சமீபத்தில் எனக்குள் பல விவாதங்களை எழுப்பியிருக்கும் திரைப்படம். நான் பல விஷயங்களை அறிவியல், வரலாறு சார்ந்து அணுகியிருக்கிறேன்; சமீப காலமாக உளவியல் சார்ந்தும் அணுக முயன்று கொண்டிருக்கிறேன். தத்துவங்கள் சார்ந்து நான் அணுகியதில்லை. நான் எழுத நினைத்து முயன்று கொண்டிருக்கும் 'நிலையில்லாக் கோட்பாடு'கூட இதுபோன்ற ஒரு அணுகுமுறைதான்.
இடதுசாரி, வலதுசாரி, நவீனத்துவம், பின்-நவீனத்துவம் பற்றி ஆழ்ந்த வாசிப்போ, பார்வையோ, புரிதலோ எனக்குக் கிடையாது. ஆனால் இதுகுறித்த பொதுவான பார்வையும், சார்பும் எனக்கு இருக்கிறது.
நான், எனக்கு என்கிற வார்த்தைகளை இங்கு உபயோகிக்கவே பதற்றமாக இருக்கிறது. விஷய ஞானம் உள்ள பலரே உபயோகிக்கத் தயங்கும் வார்த்தைகள இவை. என்னுடைய அனுபவம் குறித்துப் பேசுவதால் மன்னித்துக் கொள்ளவும்.
பின்-நவீனத்துவம் குறித்த எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் தளம் ஒன்றுகூடல் நிகழ்விற்குச் சென்றிருந்தேன். தனிப்பட்ட பார்வைகள், சார்புகள் எப்படிச் சமூக சிந்தனைகளாக மாறுகின்றன என்பதை ஒவ்வொருவரின் விளக்கங்களின் மூலம் புரிந்து கொண்டேன்.
டார்வினின் பரிணாமக் கோட்பாட்டிலிருந்து துவங்கி ஃப்ராய்டின் உளவியல் பகுப்பாய்வு, பின்-நவீனத்துவத்தில் Immanuel Kant-ன் பங்கு, Ronald Barthes-ன் Death of the author என்று கடைசியாக Ship of Theseus திரைப்படம் வரை அலசினார்கள். இதில் Structuralism Vs Post-Structuralism , நவீனத்துவம் Vs பின்-நவீனத்துவம் குறித்த விளக்கங்கள், கம்யூனிஸ்ட்கள் ஏன் பின்-நவீனத்துவத்தை எதிர்க்கிறார்கள் என விவாதம் நீண்டது.
நான் எப்போதும் அறிவியல் சார்ந்தே விஷயங்களை அணுகிப் பழகிவிட்டதால் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையை உள்ளே இழுத்துவிட்டேன். எல்லா கருத்தியல்களும், தத்துவங்களும் reference சார்ந்தது என்கிற ரீதியில் சொன்னேன். சார்பியல் கொள்கையின்படி இந்த reference space-time சார்ந்தது எனலாம். Extended String Theory எல்லாம் வந்துவிட்டதால் இன்னும் பல பரிமாணங்களும் சேரலாம்.
சென்ற வருடம் கமல் ஹாசன் ஹார்வர்டில் ஆற்றிய உரையை இதற்கு மேற்கோள் காட்டினேன். Ism-கள் எந்த ஒரு பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வல்ல; எல்லாமே Work in Progressதான் என்பது அவரது வாதம். கருத்துச் சுதந்திரம் என்ற தலைப்பில் பேசிய அவர் ஜனநாயகத்தில் கருத்துச் சுதந்திரற்கான இடம் பற்றிப் பேசுகிறார். எனது வாதமும் இதுவே.
எல்லா கருத்தியல்களும்,சார்பும் கால-வெளி சார்ந்து இருக்கும்போது எல்லோருக்குமான பொதுவான ஒரு கருத்தியலை, சார்பை முன்வைத்துப் பேசுவதுவரை சரி. ஆனால் அதற்காக ஆயுதப் போராட்டத்தினால் மனித உயிர்களைக் கொல்வது வரலாற்றுப் பிழையாக முடிந்துவிடும் என்பது எனது ஐயம். கம்யூனிஸத்தின்மீது எனக்கு நல்ல அபிப்ராயம் இருக்கிறது என்றாலும் அது முன்வைக்கும் ஆயுதப் போராட்டத்தை நான் ஏற்றதில்லை. எந்தவொரு கருத்தியலும் Process of evolution என்பது எனது நிலைப்பாடு.
ஸ்டீஃபன் ஹாகிங்கின் The Grand Design நூலில் ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லியிருப்பார். ஒரு கோள வடிவ கண்ணாடிக் குவளையில் இருக்கும் தங்கமீன், கண்ணாடிக்கு வெளியே இருக்கும் ஔிவலகல் மற்றும் ஔிமுறிவு அடைந்த இந்த பிரபஞ்சம் குறித்து தனது பார்வையில் ஒரு சமன்பாட்டைத் தருவித்தால் அது சரியானதுதானா என்று விளக்கியிருப்பார்.
நியூட்டனின் விதிகளோடு நின்றிருந்த அறிவியல் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கைக்குப் பிறகு தனது பார்வையை வேறுமாதிரி மாற்றிக் கொண்டது. அந்தப் பார்வையை குவாண்டம் அறிவியலின் வருகை தலைகீழாய்த் திருப்பிப் போட்டது. நவீன கம்ப்யூட்டர்களின் பைனரி கணக்கீட்டு முறையும் குவாண்டம் இயக்கவியலின் வருகையால் 0 1 என்பதைக் கடந்து குவாண்டம் சூப்பர் பொசிஷன் என்பதைக் கணக்கில் கொண்டு சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கியுள்ளதும் இப்படியான ஒன்றுதான். கமல் அடிக்கடி குறிப்பிடும் Grey region இதுதான்.
இந்தப் பிரபஞ்சம் குறித்த விஞ்ஞானிகளின் இன்றைய தேடலான Grand Unified Theory (GUT) எப்படியிருக்கும் என்பதை ஹாகிங் இவ்வாறு விளக்குறார். பிரபஞ்சத்திற்கான ஒற்றைக் கோட்பாடு என்பது ஒரே ஒரு கோட்பாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை; மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட கோட்பாடுகளின் கலவையாக ஒன்றுக்கொன்று ஏதாவதொரு வகையில் தொடர்புடையதாக இருக்கலாம் என்கிறார். சமூகவியல் தத்துவங்களுக்கும் இது பொருந்தும். பின்-நவீனத்தின் வருகையையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன்.
எல்லோரும் பேச மறந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நபரை Ship of Theseus திரைப்படத்தில் சொல்லியிருப்பார்கள். கிரேக்க தத்துவ அறிஞர் பிளாட்டோவின் குகை மனிதன் தத்துவத்தோடு முடிகிறது படம். பிளாட்டோவின் குகை மனிதனுக்கும் ஹாகிங்கின் தங்க மீனுக்கும் ஒரு தொடர்பிருக்க வேண்டும். அது பரிணாமக் கோட்பாட்டை பின்-நவீனத்திலிருந்து வேறு தளத்திற்கு எடுத்துச் செல்லும்.
No comments:
Post a Comment