Thursday, June 20, 2019

சிம்ரன்

கருப்புமில்லை, செகப்புமில்லை; ஒருவித செம்பு நிறம் அவள். செம்பட்டை நிறக் கூந்தல். மேலுதட்டின் மேல் வலப்பக்கமாக மச்சம். 'சிம்ரன்' என்பது அந்தப் பகுதி விடலைப் பையன்கள் அவளுக்கு வைத்த பெயர்.

கருமாரி என்பது அவளது இயற்பெயர் என்றாலும்  கூப்பன்கடை கார்டிலும் பீடிக்கடை சிட்டையிலும் தவிர மற்ற இடங்களில் அவளது பெயருக்குப் பெரிதாக வேலை இருக்கவில்லை. பள்ளிக்கூடத்தையும் ஆறாம் வகுப்போடு நிறுத்திவிட்டதால் பாடநோட்டில் எழுதவேண்டிய அவசியமும் இல்லாமல் போனது. அவளது அம்மா 'ஏட்டி! பெரியவளே!', என்றுதான் விழிப்பாள். அப்பா தவறிவிட்டார். 'எக்கோவ்!', என்று பின்னாடியே சுற்றிவரும் தம்பி மாணிக்கம் என்றால் அவளுக்குப் பிரியம். ரெண்டாப்பு படிக்கிறான்.

அவர்கள் இருந்த காம்பவுண்டில் குருவிக்கூடுகள் போன்று வீடுகள்.  மூன்றுபக்கமும் வீடுகளாக நடுவில் பொதுவானதொரு முற்றம். ஈசானி மூலையில் வடப்பக்கம் பார்த்து பொதுவாசல். ஒரேஒரு அறைதான். பெட்ரூம், லிவிங் ரூம், டைனிங் எல்லாம் அங்குதான். காம்பவுண்டின் மேல்பக்கமாக பொது சமையலறை. அவரவர் வசதிக்கேற்ப விறகடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு என விரிசையாக இருக்கும். தென்மேற்கு மூலையில் கொல்லைப்புற வாசல். பின்புறமாக தட்டி கட்டிவிடப்பட்ட குளியலறைகள். கொல்லைக்குப் போக செங்கமாலுக்குப் பக்கம் இருக்கும் முட்புதர்களை ஆளுக்கொரு பக்கமாய் ஆண்களும் பெண்களும் பிரித்து வைத்திருந்தார்கள்.

ரேடியாவில் காலையிலேயே அவளுக்குப் பிடித்த காதல்கோட்டை படத்தின் 'நலம்! நலமறிய ஆவல்' பாட்டு பாடிக் கொண்டிருந்தது. அவளும் கூட சேர்ந்து பாடிக் கொண்டிருந்தாள். மண்ணெண்ணெய் அளவு குறைந்துபோனதால், தண்ணீர் ஊற்றி தண்ணீரின் அடர்த்திக்கும் மண்ணெண்ணெயின் அடர்த்திக்குமான வித்தியாசதால் மண்ணெண்ணெயை பாட்டிலின் மேலே உயர்த்தி, மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டைச் சமாளித்து எரிந்து கொண்டிருக்கும் குவார்ட்டர் பாட்டிலில் செய்த விளக்கை அணைத்தாள். அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் தம்பியை எழுப்பிவிட்டாள். அசதியில் தலையணையை எச்சிலால் நனைத்திருந்தான். வாயைத் துடைத்துக்கொண்டு எங்கே இருக்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாது விழித்தவனை, "ஏலேய்! போய் ரெண்டு சில்லு தேங்காவும், ரெண்டு ரூவாய்க்கு பொட்டுக்கடலையும் வாங்கிட்டு வா! சட்னி அரைக்கணும்", என்று உத்தரவிட்டாள்.

கலைந்த தலையோடும், பூழை நிறைந்த கண்களோடும் பெட்டியலிருந்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு மணி அண்ணன் கடைக்கு நடந்தான். "ஏலேய்! மூஞ்சி கழுவிட்டுப் போ'ல", என்றாள். கொல்லைப்பக்கம் போய் வாளியில் இருந்த நீரை எடுத்து மூஞ்சைக் கழுவி வாய் கொப்பளித்துக் கொண்டான். இரவில் குளிர் என்பதால் பள்ளிக்கூட சட்டையோடு தூங்கிவிட்டான். இந்த வருடம் இரண்டு வெள்ளை சட்டைகளும் இரண்டு காக்கி டவுசர்களும் கொடுத்திருந்தார்கள். இது சென்ற வருடம் கொடுத்த சட்டை. செம்மண் நிறமேறிப் போயிருந்த சட்டையில் அப்படியே மூஞ்சைத் துடைத்துக் கொண்டு கிளம்பினான்.

