Sunday, May 7, 2017

பாகுபலி- The comparison

பாகுபலி வெளியானபின் புதிதாக ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. இத்தனைநாட்கள் 'ஷங்கர் சார்' 'ஷங்கர் சார்' என்று சுற்றிக் கொண்டிருந்த கூட்டம் திடீரென்று 'ஷங்கர் எடுக்குறது எல்லாம் பிரம்மாண்டமா? ராஜமவுலி சார்தான்யா பிரம்மாண்டம்', என்று யூடர்ன் அடித்து எடப்பாடி கூட்டத்திற்கே சவால் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
ஷங்கர் படங்கள் என்னை அவ்வளவாக ஈர்த்ததில்லை. மற்றபடி கதை சொல்லும் விதம்மூலம் ரசிகர்களைக் கவர்வதில் கைதேர்ந்தவர். ஐ திரைப்படம் வந்தபோது இப்படிக் கூறியிருந்தேன். கதைப் பஞ்சம் நிலவுகிற இந்தக் காலத்தில் ஷங்கர் பிரம்மாண்டம் என்ற பெயரில் தேவையில்லாத செலவு செய்வதைவிடுத்து ஃபேண்டஸி திரைப்படங்களில் பிரம்மாண்டத்தை முயற்சி செய்யலாம். அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது; தயாரிப்பாளர்களும் அவரை நம்பி முதலீடு செய்யத் தயாராகத்தான் இருக்கிறார்கள் என்று.
ராஜமவுலியின் மஹதீரா, நான் ஈ, பாகுபலி-1 படங்களைப் பார்த்திருக்கிறேன். கதையின் செறிவைவிட தனது மேக்கிங்கில் அதீத நம்பிக்கை கொண்டிருப்பவர். அழகியல், பிரம்மாண்டம் கலந்து ரசிகர்களுக்கான சினிமாவாக முழுமையாகக் கொடுக்கிறார். மேற்கண்ட படங்களைக் கவனித்தால் ராமநாராயணன் காலத்துக் கதைகள்தான் என்றாலும் அவற்றின் அழகியலும், பிரம்மாண்டமும், டீடெய்லிங்கும்தான் வித்தியாசப்படுத்திக்காட்டியிருக்கின்றன; வெற்றியும் பெற்றிருக்கின்றன. இதை ராஜமவுலியின் மேஜிக் என்றே கூற வேண்டும்.
பாகுபலி படத்தை விமர்சனங்களின்றி அப்படியே ஏற்றுக் கொள்வதாக கார்ட்டூனிஸ்ட் பாலா சொல்லியிருக்கிறார். வயிற்றில் படம் வரைவதுதான் பிரம்மாண்டமா என்று ஷங்கரை நோக்கி கேள்வியும் எழுப்பியிருக்கிறார். தேவர்மகன், விருமாண்டி படங்களைச் சாதிவெறித் திரைப்படங்கள் என்று விமர்சித்துவந்தவர் பாலா. அப்படிப்பட்டவர் வர்ணாசிரமத்தை நியாப்படுத்தும், தூக்கிநிறுத்தும் பாகுபலியை விமர்சனங்களின்றி ஏற்றுக்கொள்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும். ஒன்று, முன்சொன்ன ராஜமவுலியின் மேஜிக் கண்களை மறைத்திருக்க வேண்டும்; மற்றொன்று, கமலின் மீதான சாடல் கமல்மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இருந்திருக்க வேண்டும்.
புலி படத்தில் விஜய் வில் எய்தும் காட்சியை, பாகுபலியில் பிரபாஸ் வில் எய்தும் காட்சியோடு ஒப்பிட்டு ராஜமவுலியின் பெர்ஃபெக்ஷனைப் பாராட்டியும் முன்னதைக் கலாய்த்துமிருந்தனர்.
பெர்ஃபெக்ஷன் பற்றிக் குறிப்பிட்டதால் பாகுபலி-1ல் இரண்டு காட்சிகளைக் குறிப்பிடுக்கிறேன்.
1. தமன்னா பிரபாஸை எதிர்நோக்கி ஒருமரத்தின்மீது வில்அம்புடன் காத்திருக்கும்போது, பிரபாஸ் பின்பக்கமாக இருந்து ஒரு பாம்பை தமன்னாமீதுவிட்டு அவரை அசையவிடாமல் செய்து அவரது கைகளில் ஓவியம் வரைவார். காட்சியின் முடிவில் அம்புமீதிருக்கும் பாம்பானது, தமன்னா அம்பெய்ததும் அம்போடு சேர்ந்து தொலைவில் விழும். டீக்கடைகளில் கீழ்க்கண்ட காட்சியைப் பார்த்திருக்கலாம். பொட்டலம் மடிக்க வைக்கப்பட்டிருக்கும் தாள்களின் மீது எடைக்கல் இருக்கும். எடைக்கல்லை எடுக்காமலே வேகமாகத் தாளை இழுக்கும்போது தாள் கையோடு வந்துவிடும்; எடைக்கல் அடுத்த தாள் மீது அசையாமல் அமர்ந்துகொள்ளும். இது என்ன இயற்பியல் விதியின் அடிப்படையிலானது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, அந்தக் காட்சியில் அம்போடு பாம்பும் தூரமாய்ப் போய் விழுவதற்கு சாத்தியமில்லை; பாம்பு அதே இடத்தில்தான் கீழே விழவேண்டும்.
2. படத்தில் அவ்வளவு பெரிய சிலையை இழுக்கும்போது கயிறு இழுவிசை (tension) இன்றி தொய்வாகத்தான் இருக்கும்.
பிகு: ராஜமவுலியின் வர்ணாசிரம ஆதரவு மீது எனக்கு விமர்சனம் இருக்கிறதேதவிர ராஜமவுலியின் வளர்ச்சியின்மீதும் திறமையின்மீதும் பொறாமையோ காழ்புணர்ச்சியோ எல்லாம் கிடையாது.

No comments:

Post a Comment