Sunday, May 7, 2017

பாகுபலி- The conclusion

நாட்டில் விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கும்போது இப்படியாகத் திரைப்படங்களைக் கொண்டாட வேண்டுமா என்று கேள்வி எழுப்பும் சேடிஸ்ட்களைப் பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது. இந்தப் பைத்தியங்கள் நாட்டில் பிரச்சினைகள் நிலவுவதால் தத்தமது மனைவிகளைத் தள்ளிப் படுக்கச் சொல்லமாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
இன்னொரு பக்கம், இது இந்திய சினிமாவின் பெருமை; விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. இப்படத்தை விமர்சிப்பது ஆயிரக்கணக்கானவர்களின் உழைப்பை அலட்சியப்படுத்துவதாகும் என்று பதற்றமடைகின்றனர். அதற்கான காரணம் புரியவில்லை. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்று ஏதும் இருக்கிறதா என்ன?
படம் பார்த்தேன். நல்ல ரசிக்கும்படியான பொழுதுபோக்குத் திரைப்படம்.
நான் சிறுவயதில் Fable, fairy tale மற்றும் fantasy கதைகள் கேட்டு வளர்ந்தவனில்லை. புத்தக வாசிப்பே கல்லூரி காலத்தில் ஒரு விபத்தாக நிகழ்ந்ததுதான். திரைப்படங்களில்கூட யதார்த்த சினிமாக்கள் மட்டுமே பார்க்கும் வழக்கம் கொண்டவன். விதிவிலக்காக, அவதார், நார்நியா, ஆயிரத்தில் ஒருவன், ஸ்பைடர்மேன்-3 போன்ற படங்களை மட்டும் பார்த்திருக்கிறேன். எனக்கு இந்தப்படம் கொடுத்த அனுபவம் வித்தியாசமானது.
முத்து, தேவர்மகன் படங்களின் கதைகளை அருணாச்சலம், லிங்கா படங்களின் சில காட்சிகளுடன் ஒரு கற்பனை உலகத்தில் எடுக்கப்பட்ட படமாக இருந்தது எனக்கு. அந்த எல்லா ரகசியங்களும் தெரிந்த கணக்குப்பிள்ளை கதாபாத்திரம்தான் கட்டப்பா. முதல்பாகம் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
காரணம், ஹீரோ மலை ஏற 10 நிமிடம், லிங்கம் தூக்கி நடக்க பத்து நிமிடம், வில்லன் காளையை அடக்க ஐந்து நிமிடம், சிலை நிறுத்துவது பதினைந்து நிமிடம், பாடல்கள் பதினைந்து நிமிடம், காளகேயர்களுடனான போர் அரைமணிநேரம் என்று பார்வையாளர்களை பிரம்மாண்டத்தால் வாய்பிளக்க வைக்க நேரம் கழித்ததைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் அனுஷ்கா சுள்ளி பொறுக்கியதை எல்லாம் பத்துநிமிடங்கள் காட்டியது ஓவர். கட்டப்பா, 'நான் உங்கள் அடிமை' என்று அசோகன் குரலில் சொன்னபோதே பாகுபலியை ஏன் கொன்றார் என்பதற்கான காரணம் தெரிந்துவிட்டது. அதன்பின்னும் இரண்டாம் பாகத்தை எப்படி கிளைமேக்ஸ் வரை சலிப்பின்றி கொண்டுபோனார்கள் என்பதுதான் ராஜமௌலி மேஜிக்.
அனுஷ்கா பேரழகு. என் தலைவி நயன்தாராவை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்க்க ஆசைப்படுகிறேன். தேவைப்பட்டால் அதற்கு நானே கதை எழுதத் தயார். இரண்டாம் பாகத்தில் ரம்யாவின் கதாபாத்திரம் character assassination (வார்த்தைப் பிரயோகம் சரிதானா?) செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும் ஐ லவ் மேகி <3 . பிரபாஸ் ஒரு ராட்சசன். இப்படியானவர்களை வைத்தே படம் எடுத்துக் கொண்டிருந்தால் என்னைப் போன்ற ஓமக்குச்சி பொடியன்களை எல்லாம் பெண்கள் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம் வருகிறது. ராணா கதாபாத்திரம் பெரிதாக அச்சுறுத்தவில்லை. அவரது உருவம் கிளைமேக்ஸ் சண்டைக்குத் தேவைப்பட்டிருக்கிறது.
எல்லா படங்களிலும் ஹீரோ ஹீரோயினை இம்பரெஸ் செய்யும் காட்சிகளில் ஒரு ஊறுகாய் கதாபாத்திரம் தேவைப்படும். பிரேமத்தில் ஜாவா பிரஃபஸர், துப்பாக்கியில் ஜெயராமன் போன்று. எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அப்படியான கதாபாத்திரங்களை 'அஷோக் டின்டா' என்றழைப்போம். டின்டா ஓவரில் அடித்து பேட்ஸ்மேன்கள் பெயரெடுத்துக் கொள்வது போல. அப்படியான டம்மி கதாபாத்திரம் இந்தப் படத்திலும் இருக்கிறது.
ஒரே மாதிரியான பின்னணி இசைதான் என்றாலும் வாத்தியங்களின் உதவியால் பிரம்மாண்டத்தை உணர வைக்கின்றன. டப் பாடல்கள் என்பதால் என்னவோ எனக்குப் பிடிக்கவே இல்லை; பாடல்வரிகளும் சுமார்தான். கார்க்கியின் வசனங்களும் பல இடங்களில் பள்ளி மேடை நாடக வசனங்களின் மெச்சூரிட்டியில்தான் இருக்கின்றன.
கடைசியாக ராஜமௌலி. நிஜமாகவே மனிதர் மிரட்டியிருக்கிறார். ஊகிக்கக்கூடிய திரைக்கதைதான் என்றாலும் பிரம்மாண்டத்திற்கு தொழில்நுட்பங்களை மட்டும் நம்பியிராமல் திரையில் காட்டியிருக்கும் அத்தனைக்கும் உயிரும் உணர்வும் ஊட்டியிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமும் ஒரு ஓவியம் போல தீட்டியிருக்கிறார். போர்க்காட்சி, பதவியேற்பு விழா, கோட்டை, காடு, மலை என ஒவ்வொன்றிற்கும் செலவழித்த கற்பனையில் கொஞ்சம் கதையின் உள்ளடக்கத்தில் செலவழித்திருக்கலாம்.

No comments:

Post a Comment