மாணிக்கம் கடையை நோக்கி நடந்து வருவதை, கடைக்கு வெளியே நின்று பீடி குடித்துக் கொண்டிருந்த கோவிந்தன் பார்த்துக் கொண்டிருந்தான். கடைக்கு வந்ததும் "ரெண்டு ரூவாய்க்கு பொட்டுக்கடலை, ரெண்டு சில்லு தேங்கா", என்றான். மணியண்ணன் தேங்காய் சில்லு கீறிக் கொண்டிருந்தார். "ஏலே மாணிக்கம்! உங்க அக்கா சிம்ரன எங்க'ல? வீட்டை விட்டு வெளிய வரமாட்டாளோ?", என்றான் கோவிந்தன்.

கோவிந்தனை மாணிக்கத்துக்குச் சுத்தமாகப் பிடிக்காது. மாணிக்கம் சிம்ரனைப் போல அஜித் ரசிகன்; கோவிந்தன் விஜய் ரசிகன். வாடகை ஆட்டோ ஓட்டுகிறான். கோவில் கொடை, கல்யாணவீடு, சடங்கு வீடு என எல்லா இடங்களிலும் மைக் செட் கட்டும்போது முதல் ஆளாக வந்துவிடுவான் கோவிந்தன். 'நான் உங்க இளைய தளபதி விஜய் பேசுறேன்', என்று விஜயின் குரலோடு தொடங்கும் ஃப்ரெண்ட்ஸ் படத்தின் பாடல்களோடுதான் எல்லா விழாக்களும் தொடங்கும். அவனோடு இன்னும் சிலர் கூட்டு. கோயில் கொடையில் ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் விஜய் பாடல்களுக்கு ஆடுபவர்களுக்கு மட்டும் மேடையேறிப் போய் ரூபாய்நோட்டு குத்துவார்கள். மாணிக்கமும், சிம்ரனும் தண்ணிநடை எடுக்கச் செல்லும் போது ஆட்டோவை வேகமாக வளைத்து ஓட்டிச் சாகசம் செய்வான். மாணிக்கத்துக்கு எரிச்சலாக இருக்கும். கோவிந்தனும் சிம்ரனும் காதல் செய்கிறார்கள் என்று எல்லோரும் சொன்னார்கள். மாணிக்கத்திடமே அவன் ஒருமுறை லெட்டர் கொடுத்து கொடுக்கச் சொன்னான்; "அக்கா வை'வா", என்று வாங்கிக் கொள்ளாமல் ஓடிவிட்டான்.

"வீட்லதான் இருக்கா. தோசை சுட்டுட்டு இருக்கா", என்றான் கடுப்பு கலந்த குரலில்.

"இனிமே எதுவும் வாங்கணும்னா அவளையே வரச் சொல்லு", என்றான் கோவிந்தன்.

"ஏலே! சும்மா இரு. அவன் போய் அவன் ஆத்தாகிட்ட சொல்லிரப் போறான். அவ ஆத்தா இங்க கடைக்கு முன்னாடி வந்து சாமியாடிருவா", என்ற மணியண்ணன், "நாலு ரூவா கொடு", என்று சொல்லி மாணிக்கத்திடம் வாங்கிக் கொண்டார்.

பொட்டுக்கடலையும், தேங்காயும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புகையில் வீட்டு வாசலில் சிம்ரன் மீன்காரியிடம் மீன் பார்த்துக் கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும், "இரு'க்கா! என் தம்பிட்ட கேப்போம்", என்றவள் இவனைப் பார்த்து, "ஏலே! என்ன மீனு வாங்கட்டும் மதியான சோத்துக்கு", என்றாள்.

"முள்ளு இல்லாத மீனா வாங்கு", என்றான்.

"முள்ளு இல்லாம எந்த மீனு நட்டமா நிக்கும். முள்ளு இல்லாம நட்டமா நிக்குற மீனு உங்கிட்ட தான இருக்கு", என்று கேலியாகச் சிரித்தாள் மீன்காரி. அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

"எக்கா! சின்னப் பையன்கிட்ட என்ன பேசுத? சும்மா இரு", என்று அதட்டியவள், "நீ போய் பல்லு விலக்கிட்டு வா", என்றாள்.

