வாழ்க்கையில் சில wish list எனக்கு உண்டு. அவற்றில் தள்ளிப் போய்க்கொண்டே இருந்த-இருக்கும் விஷயங்கள் இருக்கின்றன. வருடக் கணக்கில் தள்ளிப்போய்க் கொண்டிருந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு முள்ளும் மலரும் பார்த்தேன். இன்று பாலுமகேந்திராவின் 'வீடு' திரைப்படத்தைப் பார்த்தேன்.
கலைஞனுக்கு நுண்ணுணர்வு அவசியம் என்று பாலுமகேந்திரா ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். இது அறிவியலும்கூட. கேமரா, ஒலிப்பதிவு சாதனங்களாக இருக்கட்டும்; ஔிபரப்பு, ஒலிபரப்பு சாதனங்களாக இருக்கட்டும்... துல்லியத்தன்மையை நோக்கியே நமது தொழில்நுட்பங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
இப்போது சினிமா எடுக்க கிளம்பிவிட்ட பெரும்பாலானோரும் இந்தத் தொழில்நுட்பங்களை அதிகம் நம்ப ஆரம்பித்துவிட்டனர். இப்போதைய காதல்கதைகளில் நுண்ணுணர்வைக் காண்பிக்கிறேன் என்று ஹீரோயினை உதட்டைச் சுளிக்கவைப்பது, ஐஸ்க்ரீம் தின்ன வைப்பது, தலைமுடி கோதவைப்பது, கண்ணைச் சிமிட்ட வைப்பது என்று இதையே செய்யச்சொல்லி க்ளோஸ்-அப் ஷாட் வைத்து ஸ்லோ மோஷனில் காண்பித்து அழகியல் என்று திரைப்படத்தின் இருபது நிமிடத்தைக் காலி செய்துவிடுகிறார்கள்.
கலைஞனின் நுண்ணுணர்வு என்பது ஒரு விஷயத்தை உட்கிரகித்து அதை கலையில் கொண்டுவருவது. இதற்கு நமது ஐம்புலன்களின் resolution அதிகமாக இருக்க வேண்டும்; sensitivity சரியான அளவில் calibrate செய்யப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக, resolution மற்றும் definition போன்றவற்றை தவறாகப் புரிந்துகொண்டு டிஜிட்டல் கேமராக்களில் ஃபில்டர்களைப் பயன்படுத்தி ஔிப்பதிவு செய்தவதாகட்டும்; DI கரெக்ஷன்களின் மூலமாக பளிங்குபோல் பாலிஷ் போட்டு காண்பிப்பதாகட்டும்; அழகியலை மழுங்கடிக்கவே செய்யும். செல்ஃபோன் கேமராக்களில் எக்கச்சக்க ஃபில்டர்களைப் போட்டு அழகு என்ற பெயரில் மூக்கு-முழி காணாமல் போவதைப்போல.
வீடு திரைப்படம் நுண்ணுர்வுமிக்க கலைஞர்களது நுண்ணுணர்வுகளின் பேக்கேஜ். சாதாரணமாக ஒரு வீடு கட்டும் கதைதான். மிகையில்லாமல் ஒரு கதையை நகர்த்த முடியும் என்பதற்கான சான்று. பின்னணி இசை இளையராஜாவின் how to name it ஆல்பத்திலிருந்து எடுத்து கோர்க்கப்பட்டிருக்கிறது என்று வாசித்தேன். கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.
மனித வாழ்க்கையில் சினிமாத்தனங்கள் நுழைந்துவிட்ட காலத்தில் இப்படி ஒரு படத்தைப் பார்ப்பதே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பங்களே கலைஞனின் வேலையைச் செய்துவிடும் என்று நம்பப்பட்டுவரும் இந்தக் காலத்தில் திரைக்கதை, ஔிப்பதிவு, இசை என எல்லா துறைகளிலும் ஓர் உதாரணமாக சினிமாவின் ஹெர்பேரியத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய திரைப்படம் இது.
No comments:
Post a Comment