சுஜாதா ஓர் இலக்கியவாதியா என்கிற கேள்வி தமிழ் எழுத்துலகில் தொடர்ந்து கேட்கப்படக்கூடிய ஒன்று. இலக்கியவாசிப்பில் தற்குறியான நான் இதற்கு பதிலளிக்க இயலாது. இருந்தும் சுஜாதாவை இலக்கியவாதி என்கிற கூட்டிற்குள் அடைத்துவிட முடியாது என்பது என் கருத்து.
தமிழ் எழுத்துலகில் எப்போதும் அங்கீகாரத்திற்கான பிரச்சினை நடந்துகொண்டே இருக்கும். திடீரென்று ஒரு கூட்டம் கிளம்பி சிலரை எழுத்தாளர்கள் என்று சொல்லக் கூடாது; கதைசொல்லிகள் என்று அழைக்கவேண்டும் என்பார்கள். அதே வரிசையில்தான் சுஜாதாவை இலக்கியவாதி என்று அழைக்கக்கூடாது என்பவர்களின் வாதமும். இங்கே படைப்புகள் விவாதிக்கப்படுவதை விட படைப்பாளர்கள் விமர்சிக்கப்படுவதே அதிகம். வாசிப்பவர்கள் இந்த அரசியலைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது நல்லது.
பாடப்புத்தகங்களுக்கு வெளியே, தினசரி பத்திரிகைகள் தவிர்த்து நான் வாசித்த முதல் புத்தகம் சுஜாதாவின் 'ஏன்? எதற்கு? எப்படி?'. சொல்லப்போனால் எனது புத்தக வாசிப்பே ஒரு விபத்தாய் நிகழ்ந்ததுதான். ஆரம்பகாலங்களில் சுஜாதாவை வாசிப்பதற்கு எளிதாகவும், சுவாரஸ்யாமாகவும் இருந்ததால் மற்ற எழுத்தாளர்களை அவ்வளவாக நாடியதில்லை. பிறகு கல்லூரி மூன்றாமாண்டு படிக்கும்போது பேராசிரியர். பசுபதி என்பவரின் அறிமுகத்தில் கி.ரா, க.நா.சு, நாஞ்சில்நாடன், எஸ்.ராமக்கிருஷ்ணன் என எனது வாசிப்பு அப்படியே மற்ற எழுத்தாளர்களை நோக்கி நகர்ந்தது.
ஸ்ரீரங்கத்து தேவதைகள் புத்தகத்தின் முன்னுரையில் சுஜாதா இவ்வாறு குறிப்பிட்டிருப்பார். 'அப்பட்டமான உண்மைகள் சுவாரஸ்யமாக இருப்பதில்லை. சில ஜோடனைகள் தேவைப்படுகின்றன. கலவையின் விகிதாச்சாரம் எழுத்தாளனது ரகசியம்', என்று. ஆரம்பகாலத்தில் நான் ஏதாவது ஒரு நிகழ்வை ரசித்துவிட்டால் உடனே ஒரு கதை எழுதி நண்பனிடம் காண்பிப்பேன். 'உனக்கு எதையாவது பிடிச்சுருந்தா உடனே அதப் பத்தி எழுதணும்னு நெனக்கிற. நிறைய விஷயங்கள கவனி. நிறைய வாசி. உனக்கே நீ என்ன பண்றனு புரியும்', என்று அறிவுரை கூறினான். அவன் சொன்ன விஷயத்தை சுஜாதாவின் மேற்சொன்ன கருத்தோடு வைத்துப் பார்க்கும்போது நான் எங்கே தவறிழைத்தேன் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
இது கதை எழுதுவதற்கான ஃபார்முலா போலத் தோன்றினாலும் எழுத்துலகின் ஃபார்முலாக்களை உடைத்தெறிந்தவர் சுஜாதா. இலக்கியம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இருந்தனவற்றைக் கட்டுடைத்ததால் என்னவோ அவரை இலக்கியவாதியாக ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கலாம்.
மேலும் அவர் தனது எழுத்துகளில் இடதுசாரி, வலதுசாரி, மேற்கத்திய சிந்தனைகளின் பாதிப்பு இல்லாமல், அதே சமயத்தில் மேற்சொன்ன அத்தனை சித்தாந்தங்களையும் விவாதித்தவர். தமிழ் உரைநடையில் எளிய நடையில் அறிவியல் பேசியவர். சங்க இலக்கியங்கள் தொட்டு சினிமா திரைக்கதையாடல் வரை அவர்தொடாத விஷயங்கள் இல்லை எனலாம். சுருக்கமாகச் சொன்னால் எழுத்துலகின் ஆல்ரவுண்டர் சுஜாதா. எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு ஆசான். அதுபோதும் நான் சுஜாதாவைக் கொண்டாடுவதற்கு.
No comments:
Post a Comment