பல் விலக்கிவிட்டு தோசையைத் தின்றுவிட்டு விளையாடக் கிளம்பினான். காட்டுக்கு சென்றிருந்த அம்மா வந்துவிட்டாள். "எலே! எங்க போற?", என்றாள் இவனைப் பார்த்ததும்.

"விளையாட", என்றான்.

"ஊர்ல இருக்க *** பைய **பைய கூட எல்லாம் கூட்டு சேந்து சுத்திட்டு இரு நீ. ஊர்ல இல்லாத சேக்காளிங்க வச்சுகிட்டு சுத்துதான் பாரு வெக்கங்கெட்ட பய", என்றாள் அம்மா குருவம்மாள்.

***

அக்கா பீடி சுற்றுவாள். கட்டு இலையைப் பிரித்து இரும்பிப் பட்டையின் அளவுக்கு வெட்டி பீடித்தூள் போட்டு சுருட்டி நூல் வைத்து கட்டுவாள். பின்னர் குட்டி ஈட்டியை வைத்து திறந்திருக்கும் முனையை குத்திக் குத்தி மூடுவாள். கட்டுக்கு இத்தனை பீடி என்று அடுக்கிக் கட்டி, பீடிக்கட்டுகளை பீடிக்கடையில் கொண்டுசென்று கொடுத்துவிட்டு சிட்டையில் கணக்கு எழுதிவிட்டு வருவாள்.

அவள் கட்டும் பீடியில் ஒன்றை எடுத்து வாயில் வைத்து ரஜினி மாதிரியாக வாய்க்குள் கொண்டு சென்று  மீண்டும் வெளிக் கொணர்ந்து ஸ்டைல் செய்வான். ஒருமுறை இதைப்பார்த்து விட்ட சிம்ரன் புளிமரத்தின் குச்சியை உடைத்து முதுகில் தோலுரித்துவிட்டாள். " இனி பீடிய தொட்ட கொன்னுருவேம்ல உன்ன", என்று எச்சரித்து விட்டாள். கோவிந்தன் பீடி பற்ற வைத்தே குடிக்கிறான்; அவனையெல்லாம் அவளுக்குப் பிடிக்கிறது. நான் சும்மா ஸ்டைல் செய்தாலே அடிக்கிறாள் என்று கோபித்துக் கொண்டான்.

***

ஒருநாள் குருவம்மாள் தெருவெல்லாம் கத்திக் கொண்டு வந்தாள்.

"இந்தத் தேவிடியா முண்டையால என் மானம் மருவாதி எல்லாம் போச்சு. என் வயித்துல பொறந்தது இப்படி அரிப்பெடுத்து திரிஞ்சு இருக்கே! அந்த பலவோட்ரை பயகிட்ட என்னத்த கண்டாளோ? அவன் பின்னாடி போய் இருக்காளே!", என்று கத்திக் கொண்டே வீட்டுக்கு வந்தவள் அழுது கொண்டிருந்த கருமாரியை முடியைப் பிடித்து இழுத்துப் போட்டு அடித்தாள். செய்வதறியாமல் அழுது கொண்டிருந்தான் மாணிக்கம்.

ஊர்ப் பெரிய மனுசன்கள் நாட்டாமை வீட்டுக்கு முன்பு ஒன்று கூடினார்கள். வெள்ளை வேட்டி ஒன்று இருந்தால் யார் வேண்டுமானாலும் ஊர்ப் பெரிய மனுசனாகி நியாயம் பேசலாம். குருவம்மாள் குடும்பத்தில் அப்படி அம்பளையாட்கள் இல்லாததால் அவளது பக்கம் வலுவற்று இருந்தது.

நாட்டாமை மலேசியாவுக்கு சிலை கடத்தி காசு சேர்த்த புது பணக்காரன் நடராசன். அம்மா அவனைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறாள். கள்ள பாஸ்போர்ட்டில் மலேசியா சென்று கடத்தல் வேலை எல்லாம் செய்து பணம் சேர்த்து இங்கேயே வீடு சொத்து எல்லாம் வாங்கி செட்டிலாகிவிட்டான். ஊர்க் கோவிலுக்கு ஒருலட்சம் நன்கொடைகொடுத்ததால் ஊர் நாட்டாமை பதவியும் கொடுக்கப்பட்டது. அவனும் அவன் பொண்டாட்டியும் காட்டும் மினுக்கும் பவுசும் கொஞ்சநஞ்சமில்லை. அவனது பையன் இவன் செட் தான். வெளிநாட்டு சுவிங்கம், தேங்காய் சாக்கலேட் எல்லாம் கொண்டு வந்து தருவான்.

