண்டல் கமிஷன்' முன்மொழிந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் பட்டியலானது சமூக வாழ்வு, கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் தரவுகள் எடுக்கப்பட்டு அதன்மூலமே வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது இடஒதுக்கீடு என்பது சாதி ஏற்றத்தாழ்வை குறைப்பதற்காக 'மட்டும்' ஏற்படுத்தப்படுத்தப்பட்டதல்ல; சமூக ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது என்பதை இவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
திறமையில்லாதவர்களுக்கு வாய்ப்புகள் விரயமாகிறது என்பது இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. தனியார் கல்விநிறுவனங்களில் பணம் கட்டிச் சேர்ந்து கொள்ளும் முறை இருக்கிறது. ஆனால் அவர்கள் மீது அதே குற்றச்சாட்டு வைக்கப்படுவதில்லை எனும்போதே இவர்கள் வடிப்பது நீலிக் கண்ணீர் என்பது புரியும். இந்தியாவில் துப்புரவு பணிகளுக்கு இன்றும் குறிப்பிட்ட சமூகத்தினரே பயன்படுத்தப்படுகின்றனர். அங்கே வந்து யாரும் வேலைக்கான உரிமை கொண்டாடவில்லை எனும்போது காலம்காலமாக கூலிவேலைகளும், துப்புரவுத் தொழில்களும் செய்து வருபவர்களின் பிள்ளைகள் உயர்கல்வி பெறுவதிலும், அரசு அதிகாரத்திலும்/நிர்வாகத்திலும் இடம்பெறுவதை விரும்பாமல் வெறுப்பை உமிழும் காழ்ப்புணர்ச்சியாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது.
இடஒதுக்கீடு கல்விநிறுவனங்களில் ஒரு நுழைவுச்சீட்டுதானே தவிர அந்தந்த துறைகளில் வெற்றிபெற திறமையும், உழைப்பும் அவசியமாகிறது. வெறும் வேலைவாய்ப்புதான் கல்வியின் பிரதான நோக்கம் என்றால் தொழிற்துறைகளில் மிளிர்வதற்கு பிதாகரஸ் தியரமும், ஐடி துறைகளில் மிளிர்வதற்கு குறைந்தபட்ச ஆங்கிலமும், லாஜிக்கல் ரீஸனிங்கும் போதுமானது. இடஒதுக்கீடு என்பது வேலைவாய்ப்பு/சம்பாத்தியம் என்பனவற்றைத் தாண்டிய உயர்ந்த நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது. பலநூறு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு எல்லாத் துறைகளிலும் வாய்ப்பு வழங்குவது இடஒதுக்கீடு இல்லாமல் சாத்தியமாகாது என்பதே அது.
'எங்க எதிர்வீட்டுக்காரன் ரிசர்வேஷன்ல படிச்சு வேலை கிடைச்சு நல்லா சம்பாதிக்கிறான். அதனால ரிசர்வேஷன் வேண்டாம்', என்பதுதான் இத்தகைய இளைஞர்களின் வாதமாக இருக்கிறது. இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்வதற்குக்கூட, இந்திய அளவிலான/ குறைந்தபட்சம் பிராந்திய அளவிலான தரவுகள் வேண்டும் என்பதுகூடப் புரியாத நிலையில்தான் இருக்கிறார்கள், மீம் பார்த்து அரசியல் பழகும் இன்றைய இளைஞர்கள். மோடி போன்ற அரசியல்வாதிகளின் சாஃப்ட் டார்கெட் இதுபோன்ற இளைஞர்கள்தான். இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்யும் நீட் தேர்வுக்கு ஆதரவளிப்பதும் இதே இளைஞர்கள்தான் என்பது கூடுதல் அச்சம்.

No comments:

Post a Comment