அதென்ன நுண்ணுணர்வு? சற்று விளக்கலாமே என்று நண்பர் கேட்டார். வண்ணதாசன் புத்தகங்களை வாசித்தால் சரியாகப் புரிந்துகொள்ளலாம் என்பதைவிட உணர்ந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
வண்ணதாசனின் 'ஞாபகம்' என்ற சிறுகதையை இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்கிறேன். திருநெல்வேலியில் ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலைபார்க்கும் பெண் ஒருவர் டிபன் பாக்ஸை மறந்து அலுவலகத்திலேயே வைத்துவிடுகிறார். வீட்டுக்கு வரும்வழியில் எந்தெந்த சந்தர்ப்பங்களில் அவருக்கு டிபன் பாக்ஸ் குறித்த ஞாபகம் வரும் என்பதுதான் கதை. சாதாரணமாக நம் வாழ்க்கையில் எப்போதோ நடக்கக் கூடிய விஷயம்தான். டிபன் பாக்ஸை வைத்துவிட்டு வந்ததால் மறுநாள் சாப்பாட்டை பார்சலில் கட்டிக்கொண்டு வந்துவிடலாம்தான்; ஆனால் ஏதேதோ சில காரணங்கள் உறுத்தவே எடுத்துவர மீண்டும் ஆபிஸ் திரும்பி அந்த டிபன் பாக்ஸை எடுப்பது வரையிலான அவரதுமன ஓட்டங்கள்தான் கதை.
நாமும் இதுபோன்ற நிகழ்வுகளைக் கடந்து வந்திருப்போம்; ஆனால் அதை எப்படி நுண்ணுணர்வோடு பதிவு செய்கிறோம் என்பதுதான் நமக்கும் கலைஞனுக்குமுள்ள வித்தியாசம்.
இதுபோல வண்ணதாசனின் பல எழுத்துகளை உதாரணம் சொல்லலாம். முன்பொருமுறை அவரைப் பற்றி எழுதும்போதுகூட சொல்லியிருந்தேன். ஒரு நாள் அவரோடு இருந்து எப்படி அவர் எல்லா விசயங்களையும் கவனிக்கிறார் என்று பார்க்க வேண்டுமென. இன்னொரு உதாரணம் ஒன்றை வேறொரு கதையில் சொல்லியிருப்பார். 'ஒருகிண்ணத்தில் கடுகைப் போட்டு விரல்நுனிகளால் அந்தக் கடுகை உருட்டுவது போல' என்று. அவரது எழுத்துகளை வாசிக்கும்போது எனக்கு அப்படியான ஓர் உணர்வுதான் ஏற்படும்.
புத்தகங்கள் வாசிக்க நேரமில்லாதவர்கள் அவரது ஃபேஸ்புக் டைம்லைனிற்கு தினம் ஒருமுறையாவது சென்று வரலாம்.
https://www.facebook.com/vannadasansivasankaran.s
No comments:
Post a Comment