"ஏ குருவம்மா! இப்ப முடிவா என்ன சொல்லுத?", ஊர் நாட்டாமை.

"அந்தப் பையனுக்கே எப்படியாது என் மவள கட்டி வச்சுருங்க. நான் என் தலைய வித்தாவது சீர் செஞ்சுருதேன். ஊரெல்லாம் நாறிப் போச்சு. கல்யாணம் பண்ணி வைக்கலன்னா குடும்பத்தோட மருந்தக் குடிச்சுதான் சாவணும்".

"ஏட்டி! அந்தப் பயலுக்கு அவன் அப்பா ஆத்தா கோவில்பட்டில பொண்ணு பாத்து வச்சுருக்காக. பொண்ணு வீட்டுல அஞ்சு களஞ்சி நகை போடுதாங்க. லோன் போட்டு ஒரு ஆட்டோ வாங்கித் தாராங்க. உன்னால அவ்ளோ ஏலுமா?", என்றான் இன்னொரு ஊர்ப் பெரிய மனுசன்.

"ரெண்டு களஞ்சி போடுதேன். புள்ள பொறந்தா நான் பாத்துக்குடுதேன். அதுக்கு மேல என்னால ஏதும் ஏலாது", என்றாள்.

"குருவம்மா! உனக்கு இந்த சம்பந்தம் எல்லாம் ஒத்து வராது. காதல்தான பண்ணிருக்காங்க. ஊரு ஒலகத்துல பண்ணாததா? கொஞ்ச நாள்ல சரியாயிரும். கடையநல்லூர்ல வேணாம். வெளியூர்ல உன் வசதிக்கு ஏத்த மாதிரி நம்ம சாதியிலேயே ஒரு பையன பாரு. நம்ம கோயில்ல நாங்களே முன்ன நின்னு நடத்தி வைக்கோம்", நாட்டாமை.

"ஏய்யா! அநியாயம் பண்ணாதீங்க. ஆத்தா எல்லாத்தையும் பாத்துகிட்டுதான் இருக்கா. என் மவ வாழ்க்கைய கெடுத்துராதீங்க. நல்லா இருக்க மாட்டீங்க", என்று கத்தினாள்.

"ஏய்! என்னட்டி சாபம் விட்டுகிட்டு இருக்க. எங்களுக்கெல்லாம் சோலி இல்லாமையா இங்க வந்து பேசிட்டு இருக்கோம். ஏலே கோவிந்தா! அஞ்சு ரூவா அபராதத்த குருவம்மாகிட்ட குடுத்துரு. கோயிலுக்கு நூத்தி ஓரு ரூவா உண்டியல்ல போட்டுட்டு வீட்ல சொல்லுத புள்ளைய கட்டிகிட்டு ஒழுங்கா இருக்க வேலை வெட்டிய பாரு. குருவம்மா! நீ வேண்டாத வேலை எதுவும் பாக்காம ஆக வேண்டிய வேலைய பாரு.", என்று முடித்தான்.

குருவம்மாள் ஆற்றாமை தாங்க முடியாமல் அழுதுகொண்டே திரும்பினாள். போலிஸ் ஸ்டேஷன் போனால் ஊரை விட்டு ஒதுக்கு வைத்துவிடுவார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் மண்ணை அள்ளித் தூற்றி கருவிக் கொண்டே வீட்டிற்குப் போனாள். கூடவே மாணிக்கமும் அழுது கொண்டே சென்றான்.

வீட்டில் ஒரு மூலையில் முழங்காலைக் கட்டிக்கொண்டு கருமாரி அழுது கொண்டிருந்தாள். மாணிக்கத்திற்கு அவளைப் பார்க்க முடியவில்லை. அங்கே பேசியவர்கள் மீது ஆத்திரம் பீறிக் கொண்டு வந்தது. 'ரெட்' படத்தில் அஜித் அடிப்பது போல எல்லோரையும் அடிக்க வேண்டும் என்று கையை முறுக்கிக் கொண்டான். அவனால் அப்படியெல்லாம் செய்ய முடியாது என்ற ஆற்றாமையில் தரையில் விழுந்து துடித்து அழுதான்.

****
பள்ளிக்கூடத்தில் ஏழாம் வாய்பாடு எழுதிக் கொண்டிருந்தான். மேலத்தெரு மாயாண்டி அண்ணன் வந்து ஆசிரியரிடம் பேசி மாணிக்கத்தைத் தனது சைக்கிளில் அழைத்துச் சென்று பஸ் ஸ்டாண்டில் போட்டுவிட்டு தென்காசிக்கு அழைத்துச் சென்றார்.

தென்காசி தர்மாஸ்பத்திக்குள் நுழையும் போது, "உங்க அக்காளுக்கு வயித்துல கட்டி இருக்கு. ஆபரேசன் பண்ணுதாங்க. உங்க அம்மாவும் இங்கதான் இருக்கு", என்று சொல்லி அழைத்துச் சென்றார்.

மூலையில் இருந்த ஒரு சின்னக் கட்டிடத்தின் வாசலின் ஓரமாக அம்மா தலைவிரிகோலமாக அமர்ந்திருந்தாள். மாணிக்கத்தைப் பார்த்ததும் அவனை அணைத்தப் படி கதறி அழத் தொடங்கினாள்.

உள்ளே இருந்து வந்த ஆள் ஒருவர், "எம்மா! உன் மவ பேரு என்ன?", என்றார்.

அழுகையை ஒருகணம் அடக்கிக் கொண்டு "கருமாரி", என்று சொன்னதும் மீண்டும் கதறி அழத் தொடங்கினாள்.

மாணிக்கத்துக்கு நடப்பது ஒன்றும் விளங்கவில்லை.

Monday, October 1, 2018

ரேண்டம்-9

அவளுக்கு வழிவிட்டு இவன் நிற்க, தனது பையை இவனிடம் கொடுத்துவிட்டு இவனை நோக்கியபடியே ஜன்னல் சீட்டில் அமர்ந்தாள். இவனது பையையும் சேர்த்து மேலே வைத்துவிட்டு அவளருகே அமர்ந்தான். டிவியில் புதுப்பட பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தன. ஜன்னல் கண்ணாடியை மூட முயற்சித்து தோற்றுப் போய் இவனைத் திரும்பிப் பார்த்தாள்.

"இருக்கட்டுமே! "

"தலை கலைஞ்சிரும். காலையில பேய் மாதிரி இருப்பேன். பரவாயில்லையா? "

"பரவாயில்ல. இருக்கட்டும்"

"இல்ல... முடியாது. க்ளோஸ் பண்ணு", என்று பின்சாய்ந்து வழிவிட்டாள். அவளைக் கடந்து சிறு போராட்டத்திற்குப் பிறகு மூடினான்.

"நீயெல்லாம் சுத்த வேஸ்ட்'டா", என்றாள்.

"ஹே! நல்லாவே டைட்டா இருந்துச்சு. உடனே இப்படி சொல்லிரு"

"லூசுப் பையா. அது இல்ல. விடு"

"வேற என்ன? "

"டேய் தத்தி! பஸ்ல நம்மளோட சேர்த்து ஆறு பேருதான். சரியான மாங்கா. தேற மாட்டடா நீ"

"அஹான். அதுக்குனு காய்ஞ்ச மாடு மாதிரி பாய சொல்றீயா? "

"த்த்தூ", என்று நாக்கை அழுத்திய அளவுக்கு சத்தம் வராதபடி மெல்ல ஒலித்துவிட்டு, "இந்த மாதிரி கிடைக்கிற சான்ஸஸ் ரொமான்ஸா மாத்துறதுலதான் கிக்." காதலின் வரவேற்பாய் ஒரு கண்சிமிட்டல்

"ஓஹோ", என்றபடி பதிலில்லாமல் நேரே திரும்பிக் கொண்டான்.

அவனது முகத்தை தன்னை நோக்கித் திருப்பியவள், "என்டா? இப்படி ஓப்பனா பேசுறாளேனு நினைக்கிறீயா? "

"ச்சீ! I too never want a passive partner. ", என்று அவளது பின்னந்தலையை பிடித்து இழுத்து அவளது உதடுகளோடு இவனது உதடுகளைப் பூட்டிக் கொண்டான். 

அதிர்ச்சியில் அவளது கண்ணிமைகள் சில கணம் சிறகடித்து மூடிக் கொண்டன. இடுப்பிலிருந்த அவனது கை சற்று மேலெழும்பவும் வழிமறித்து விரல்களை விரல்களோடு கோர்த்துக் கொண்டாள்.

நிகழ்கால நினைவு திரும்பவும் அவனை பின்னோக்கி தள்ளிவிட்டு தன்னிலை அடைந்தாள். மூச்சிரைத்தவளாய் புன்னகையுடன் அவனை முறைத்தாள்.

தனது நாவினால் உதட்டை ஒருமுறை ஈரப்படுத்திக் கொண்டான்.

"என்ன'டா"

"பிரியாணி டேஸ்ட். பிரியாணியா சாப்பிட்டு வந்த?"

"ச்சீ.. நாயே! ".

டிவியில் 'நான் சொன்னதும் மழை வந்துச்சா' பாடல். ஒருகணம் நோக்கியவள் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்.

"ஏன்டா..  சினிமால இப்படியெல்லாம் நடிக்கிறாங்களே..  இப்படி சீன்'ல எல்லாம் மூட் ஆயிடாதா?"

"அதெல்லாம் ஆகாது லூஸூ. "

"அதெப்படி வராம இருக்கும்?"

"அது அவங்க புரஃபஷன். அதெல்லாம் வராது"

"ஆஹான்", தன் வழக்கமான கண்சிமிட்டலால் கண்ணொப்பமிட்டாள்.

சிறு யோசனைக்குப்பிறகு,

"நாம எல்லாம் எவ்வளவோ பரவாயில்ல'ல", என்றாள்.

"எத சொல்ற?"

"நமக்குள்ள அட்லீஸ்ட் இதெல்லாம் இருக்கு. பட் முப்பது வயசுக்கு மேல கல்யாணமும் ஆகாம சிங்கிளாவே இருக்குறவங்கள யோசிச்சு பாரு. நம்மாளுங்க ரூல்ஸ் வேற இதுல. அது சரியில்ல.. இது சரியில்ல.. ஜாதகம் பொருந்தல, நேரம் சரியில்ல,  மயிரு மட்டைனு முப்பது வயசுக்கு மேல வர கல்யாணமும் பண்ணி வைக்கமாட்டாங்க. ஆனா பையனோ பொண்ணோ எந்தத் தப்பும் பண்ணாம அதுவரை ஒழுக்கமா இருக்கணும்."

"ரொம்ப கஷ்டந்தான்"

"என்ன'டா? பேசப் புடிக்கலனா பேசாத. கடமைக்குனு பேசாத. "

"தூக்கம் வருது பேபி"

"ஒழிஞ்சு போ"

****
பேசிக் கொண்டிருந்தவன் அப்படியே அயர்ந்துவிட்டான். அவனது கைகளைக் கோர்த்தபடியே அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் தூங்குவதைப் பேருந்தின் இருட்டொளியில் இரண்டு புகைப்படங்களும் எடுத்து வைத்தாள்.

தூக்கத்தின் நடுவே விழித்தவன் அசதியான குரலில் "நீ தூங்கலியா", என்றான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் 'இல்லை' என்பதாய் இடவலமாய் தலையசைத்தாள். அவளது கன்னத்தை மெதுவாக தட்டிக்கொடுத்துவிட்டு மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தான்.

நேரம் கடந்தது. பேருந்தில் விளக்கொளி முளைத்தது. அவனைத் தட்டி எழுப்பி, "வந்துடுச்சு", என்றாள்.

எழுந்து அவளது பையை எடுத்துவிட்டு வழிவிட்டு நிற்க எழுந்து வெளியே வந்தாள். பையை வாங்கியவள் பகுதியாக அவனை அணைத்துக் கொண்டாள்.  பின் தலையில் கைவைத்து வழியனுப்பி வைத்தான்.

"விட்ராத'டா", என்று அவனது கண்களைப் பார்த்தபடியே நகர்ந்தாள்.

****

சில நிமிடங்களில் செல்போனில் அழைப்பு.

"ஆட்டோ ஏறிட்டேன்'டா. He asked me 150 rupees. I didn't bargain. Feeling little nervous. Talk until I reach.", கடகடவென்று ஒப்புவித்தாள்.

தொடரும்...

Tuesday, September 18, 2018

பிளாட்டோவின் பொய்த்தேவு

பொய்த்தேவு என்கிற நாவலில் சோமு என்கிற சிறுவன் தன்னிடம் ஒரு ரூபாய் (எவ்வளவு என்று சரியாக நினைவில்லை) இருந்தால் இந்த உலகத்தையே வாங்கிவிடலாம் என்று நினைக்கிறான். அப்படித் தொடங்கும் உலகத்தின் மீதான அவனது பார்வை சோமு பண்டாரமாக சாகும்போது எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்பதுதான் கதை. 

பிளாட்டோவின் குகை மனிதனை இதனோடு தொடர்பு படுத்தலாம். குகையே உலகம் என்று நினைப்பவனுக்கு வெளியே வந்தால் அவனது பார்வை மாறுபடும். இப்படித்தான் பூமி தட்டையானது என்று நினைத்தவனுக்கு போகப் போக உலகத்தின்மீதும் பிரபஞ்சத்தின் மீதும் பார்வை மாறிக் கொண்டே வந்தது.  இதற்கெல்லாம் ஆதாரம் தேடல். 'Ascent of a man is because of his curiosity',  என்று கமல் இதைச் சுருக்கமாகச் சொல்வார்.

இது அறிவியலுக்கு மட்டுமல்ல; மனித நாகரிக வளர்ச்சிக்கும் பொருந்தும். ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமே இப்படியெனில் தனிமனிதனுக்கு? 'Civilization should evolve from the beginning',  என்பார் தோழி ஒருவர். மனித நாகரிகம் தவறுகளை சரியாகவோ தவறாகவோ திருத்தியெழுதி எழுதி இந்த நிலைமைக்கு வந்திருக்கிறது. ஒட்டுமொத்த தவறுகளையும் திருத்த ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பது அவரது எண்ணம். இத்தனைக்கும் அவர் பெரிதாக வாசிப்பனுபவமோ அரசியல் ஞானமோ இல்லாதவர்தான். 

ஆரம்ப காலத்தில் ராமசாமி நாயக்கர் என்று பெயரை எழுதி வந்தவர் பின்னர் சாதி ஒழிப்புக்காக சாகும்வரை போராடினார், 'God doesn't play dice ', என்று சொன்னவர் வேறு வழியில்லாமல்  குவாண்டம் தியரியை ஏற்றுக் கொண்டார். இப்போதிருக்கும் கோட்பாடுகள் காலப் போக்கில் நிரூபிக்கப்படலாம்; அல்லது புறக்கணிக்கப்படலாம். அறிவியலுக்கே இப்படியெனும்போது சமூகவியல் கோட்பாடுகளுக்கு? 

புத்தகத்தின் மூலமாக ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் வரலாறைத் துல்லியமாக அறிந்துவிட முடியாது. நம் நாட்டினரே காந்தியின் போராட்ட முறைகளை விமர்சிக்கும்போது மார்டின் லூதர் கிங்கும், மண்டேலாவும் அதனை முன்மாதிரியாகக் கொண்டு வெற்றி கொண்டார்கள். அம்பேத்கரும் பெரியாரும் மட்டும்தான் சமூக சீர்த்தவாதிகள் என்போர் ராம் மோகன் ராய் செய்த சீர்திருத்தங்கள் குறித்து தெரியாமல் இருப்பதோ அல்லது அவரைப் புறக்கணிப்பதோ அவர்களது புறச்சூழல் காரணமாகத்தான். 

கல்லாதது உலகளவு என்கிற அதே சமயத்தில் கற்றவையெல்லாம் சரிதானா என்கிற மறுபரிசீலனையும் தேவைப்படுகிறது. சரி-தவறு என்பதே காலத்திற்கும் இடத்திற்கும் மாறுபடும் எனும்போது இந்தப் பிரபஞ்சத்தை உங்களது ஒற்றைக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் என்ன நியாயம்?

Wednesday, May 16, 2018

வண்ணதாசன்

நான் யார்மீதாவது விமர்சனம் வைத்துக்கொண்டே இருக்கிறேன் என்பது என்மீதான குற்றச்சாட்டு. 'You are a man of negativity', என்று என்மீது விமர்சனம் வைக்கும் அளவுக்கு எனது விமர்சனங்கள் அளவுகடந்து போய் இருக்கின்றன என்பதைப்புரிந்து கொள்ள முடிகிறது. அரசியல் குறித்து அதிகம் பேசுவதால் விமர்சனங்கள் இன்றியமையாததாக அமைந்து விடுகிறது என்று நினைக்கிறேன்.

'ஏதாவது ரசனையோடு எழுது', என்பது நண்பர்கள் சிலர் என்னிடம் வைக்கும் கோரிக்கை. ரசனை என்றவுடன் எனக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் 'வண்ணதாசன்'. வண்ணதாசன் என்கிற பெயரில் கதைகளும் கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகளும் எழுதிவரும் தமிழின் மூத்த எழுத்தாளர். முதன்முதலில் வண்ணதாசனை/கல்யாண்ஜியை வாசித்தது எஸ்.ராமக்கிருஷ்ணனின் ஏதோ ஒரு கட்டுரைத் தொகுப்பில். கதாவிலாசமா தேசாந்திரியா என்று நினைவில்லை.

கூண்டுக்கிளியின்
காதலில் பிறந்த
குஞ்சுக்கிளிக்கு
எதற்கு
எப்படி வந்தன
சிறகுகள்?

என்பது அந்தக் கவிதை. ஒரு கட்டுரையின் தொடக்கத்தில் இடம்பெற்றிருந்தது. மிக மிக எளிமையான அதேசமயம் பொருள் பொதிந்த கவிதை. கவிதையின் பிரம்மிப்பு அடங்கவே எனக்கு சில நிமிடங்கள் பிடித்தது.

ஃபேஸ்புக்கில் நிறைய எழுதுகிறார். ஒவ்வொன்றையும் வாசிக்கும்போதுமனம் இலேசானதொரு உணர்வு. வன்மம், குரூரம் நிறைந்து கிடக்கும் படைப்புகளின் மத்தியில் துயரங்களைக்கூட கலாரசனையோடு சொல்வதென்பது அவரது தனித்துவம்.

எனக்கு ஓர் ஆசை. இவர் எப்படி ஒவ்வொரு விசயங்களையும் கவனிக்கிறார். அவற்றை எப்படி எழுத்தாக மாற்றுகிறார் என்பதை அருகில் இருந்து பார்க்க வேண்டுமென்பதுதான் அது. அவரது ரசனைக்கு இன்னோர் உதாரணம்...

//
ஒரு பெயர் தானே வேண்டும்.

கலைச் செல்வி என்று வைத்துக் கொள்ளலாம். கலைச் செல்வியையும் அவர் கணவரையும் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு  நிறைவும் மகிழ்வும் மிக்க நிகழ்வில் சந்தித்தேன்.

கலைச்செல்வி அவருடைய முப்பதுகளில் எப்படிச் சிரித்தபடியே இருந்தாரோ, அதற்கு இம்மியும் குறையாத சிரிப்புடன் அவருடைய ஐம்பதுகளிலும் இருக்கிறார். நதியில் அள்ளிய தண்ணீரை, அள்ளிய கணமே நதி நிரப்பி விடுவது போல, ஒரு சிரிப்பின் மேல் மறு சிரிப்பு, ஒரு மலர்ச்சியின் மேல் இன்னொரு மலர்ச்சியை வைத்து அந்த முகம் சதா தன்னை நிரப்பி, அதைப் பார்க்கிற முகத்தையும் நிரப்பிக் கொண்டது.

கிட்டத்தட்ட,இருபத்தேழு வருடங்களாகப் பார்க்கிற ஒரு பெண்ணின் முகம் எப்படி இப்படி ஒரு அழியாச் சுடரோடு ஒளிர முடிகிறது! அன்றாடங்களின் நோவு, வாழ்வு சார்ந்த வாதை அவருக்கு இல்லாமலா போகும்?

இது ஒரு வரமல்ல. வல்லமை. கலைச்செல்வியின் முகம் என, என் மனைவி முகம், எங்கள் மகள் முகம், ஏன் என் முகம் , உங்கள் முகம் அனைத்தும் எப்போதும் சிரிப்பு ஒளிர வாழும் அந்த வல்லமை அடைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
//

இங்கே 'நதியில் அள்ளிய தண்ணீரை, அள்ளிய கணமே நதி நிரப்பி விடுவது போல' என்கிற வரியை ஒரு நான்கைந்து முறை வாசித்திருப்பேன். இந்த நிகழ்விற்கு இதை விடச் சிறந்த எளிய உதாரணம் கொடுத்துவிட முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். என் சிந்தைக்கு எட்டவில்லை.

சமீபத்தில் ஒருவர் தனது கட்டுரையில் அழகுக்கு உவமை சொல்ல 'வண்ணதாசன் வரிகள்' என்று குறிப்பிட்டிருந்தார். வாசித்ததும் அனிச்சையாய் எனது முகத்தில் மலர்ச்சி. வண்ணங்களை அழகியலோடு தொடர்புபடுத்தலாம். சரியான பெயரைத்தான் தனக்கு தேர்வு செய்திருக்கிறார், 'வண்ணதாசன்'.